அமெரிக்கத் தேர்தல் நெறிமுறைகளின்படி, நவம்பர் 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். புதிய அதிபர் 2021-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 20-ம் தேதி பொறுப்பேற்க வேண்டும். இதற்கு முன்னதாக பொறுப்புகள் அனைத்தையும் புதிய அதிபரான ஜோ பைடனிடம் ஒப்படைத்தால் மட்டுமே, அரசின் நிதியை ஜோ பைடன் நாட்டுக்காகப் பயன்படுத்த முடியும். இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த டொனால்டு ட்ரம்ப், ஜோ பைடனுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து அமெரிக்காவில் அசாதாரண அரசியல் சூழலை உருவாக்கிவருகிறார்.
புதிய அதிபருக்கான பொறுப்புகளை முறைப்படி ஒப்படைக்க வேண்டிய அமெரிக்காவின் பொதுச் சேவைகள் நிர்வாகம், பொறுப்புகளை ஒப்படைக்க மறுத்துவந்தது. பொதுச் சேவை நிர்வாகத்தின் தலைவரான எமிலி மர்பி, ட்ரம்ப்பால் பதவியில் அமர்த்தப்பட்டவர் என்பதால், ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த ட்ரம்ப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, எமிலி மர்பி, ஜோ பைடனுக்குக் கடிதம் ஒன்றை எழுதிருக்கிறார். அதில் புதிய அதிபருக்கான பொறுப்புகளை வழங்க எமிலி சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து டொனால்டு ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில், ``அரசாங்கத்தின் பொதுச் சேவை நிர்வாகம் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய நேரம் இது" என்று ட்வீட் செய்திருக்கிறார். இருப்பினும் அதே ட்வீட்டில், ``எங்கள் வழக்கு வலுவாகத் தொடர்கிறது. நாங்கள் மோதலைத் தொடர்வோம். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன்!" என்று தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை என்பது போன்ற கருத்துகளையும் பகிர்ந்திருக்கிறார் ட்ரம்ப்.
ஜோ பைடன் இனி என்னவெல்லாம் செய்ய முடியும்?
ஜோ பைடனின் குழுவுக்கு தற்போது நிதி, அலுவலக இடம் மற்றும் கூட்டாட்சி அதிகாரிகளைச் சந்திக்கும் திறன் உள்ளிட்ட அதிகாரங்கள் கிடைக்கும். நிர்வாகச் செலவுகளுக்காக 36 லட்சம் டாலர், புதிதாகப் பொறுப்பேற்றது தொடர்பாக நடைபெறவிருக்கும் நிகழ்வுகளுக்கென்று 10 லட்சம் டாலர் வரை ஜோ பைடன் செலவு செய்யலாம்.
ஜோ பைடன் அதிபராக ஊடகங்களுக்கு அதிகாரபூர்வ பேட்டியளிக்க முடியும். ஜோ பைடன், கமலா ஹாரிஸ் அணிக்குத் தேவையான அதிகாரபூர்வ தகவல்களை இனி அதிகாரிகள் அளிப்பார்கள்.
ஆட்சி அதிகாரத்தில் ஜோ பைடனின் அணி குறுக்கிடலாம். கொரோனா வைரஸ் தொடர்பாக இனி சுகாதார அணியுடன் ஜோ பைடன் தொடர்புகொண்டு பேசலாம். அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இனி ஜோ பைடன் கட்டுப்பாட்டில் இயங்கும்.
ஜோ பைடனின் குழுவில் அறிவிக்கப்பட்டவர்கள் யார், யார்?
முன்னதாக வெளியுறவுக் கொள்கை ஒன்றையும், பராக் ஒபாமா பதவிக்காலத்தில் இருந்த நிர்வாகிகள் அடங்கிய தேசியப் பாதுகாப்பு குழுவின் பட்டியலையும் வெளியிட்டார் ஜோ பைடன். இவை இரண்டும் ட்ரம்ப்பின் எழுச்சிக்கு முற்றுப்புள்ளிவைத்து, பாரம்பர்ய அமெரிக்க ராஜதந்திரத்துக்கு வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது.
தேசியப் பாதுகாப்புக் குழுவின் பட்டியலில் முதன்மையாக, முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி ஆன்டனி பிளிங்கன் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். காலநிலைப் பிரச்னைகளுக்கான ஹெவிவெயிட் பாயின்ட்மேனாகவும் ஒபாமா பதவிக் காலத்தின் உயர் தூதரான ஜான் கெர்ரியின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார் ஜோ பைடன்.
டொனால்டு ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகைக்கு மாறாக, ஜோ பைடன் நன்கு அறிந்த தொழில் வல்லுநர்களுக்கு வாய்ப்பு அளித்திருப்பதாகத் தேர்வுகள் காட்டுகின்றன. வெள்ளை மாளிகையில் ஜோ பைடனின் அதிகாரிகள் தேர்வு பாரம்பர்யப் பின்னணியைக்கொண்டது என்று கூறப்ப்டுகிறது.
source https://www.vikatan.com/news/general-news/donald-trump-leaves-way-for-biden
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக