தீபாவளி நெருங்குவதையொட்டி ஜவுளிக்கடைகளுக்குள் கூட்டம் அலைமோதிவருகின்றன. விடுமுறை தினமான நேற்று (ஞாயிற்றுகிழமை) வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னை வண்ணாரப்பேட்டையில் தீபாவளிக்காக உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர். சிசிடிவி கேமரா மூலமாகவும் மக்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் உள்ள பிரபல ஐவுளிக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் கடை ஊழியர்கள் வாடிக்கையாளர்களை சிசிடிவி மூலம் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 49 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சேலை அணிந்திருந்தார். அவர், மற்றவர்களை விட மெதுவாக கடைக்குள் நடந்துச் சென்றார். அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள், அந்தப் பெண்ணை சிறிது நேரம் சிசிடிவி மூலம் கண்காணித்தனர்.
இதையடுத்து அந்தப் பெண் கடையிலிருந்த டி சர்ட்களையும் ஷார்ட்ஸ்களையும் திருடி காலின் நடுவில் வைப்பதை ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்தப் பெண் குறித்த தகவல் பெண் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்தப் பெண் கடையின் வெளியில் வர மெதுவாக நடந்துச் சென்றுகொண்டிருந்தார். அதைப்பார்த்த பெண் ஊழியர்கள், `மேடம் ஏன் இப்படி மெதுவாக நடக்கிறீர்கள்?' என்று அந்தப் பெண்ணிடம் கேட்டனர். அதற்கு அந்தப் பெண், `கால் வலி, அதனால்தான் மெதுவாக நடக்கிறேன்' என்று கூலாகப் பதிலளித்துள்ளார். அதைக்கேட்ட பெண் ஊழியர்கள், `அப்படியா, இங்கே வந்து அமருங்கள். உங்களுக்குத் என்ன தேவையோ, அதை நாங்களே எடுத்துக் கொண்டு வருகிறோம்’ என்று கூறி தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அதற்கு அந்தப் பெண் பரவாயில்லை என்று கூறியபடி அங்கிருந்து புறப்பட தயாராகியுள்ளார்.
அதைப்பார்த்த பெண் ஊழியர்கள், `மேடம், நீங்கள் சேலைக்குள் டி சர்ட், ஷார்ட்ஸ்களைத் திருடி வைத்திருப்பதை சிசிடிவி மூலம் பார்த்துவிட்டோம். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். இல்லையென்றால் இங்கு வைத்து சோதனை செய்யதால் உங்களுக்குத்தான் அவமானம் என்று அதிரடியாக கூறியுள்ளனர். அதைக்கேட்டு அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். பிறகு பெண் ஊழியர்களுடன் அவர் சென்றுள்ளார். அங்கு அவரை சோதித்தபோது 6 டி சர்ட்கள், 3 ஷார்ட்ஸ்களை கால்களின் நடுவில் அவர் வைத்திருந்தார். அதை பறிமுதல் செய்த பெண் ஊழியர்கள், உடனடியாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் அவரின் பெயர் நிர்மலா (49) என்றும் ஆந்திர மாநிலம், சத்தியவேடு, நேதாஜி நகர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து நிர்மலாவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,``கடையின் சூப்பர்வைஸர் ரவிக்குமார் அளித்த புகாரின்பேரில் நிர்மலாவைக் கைது செய்துள்ளோம். அவரிடமிருந்து 2,550 ரூபாய் மதிப்புள்ள டி சர்ட் மற்றும் ஷார்ட்ஸ்களைப் பறிமுதல் செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட நிர்மலாவுக்கு கணவர் இல்லை. மகளுடன் வசித்து வருகிறார். நிர்மலாவின் மகள், படித்து விட்டு வேலைதேடிக் கொண்டிருக்கிறார்.
Also Read: சென்னை: `திருட்டு செல்போன்கள்... வேலை தேடுபவர்கள் டார்க்கெட்' - தடம் மாறிய இன்ஜினீயரின் வாழ்க்கை!
தீபாவளி என்பதால் டிரஸ் எடுக்க வருவதைப் போல பந்தாவாக சேலை அணிந்துக் கொண்டு ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வருவார். பிறகு கூட்டம் அதிகமாக உள்ள ஜவுளிக்கடையை அவர் தேர்வு செய்வார். அந்தக் கடைக்குள் நுழையும் நிர்மலா, துணிகளைத் தேர்வு செய்வது போல நடிப்பார். பிறகு ஊழியர்கள் பார்க்காத நேரத்தில் துணிகளை எடுத்து கால்களின் நடுவில் சேலைக்குள் மறைத்து வைத்துக் கொள்வார். பிறகு, மெதுவாக நடந்து கடையிலிருந்து வெளியில் வந்துவிடுவார். இவ்வாறு திருடும் துணிகளை ஆந்திராவில் அவர் விற்றுவிடுவார். ஏற்கெனவே தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் இதைப்போல துணிகளைத் திருடி நிர்மலா சிக்கியுள்ளார். அப்போது கடை ஊழியர்கள் காலில் விழுந்து நிர்மலா மன்னிப்பு கேட்டதால் காவல்துறையினரிடம் அவரை ஒப்படைக்கவில்லை ஆனால் இந்தத் தடவை எங்களிடம் சிக்கிக் கொண்டார்" என்றனர்.
தீபாவளி நெருங்குவதையொட்டி ஆந்திராவிலிருந்து சென்னைக்கு துணிகளைத் திருட வந்து சிசிடிவியால் நிர்மலா சிக்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-andhra-woman-over-deepavali-season-theft
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக