Ad

திங்கள், 9 நவம்பர், 2020

`மக்காச்சோளத்தில் படைப்புழுவைக் கட்டுப்படுத்த புது முயற்சி!’ - திருவண்ணாமலை வேளாண் கல்லூரி அசத்தல்

திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரத்தை அடுத்துள்ள அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள வயல்வெளிமீது ஆளில்லா விமானத்தை (ஹெலிகேம்) பறக்கவிட்டுப் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து, பயன்களைக் கண்டறியும் பணியில் வேளாண் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஹெலிகேம் மூலம் புதிய முயற்சி

பெருமணம் என்ற கிராமத்தில் நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில், பயிர் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் பிரபாகர் தலைமை தாங்கினார். வேளாண் கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், பூச்சியியல் துறைத்தலைவர் சாத்தையா, தொலைவுணர்வு தொழில்நுட்பத்துறைத் தலைவர் பழநிவேலன், பூச்சியியல் துறை பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துரைசாமி, திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முருகன் உட்பட விவசாயிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த ஆராய்ச்சி குறித்து பூச்சியில் துறை பேராசிரியர்களிடம் கேட்டபோது, ``மக்காச் சோளத்தில் படைப்புழு தாக்குதல் பெரும் பிரச்னையாக இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்துவதற்காகப் புதிய தொழில்நுட்பமான ஆளில்லா விமானம் மூலம் மருந்து தெளித்து ஆராய்ச்சி செய்துவருகிறோம்.

ஹெலிகேம் மூலம் புதிய முயற்சி

இதன்மூலம், பூச்சிக் கட்டுப்பாடு திறன், எஞ்சிய நஞ்சுத் தன்மை, புழுக்கள் இறப்பு விகிதம், நன்மை தரும் பூச்சிகள் எண்ணிக்கை போன்றவையின் சாதங்களைக் கண்டறியப் பார்க்கிறோம். இப்படியான ஆராய்ச்சி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பது இதுவே முதல் முறை. இந்த ஆராய்ச்சியில் விவசாயிகளின் வழக்கமான கைத்தெளிப்பான், மின் நுண்துகள் தெளிப்பானும் ஒப்பிடப்பட்டு பூச்சிக் கட்டுப்பாடு முறைகளைக் கண்டுப்பிடிக்கத் திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/tiruvannamalai-agri-college-finds-new-solution-to-control-worms-in-maize-crop

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக