Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

கரூர்: `தி.மு.க பிரமுகர் இறப்புக்கு காரணம் போலீஸ்தான்!’ - செந்தில் பாலாஜி ஆவேசம்

கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு விளம்பர பேனர்கள் வைப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், தி.மு.கவைச் சேர்ந்த ஒருவர் நெஞ்சுவலி காரணமாக பலியாக, அதற்கு அ.தி.மு.கவினர்களும், போலீஸாரும்தான் காரணம் என குற்றம்சாட்டி, தி.மு.க கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி போராட்டத்தில் குதித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

குவிக்கப்பட்ட போலீஸ்

Also Read: கரூர்: சிறுவன் காரில் கடத்தல்; ஒரு மணி நேரத்துக்குப் பின் விடுவிப்பு! - வடமாநிலக் கும்பல் கைவரிசையா?

கரூர் நகர் பகுதியில் உள்ள மாவுடியான்கோவில் தெரு பகுதியில் நேற்று முன்தினம் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு வைக்கப்பட்ட, தி.மு.க விளம்பர வரவேற்பு பேனரை, அ.தி.மு.கவினர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அ.தி.மு.கவினர்களை தட்டிக்கேட்ட தி.மு.க பிரமுகர் பிரபாகரன் உள்பட சிலர், அ.தி.மு.கவினர்களால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், தாக்குதலுக்குள்ளான பிரபாகரன் உள்ளிட்ட தி.மு.கவினர், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவந்தனர், அதேபோல், தி.மு.கவினர் தங்களை தாக்கிவிட்டதாக கூறி, அ.தி.மு.கவினரும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

பிரபாகரன்

இந்நிலையில், அ.தி.மு.க தரப்பு அளித்த புகாரை தொடர்ந்து, கரூர் நகர காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக பிரபாகரனை காவல்துறையினர் அழைத்துச்சென்றதாக சொல்லப்படுகிறது. விசாரணை முடிந்து இருந்து வீடு திரும்பிய பிரபாகரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வீட்டுக்கு வருவதற்குள் அவர் இறந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், பிரபாகரன் நெஞ்சுவலி காரணமாக இறந்ததாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார், பிரபாகரனின் உடலை கொண்டு வந்தனர்.

நேற்று காலை பிரேத பரிசோதனை நடைபெறும் இடத்தில் தி.மு.கவினர் அதிக அளவில் திரண்டு வந்ததால், அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இதனிடையே, கரூர் டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு, செந்தில் பாலாஜி தலைமையிலான தி.மு.கவினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'பிரபாகரன் இறப்புக்கு காரணமான, அ.தி.மு.கவினர் மீது வழக்குப் பதிந்து, உடனே அவர்களை கைது செய்ய வேண்டும்' என கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் செந்தில் பாலாஜி

அங்கு இருந்த செந்தில் பாலாஜி, "பிரபாகரன் இறப்புக்கு காரணம், அ.தி.மு.கவினர் மற்றும் அவருக்கு துணைபோன கரூர் நகர காவல் ஆய்வாளர் மற்றும் கரூர் நகர டி.எஸ்.பியும்தான். காவல்துறையினர் கரை வேட்டி கட்டிய கட்சியினர் போல செயல்படுகின்றனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.

சாலை மறியல் 2 மணி நேரத்துக்கு மேலாக நடந்ததால், கரூர் எஸ்.பி பகலவன் நேரில் வந்து விசாரணை அதிகாரியை மாற்றித் தருவதாக உறுதி அளித்ததால், செந்தில் பாலாஜி தலைமையில் தி.மு.கவினர் நடத்திய போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.



source https://www.vikatan.com/news/tamilnadu/senthil-balaji-protest-against-admk-and-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக