Ad

வியாழன், 26 நவம்பர், 2020

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி... அலோபதி மருத்துவர்களின் எதிர்ப்பு ஏன்?

உலகம் முழுவதும் அதிகமாகப் பின்பற்றப்பட்டு வரும் அலோபதி மருத்துவத்துக்கும் அந்தந்த நாடுகளின் பாரம்பர்ய மருத்துவங்களுக்கும் எப்போதும் பனிப்போர் நிகழ்ந்து கொண்டேதானிக்கும். அந்த வகையில் மத்திய அரசின் புதிய அறிவிக்கை ஒன்று அலோபதி மருத்துவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ayurveda

சில தினங்களுக்கு முன்பு மத்திய இந்திய மருத்துவ கவுன்சில் (CCIM) ஒரு கெஸட் அறிவிக்கையை வெளியிட்டது. அதில் முதுநிலை ஆயுர்வேத மருத்துவம் படித்தவர்கள் பொது மருத்துவம், முடநீக்கியல், கண், காது-மூக்கு-தொண்டை, பல் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் அறுவைசிகிச்சை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முதுநிலை ஆயுர்வேதப் படிப்பை முடித்தவர்கள் அதற்குத் தேவையான பயிற்சிகளைப் பெறவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாகப் பேசியிருந்த கவுன்சிலின் தலைவர், ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் அறுவைசிகிச்சைகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. அதைச் சட்டபூர்வமாக அறிவிக்கவே இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு அனுமதிக்கக் கூடாது என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Senior Ayurveda practitioner R.balamurugan

இதுபற்றி மூத்த ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்:

``ஆயுர்வேத படிப்பான BAMS-ன் விரிவாக்கம் Bachelor of Ayurvedha Medicine and surgery என்பதுதான். அதிலேயே அறுவைசிகிச்சை உள்ளது. எப்படி அலோபதியில் எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் அறுவைசிகிச்சைகள் செய்யமாட்டார்களோ அதே போன்று ஆயுர்வேத மருத்துவத்திலும் இளநிலை படிப்பு படித்தவர்கள் அறுவைசிகிச்சை செய்ய அனுமதிக்கப்படவில்லை. முதுநிலை ஆயுர்வேதம் படித்தவர்கள்தான் அறுவைசிகிச்சை செய்ய அனுமதி உள்ளது.

என்ன தவறு?

ஆயுர்வேத சிகிச்சையில் அறுவைசிகிச்சை என்பது ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான். கர்நாடகம், வட இந்தியாவில் கூட மயக்க மருந்து மருத்துவரின் உதவியுடன் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்கின்றனர். தமிழ்நாட்டில் ஆசனவாய் பிரச்னைகளுக்கான சிறிய அறுவைசிகிச்சைகள், காயங்களுக்கான அறுவைசிகிச்சைகள், எலும்புகளை செட் செய்வது போன்ற சிறிய அறுவை சிகிச்சைகள் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அறுவைசிகிச்சை அரங்குகளில் செய்யப்படுகின்றன. கண்புரை அறுவை சிகிச்சைகள்கூட செய்யப்படுகின்றன. இவை அனைத்துமே சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டவைதான்.

சிகிச்சையின்போது அலோபதியில் பயன்படுத்தாத ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துவோம். தேவைப்பட்டால் அலோபதி மருந்துகளையும் பயன்படுத்துவோம். உதாரணமாக, எங்கள் மருத்துவத்தின்படி, சஞ்சீவி மூலிகையைக் கொடுத்தால் மயக்கமடைய வைக்கலாம். இப்போது அந்த மூலிகை கிடைப்பதில்லை. அதற்குப் பதில் மயக்க மருந்துகள் கிடைக்கின்றன. அதனால் அவற்றைப் பயன்படுத்துகிறோம். எது கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கிறோம்.

ஆயுர்வேத மருத்துவரான சுஷ்ருதர்தான் இந்தியாவில் அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவருடைய கொள்கைகளை அடிப்படையாக வைத்துதான் அறுவை சிகிச்சையை மேம்படுத்தியிருக்கின்றனர். அவர் அறுவைசிகிச்சை செய்வது போன்ற படம் அனைத்து அலோபதி மருத்துவக் கல்லூரிகளிலும் வைக்கப்பட்டிருக்கும். அவர் எழுதிய புத்தகத்தைத்தான் நாங்கள் பாடத்திட்டத்தில் படிக்கிறோம்.

Surgery

ஆயுர்வேத மருத்துவமனைகளில் அலோபதி மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் அறுவைசிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்த அறிவிக்கையின்படி, ஆயுர்வேத மருத்துவர்கள் தனியாகவே அறுவைசிகிச்சை செய்யலாம் என்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

எலும்பை செட் செய்தல், கண், காது - மூக்கு-தொண்டை, பொது அறுவைசிகிச்சை என ஒவ்வொரு துறையாக உருவாக்கிக்கொண்டு வருகிறோம். எங்கள் மருத்துவமும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. அதன் வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சிதான் எதிர்ப்புகள்.

ஸ்டெதாஸ்கோப் முதற்கொண்டு அனைத்து மருத்துவக் கருவிகளும் அலோபதி மருத்துவத்துக்கு மட்டுமே சொந்தமானவை என்ற எண்ணம் இருக்கிறது. கருவிகள் எல்லாம் இயற்பியல் சார்ந்த விஷயம். அவை அனைவருக்கும் பொதுவானவை" என்கிறார்.

ஆயுர்வேத மருத்துவத்தில் அறுவைசிகிச்சை என்பதை எதிர்ப்பது ஏன் என்று இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் (ஐ.எம்.ஏ) தேசியத் தலைவர் (தேர்வு) டாக்டர் ஜெயலாலிடம் கேட்டோம்.

``இந்த விவகாரத்தை எளிமையாகப் புரிந்துகொள்வோம். ஆட்டோ, விமானம், பேருந்து அனைத்தையும் ஓட்டுவது ஓட்டுநர்கள்தாம். அதனால் அனைவருமே ஒன்றாகிவிட முடியுமா? எல்லாரும் எல்லா வாகனத்தையும் ஓட்டலாம் என்று சொல்ல முடியுமா?

ஐ.எம்.ஏ தேசியத் தலைவர் மருத்துவர் ஜெயலால்

அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும் மயக்க மருந்து கொடுப்பதற்கு அலோபதி மருத்துவம்தான் பயன்படுகிறது. அலோபதி மருத்துவத்தில் தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இப்படி ஒரு கான்செப்ட்டே அவர்கள் மருத்துவத்தில் கிடையாது. அந்தந்த மருத்துவ முறையில் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

ஆயுர்வேதத்தில் இருந்துகொண்டு அலோபதி மருத்துவத்தைப் பின்பற்றி மருத்துவத்தை கலப்படம் செய்யக்கூடாது. எம்.எஸ் படித்த அறுவைசிகிச்சை படித்த மருத்துவராக இருந்தால்கூட மயக்க மருந்து அவர் கொடுக்க முடியாது. மயக்க மருந்து மருத்துவர்கள்தான் அதைச் செய்ய வேண்டும். அப்படியிருக்கும்போது மற்றொரு மருத்துவ முறையைப் பின்பற்றுபவர்கள் இதை எப்படிக் கையாள முடியும்?

அலோபதியில் படித்து, பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றாலுமே, சிகிச்சை சரியில்லை என்று கூறி எத்தனை வழக்குகள் நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடுக்கப்படுகின்றன. தற்போது இதுபோன்று மருத்துவத்தில் கலப்படம் நடைபெற்றால், ஏற்படப் போகும் ஆபத்துகளை வரையறுக்கவே முடியாது.

அலோபதி மருத்துவ முறைகள் மற்றும் மருத்துவர்களின் உதவிகொண்டு அறுவை சிகிச்சை செய்வதற்கு எதற்கு இரண்டு வேறு மருத்துவ முறைகள் இருக்க வேண்டும். அனைவருமே அலோபதி மருத்துவராகவே ஆகிவிட வேண்டியதுதானே? மருத்துவத்தில் இதுபோன்ற கிச்சடிகள் இடம்பெற்றால், மருத்துவ சுற்றுலாவுக்காக இந்தியாவை நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயம் குறையும். மருத்துவத்தில் இந்தியாவின் தரம் சர்வதேச அளவில் சரிவைச் சந்திக்கும்.

Doctor

Also Read: `நிலவேம்புக் குடிநீரை அலோபதி மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டாம்' - மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

மத்திய அரசின் இந்த அறிவிப்பை திரும்பப் பெறக்கூறி அலோபதி மருத்துவர்கள் இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளோம். போராட்டத்துக்கான தேதி டிசம்பர் 2 என்று தற்காலிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 28-ம் தேதி இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று, தேதி இறுதி செய்யப்படும்" என்றார் அவர்.

இரண்டு மருத்துவ முறைகளுக்கான பிரச்னையாக மட்டும் இதைப் பார்க்க முடியாது. காரணம், இதில் பிரச்னை தொடங்கும் இடமும் முடியும் இடமும் அப்பாவி நோயாளிகளாகத்தான் இருப்பார்கள். இந்தப் பிரச்னைக்கு சரியான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/allopathy-doctors-opposing-govts-order-which-allows-ayurveda-doctors-to-perform-surgery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக