``வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யவும், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கும் அளிக்கப்பட்டு வந்த இலவச சேவை இப்போது முடிவடைய உள்ளது. நவம்பர் 1 முதல், வங்கியில் இந்த இரண்டு சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். வங்கி விதிகளில் மாற்றங்கள் செய்த பிறகு, வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்" என பேங்க் ஆஃப் பரோடா தெரிவித்தது கடந்த வாரம் சர்சசைக்குள்ளானது. வங்கியின் இந்த முடிவுக்கு அதன் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, சில நாள்கள் கழித்து டெபாசிட், வித்டிரா கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது பேங்க் ஆஃப் பரோடா.
இருப்பினும் இதே விதியை பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB), ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) மற்றும் சென்ட்ரல் பேங்க் (Central Bank) ஆகியவையும் விரைவில் கொண்டுவர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிக கட்டணங்கள்!
``கேஷ் கிரெடிட் வங்கிக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும் ஓவர் டிராஃப்ட் கணக்கு வைத்திருப்பவர் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இதைவிட அதிக பணம் டெபாசிட் செய்ய வங்கிகள் கட்டணம் வசூலிக்கும். அதாவது, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்ய, ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கு ஒரு ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும். முன்பு, 10 முதல் 10,000 ரூபாய் வரையில் பெற்றுவந்த நிலையில், புதிய கட்டண அறிவிப்பில் இது 50 முதல் 20,000 ரூபாய் வரையில் உயர்த்தப்படுகிறது.
கடன் வரம்பு, நடப்புக் கணக்கு மற்றும் ஓவர் டிராஃப்ட் கணக்குகளில் இருந்து ஒரு மாதத்துக்கு மூன்று முறை பணம் திரும்பப் பெறப்பட்டால், கட்டணம் வசூலிக்கப்படாது. நான்காவது முறையாகத் திரும்பப் பெறும்போது, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் வசூலிக்கப்படும்" என பேங்க் ஆஃப் பரோடா சொன்னதுதான் சர்ச்சையாக வெடித்தது.
அதே போல ``சேமிப்பு வங்கிக் கணக்கில் மூன்று முறை வரை டெபாசிட் செய்வது கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக இருக்கும். நான்காவது முறையாக, ஒவ்வொரு முறையும் நீங்கள் 40 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். திரும்பப் பெறுவதற்கு, ஒவ்வொரு கணக்கிலும் மாதத்துக்கு மூன்று பரிவர்த்தனைகள் இலவசமாக இருக்கும். நான்காவது பரிவர்த்தனையில், வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்" என பேங்க் ஆஃப் பரோடா சொன்னதை அதன் வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி, அனைத்து தரப்பு மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
Also Read: இண்டஸ்இண்ட் வங்கியை வாங்கவுள்ளதா கோட்டக் மஹிந்திரா வங்கி... பின்னணியில் நடப்பது என்ன?
இதுகுறித்து அதன் வங்கி வட்டாரத்தில் பேசியபோது, ``மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பாலும், நிதி அமைச்சகத்தின் உத்தரவாலும் பேங்க் ஆஃப் பரோடாவின் புதிய கட்டணங்கள், பரிமாற்ற எண்ணிக்கை அனைத்தும் திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் சேமிப்புக் கணக்குகள், நடப்பு கணக்குகள், கேஷ் கிரெடிட் வங்கிக் கணக்கு மற்றும் ஓவர்டிராப் வங்கிக் கணக்கு ஆகியவற்றுக்குப் பேங்க் ஆஃப் பரோடா விதித்த கட்டணங்கள் பொருந்தாது. மேலும், அனைத்து கணக்குகளுக்கும் பழைய மாதாந்தர டெபாசிட் மற்றும் வித்டிராவல் எண்ணிக்கையே தொடரும்" என்பதைத் தெரிவித்தார்கள்.
மேலும், நிதியமைச்சகம், ``தனியார்துறை வங்கிகளைப் போலவே பொதுத்துறை வங்கிகளும் சேவைக் கட்டணங்களை அறிவிக்க உரிமை உண்டு. ஆனால், அறிவிக்கப்படும் கட்டணம் நியாயமானதாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். இதோடு, அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் கொரோனா பாதிப்புகள் குறையும் வரையில் வங்கி சேவை கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம்" என அறிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கியோ, தனியார் துறை வங்கியோ சேவைக்கான கட்டணத்தைப் பெற நினைப்பதில் தவறில்லை. கட்டணம் என்கிற பெயரில் கொள்ளை அடிப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது!
source https://www.vikatan.com/business/banking/why-bank-of-baroda-rolls-back-changes-in-deposits-and-withdrawals-charges
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக