Ad

வியாழன், 26 நவம்பர், 2020

`அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்!' - தேர்தலில் போட்டியிடும் கோவை தொழில் முனைவோர்

கோவை மாவட்டத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு நிறுவனங்கள் உள்ளன. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். பம்ப் செட் மோட்டார், வெட் கிரைண்டர், டெக்ஸ்டைல்ஸ், பவுண்டரி குறு, சிறு நிறுவனங்களின் இதயமாக கோவை உள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, அந்த குறு, சிறு நிறுவனங்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றன.

கோவை குறு சிறு நிறுவனங்கள்

Also Read: கோவை: களப் பணியாளர்களுக்கு சிறப்புக் காட்சி! - சர்ப்ரைஸ் கொடுத்த தியேட்டர்

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் கோவை குறு, சிறு நிறுவனங்களை மேலும் சரிவில் தள்ளியுள்ளது. இதனிடையே, அரசியல் கட்சிகள் தங்களது பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தொழில் முனைவோர் முடிவு செய்துள்ளனர்.

கோவை பம்ப் செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) தலைவர் மணிராஜ், “கோவை தொழில் நகரம். சொல்லப்போனால், சென்னையை விட இங்கு குறு, சிறு தொழில்கள் அதிகம். குறு, சிறு தொழில்களைப் பொறுத்தவரை, பல நிறுவனங்களில் முதலாளி, தொழிலாளி இரண்டுமே நாங்கள் தான். கொரோனாவால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். கொரோனா எமர்ஜென்ஸி கடன் இங்கு 80 சதவிகிதம் பேருக்கு கிடைக்கவில்லை.

மணிராஜ்

கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜனை ஆதரித்தோம். எங்களது கோரிக்கை எல்லாம் நிறைவேற்றுகிறோம் என்று அவர் உறுதியளித்தார். ஆனால், அவர்களின் கூட்டணியால் ஆட்சியை பிடிக்கவில்லை. நடராஜன் வெற்றி பெற்றாலும், எங்களது பிரச்னைகளை காது கொடுத்து கேட்பதில்லை.

பி.ஜே.பி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தான் வெற்றி பெற்றால், ஜாப் ஆர்டர் மீதான ஜி.எஸ்.டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து, 5 சதவிகிதமாக மாற்றுவோம் என்று கூறினார். அவரால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், ஆட்சியில் இருப்பது பி.ஜே.பி தான். ஜாப் ஆர்டர் ஜி.எஸ்.டி வரியை 12 சதவிகிதமாக தான் குறைத்துள்ளனர். அதிலும் நிறைய விதிமுறைகள் உள்ளன. எங்களது கோரிக்கைகளை கேட்டு, தீர்வு கொடுக்க நாதி இல்லை. அனைத்து அரசியல் கட்சிகள் மீதும் அதிருப்தியடைந்துவிட்டோம்.

கோவை குறு, சிறு நிறுவனங்கள்

எங்களில் ஒருவர் இருந்தால் தான், எங்களது பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியும். அதனால், கோப்மா சங்கம் மற்றும் குறு, சிறு தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் கலந்து பேசி, சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வலுவாக உள்ள இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, எங்கள் பலத்தை காட்ட முடிவு செய்துள்ளோம்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-msmes-to-contest-2021-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக