தங்களைப் பெற்று வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கே உணவளிக்கத் தயங்குகின்ற அல்லது கணக்குப் பார்க்கிற மனிதர்கள் நிறைந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பச்சைக் கிளிகளுக்கு உணவளித்து வருகிறது சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சுதர்சன் ஷா - வித்யா தம்பதி.
``மாலை 5 மணிக்கெல்லாம் எல்லாரும் அலாரம் வெச்சதைப்போல வந்துடுவாங்க அந்த நேரத்துக்கு வந்தீங்கன்னா படம் எடுக்கலாம்” என்று சுதர்சன் சொல்ல, மாலை 4 மணிக்கெல்லாம் அவர் வீட்டு மொட்டை மாடியில் ஆஜரானோம்... மாடியில் கிளிகளுக்கு உணவு வைப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்த பலகைகளே அவர்கள் இந்தப் பணியை எவ்வளவு ஈடுபாட்டுடன் செய்கிறார்கள் என்பதற்குச் சான்று. மணி 4:30-ஐ கடந்ததும் பரபரப்புடன் மாடியைச் சுத்தப்படுத்திவிட்டு, ஊற வைக்கப்பட்ட அரிசியை சுதர்சன் ஷாவும் நிலக்கடலையை அவரின் மனைவி வித்யாவும் சீரான இடைவெளியில் சின்ன சின்ன குவியலாகப் பரிமாறத் தொடங்கினர். ``அவங்க வர நேரமாகிருச்சு. நீங்க ஒரு ஓரமாக வந்து உட்கார்ந்துக்கோங்க சார். ஆள் இருந்தா அவங்க வர மாட்டாங்க” என்றபடி அவர்கள் நம்மை ஓரங்கட்ட... கூட்டமாக வந்து பசியாறத் தொடங்குகின்றன பச்சைக் கிளிகள்.
``இவங்களுக்கு உணவளிக்கிறதைப் பலரும் பாராட்டினாலும், சிலர் நாங்க பறவைகளோட இயல்பைக் கெடுக்கிறதாகச் சொல்றாங்க. இதெல்லாம் கேட்கிறதுக்கு நல்லாத்தான் சார் இருக்கும். ஆனா, எதார்த்தம் என்ன... `10 வருஷத்துக்கு முன்ன இருந்த மரங்கள் இப்போ இருக்கா? இவங்க எங்கே போய் இரை தேடுவாங்க? மரங்கள் அழிஞ்சதுக்கு யார் காரணம்னு பேசாதவங்க... அதைத் தடுக்காதவங்க, பறவைகளுக்கு உணவளிக்கிறபோது மட்டும் கருத்து சொல்றாங்க” என்று மனம் கொதிக்கும் சுதர்சன் ஷா, கிளிகளுக்கு உணவளிக்கத் தொடங்கிய கதையை விவரிக்க ஆரம்பித்தார்...
``அந்தக் காலத்துலயே எங்க தாத்தா சென்னையில பெரிய எலெக்ட்ரிக் கடை வெச்சிருந்தார். ரொம்ப வசதியான குடும்பம். ஆனா, காலப்போக்குல வசதி வாய்ப்புகள் படிப்படியா குறைஞ்சுதுன்னாலும் பெரியளவு கஷ்டமெல்லாம் கிடையாது. கடவுள் ஆசீர்வாதத்தால நாங்க நல்லபடியா இருக்கோம். இந்த வாழ்க்கையில நாம என்ன சம்பாதிச்சோம், என்ன சேர்த்து வெச்சோம்ங்கிறதைவிட நாம எத்தனை பேரை வாழ வெச்சோம்ங்கிறதுதான் ரொம்ப முக்கியம். எனக்கு சின்ன வயசிலிருந்தே பறவைகள்னா ரொம்ப இஷ்டம். 10 வருஷத்துக்கு முன்னால ஒருநாள் எங்க வீட்டு மொட்டை மாடியில ஒரு சில பச்சைக்கிளிகள் வந்து உட்கார்ந்தாங்க. நானும் அவங்களுக்கு எதார்த்தமா அரிசி வெச்சேன். அடுத்தடுத்த நாளும் அதே நேரத்துக்கு இரை தேடி எங்க வீட்டுக்கு அவங்க வர ஆரம்பிச்சாங்க. அப்போதான் அவங்க சூழல் எனக்குப் புரிஞ்சது. அதன் பிறகுதான் தினமும் காலையிலயும் சாயங்காலமும் அவங்களுக்கு இரை வைக்க ஆரம்பிச்சோம்.
வீட்டுக்கு வர்ற கிளிகளின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் அதிகரிக்க ஆரம்பிச்சது. பச்சைக் கிளிகள் மட்டுமல்ல அப்பப்போ வேறு பறவைகளும் வர்றதுண்டு. ஆனா, அவங்களோட எண்ணிக்கை ரொம்ப சொற்பம்தான். பச்சைக் கிளிகள்தான் அதிகம். இவங்களுக்கு நிலக்கடலையும் அரிசியும் உணவா கொடுக்குறோம். ஒரு நாளைக்கு 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரை செலவு ஆகும். எங்களுடைய பர்சனல் தேவைகளைக் குறைச்சுகிட்டு எங்களைத் தேடி வர்ற பறவைகளோட பசியாத்துறோம். அவங்க இங்க வந்து வயிறு நிறைய சாப்பிட்டுட்டு நிம்மதியா பறந்து போகும்போது எங்களுக்கு ஓர் ஆத்ம திருப்தி கிடைக்குது, நாங்க ஆசீர்வதிக்கப்பட்டவங்களா உணர்றோம்” என்று சுதர்சன் நிறுத்த... அவரின் மனைவி வித்யா தொடர்ந்தார்...
``கம்பு, கேழ்வரகு, சிறுதானியங்கள்னு ஆரம்பத்துல நிறைய உணவுகளைக் கொடுத்துப் பார்த்தோம். ஆனா, இவங்க அதையெல்லாம் பெருசா விரும்பி சாப்பிடலை. நிலக்கடலையும் ஊற வெச்ச அரிசியையும்தான் விரும்பி சாப்பிட்டாங்க. அதையே தினமும் கொடுக்க ஆரம்பிச்சுட்டோம். யாராவது ஓர் ஆள் வீட்ல இருந்துகிட்டே இருக்கணும்... காலையில சாப்பாடு வைக்க நாம 4 மணிக்கெல்லாம் எழுந்திருக்கணும். ஆனா, நாங்க இது எதையுமே கஷ்டமாவோ சுமையாவோ பார்க்கலை, எங்களுக்கு கிடைச்சிருக்குற கொடுப்பினையாத்தான் பாக்குறோம். இங்கே வர்ற பறவைகள் எல்லாம் எங்க வீட்டு மனுஷங்களைப் போல ஆகிட்டாங்க” என்கிறார்.
source https://www.vikatan.com/news/general-news/chennai-couple-feeds-to-more-than-1000-parrots-daily
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக