மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக `டெல்லி சலோ’ என்ற முழக்கத்துடன் டெல்லியை நோக்கி பேரணியாகச் சென்று இன்று போராட்டம் நடத்த இருப்பதாக விவசாயிகள் அறிவித்தனர். இதனால், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லியை நோக்கி படையெடுத்தனர்.
இதனால், ஹரியானா மாநில எல்லையில் அமிர்தசரஸ் - டெல்லி நெடுஞ்சாலையை தடுப்புகள் அமைத்து போலீஸார் மூடி சீல் வைத்தனர். ஷம்பு எல்லை என்றழைக்கப்படும் ஹரியானா எல்லைப் பகுதியில் டிராக்டர்களில் டிரக்குகளில் உணவுப் பொருள்களோடு சென்ற விவசாயிகள் கக்கார் ஆற்றுப் பாலத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் மீது ஹரியானா போலீஸார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தடுத்து நிறுத்தினர். அதேபோல், அம்பாலா அருகே ஜார்மரி பகுதியில் பஞ்சாப் - ஹரியானா எல்லைப்பகுதியிலும் விவசாயிகள் மீது போலீஸார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.
விவசாயிகள் போராட்டத்தால், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஹரியானாவிலிருந்து டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 10 (ஹிஸார் - ரோத்தக் - டெல்லி), தேசிய நெடுஞ்சாலை 44 (அம்பாலா - பானிபட்- டெல்லி) ஆகிய சாலைகளில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு ஹரியானா போலீஸார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
இதுகுறித்து பேசிய விவசாயி ஒருவர், `நாங்கள் என்ன தீவிரவாதிகளா? தலைநகருக்குள் நாங்கள் செல்லக் கூடாதா? ஜனநாயகம் மரித்துவிட்டது’ என்றார். டெல்லி செல்வதற்கு முன்னர் பானிபட் பகுதியில் முகாமிட்டுள்ள மற்றொரு விவசாயி கூறுகையில்,`என்ன நடந்தாலும் நாங்கள் டெல்லிக்குள் சென்றே தீருவோம். குடும்பத்தோடுதான் இங்கு வந்திருக்கிறோம். ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் எங்களிடம் கையிருப்பு இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
Also Read: வேளாண் சட்டங்கள்: `மோடி எப்போதும் சரியானவர் என்றனர்!’- பஞ்சாபில் அடுத்த பா.ஜ.க நிர்வாகி ராஜினாமா
விவசாயிகள் போராட்டத்தால் டெல்லி - குருகிராம் எல்லையில் வாகனங்களை சோதனைக்குப் பின்னரே போலீஸார் அனுமதிக்கின்றனர். இதனால், அந்தப் பகுதியில் நீண்ட வரிசையில் பல கிலோமீட்டர்கள் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அப்பகுதியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீஸார் போராட்டத்தைக் கலைக்க முயன்று வருகின்றனர்.
source https://www.vikatan.com/social-affairs/protest/police-use-water-canons-in-farmers-delhi-chalo-protest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக