Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

வெளியேறிய வேல்முருகன்; புதுவரவு சுசித்ரா... இனி கேம்பிளான் எப்படி இருக்கும்? பிக்பாஸ் – நாள் 28

“ஒரு காலத்துல சென்னைல இருந்து மகாபலிபுரம் வரைக்கும் படகில் போகலாமாம். அப்படியான நீர்வழி போக்குவரத்து இருந்தது. இப்பவும் அப்படியாயிடுச்சு. சென்னைல இருந்து பக்கத்து ஏரியாவிற்கு கூட போட்ல போகலாம்” என்று சமீபத்திய ‘சென்னை வெள்ளத்தை’யொட்டி ஆட்சியாளர்களின் லட்சணத்தை கிண்டலடித்தார் கமல். ‘ஏரி’, ‘ஏரியா’, ரியல் எஸ்டேட், unreal என்று வார்த்தை விளையாட்டில் பின்னியெடுத்தார்.

அகம் டிவியாக உள்ளே சென்ற கமல், என்னதான் முட்டிக் கொண்டாலும் சாப்பாட்டு வேளையில் மக்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை பாராட்டி விட்டு (கிரெடிட்: ரியோ) சமையல் அணியின் உழைப்பையும் சிலாகித்து விட்டு நேரடியாக முதல் பஞ்சாயத்திற்குள் நுழைந்தார். வீட்டின் தலைவர் போட்டியில் நிகழ்ந்த அரசியல் பற்றியது.

பிக்பாஸ் – நாள் 28

தான் சிரமப்பட்டு சேகரித்த பந்துகளையெல்லாம் சம்யுக்தாவிற்கு தாரை வார்த்த பாலாஜியின் தியாகவுள்ளத்தைப் பற்றிய விசாரணை நிகழ்ந்தது. ‘சார்... ஓப்பனா பேசறேன்... சோம் ஜெயிச்சா அந்தக் குரூப் சொல்றபடி ஆடற பொம்மையாயிடுவாருன்னு தோணுச்சு. எனக்கும் அர்ச்சனாவிற்கும் நடந்த சண்டைல சமாதான தூதுவரா சாம் தனது பணியைச் சிறப்பா செஞ்சாங்க. எனவே அவங்க தலைவரானா நல்லாயிருக்கும்-னு தோணுச்சு” என்றார் பாலாஜி.

மேம்போக்காக பார்க்கும் போது பாலாஜி சொல்வது சரி என்பது போல் தோன்றினாலும் உள்ளுக்குள் நிறைய பிசிறுகள் இருப்பது தெரியும். ஒரு இடத்தில் இருக்கும் பிரச்சினையை சரி செய்ய நினைத்தால் தான் நேரடியாக களத்தில் இறங்குவதுதான் நேர்மை. மாறாக இன்னொருவரை தலைவராக்கும் காய் நகர்த்தலில் ஈடுபட்டால் அது ராஜதந்திர அரசியல். அதாவது பாலாஜியே அடிக்கடி சொல்லும் ‘Diplomacy’.

மட்டுமல்லாமல் பாலாஜி ஏதோ ஒரு நடுநிலையான ஆசாமியை தலைவராக்கவில்லை. தனது ‘குரூப்பை’ சேர்ந்த சம்யுக்தாவைத்தான் தலைவராக்கினார். அதன் மூலம் அவருக்குத்தான் பல அனுகூலங்கள் இருக்கின்றன. சம்யுக்தாவும் பாலாஜியின் செயலைத் தடுக்காமல் அதை ஏற்றுக் கொண்டதில் சுயநல அரசியல் இருக்கிறது.

“அப்ப. இந்த வீட்ல சிலர் குரூப்பா இருக்கறாங்களா? அவங்க யாருன்னு காட்டுங்களேன்” என்று ஒன்றும் தெரியாதது போல் கமல் கேட்க, ரியோ, வேல், சோம், அனிதா (கொஞ்ச காலத்திற்கு), நிஷா ஆகியோரைச் சொன்ன பாலாஜி, ‘தாயைக் காட்டிக் கொடுப்பது தாய்நாட்டை காட்டிக் கொடுப்பது போல’ என்கிற சென்ட்டியுடன் தயங்கி விட்டு பிறகு அர்ச்சனாவின் பெயரையும் சொன்னார்.

மார்ஷியல் ஆர்ட்ஸ்ஸில் வல்லவராக இருந்தாலும் சோமிற்கு சிறந்த முறையில் தன்னை தற்காத்துக் கொள்ளத் தெரியவில்லை. ‘அப்படில்லாம் கிடையாது’ என்று மொண்ணையாக சொல்லி விட்டு அமர்ந்தார்.

பிக்பாஸ் – நாள் 28
“நான் அப்படி ஃபீல் பண்ணலை’ என்று இறுக்கமான முகத்துடன் ரியோ சொல்லி அமர்ந்தாலும் பிறகு சொன்ன காரணம் சற்று சரியாக இருந்தது. “என் முடிவுகளை நான்தான் எடுக்கறேன். யார் சொல்லியும் இல்ல. மத்தவங்க செல்வாக்கு அதில் இல்லை” என்பது போல் அவர் சொன்ன விளக்கம் அமைந்தது.

இப்போது எழுந்த பாலாஜி, ரியோவின் விளக்கத்திற்கு ஓர் அட்டகாசமான கவுன்ட்டர் தந்தார். “செல்வாக்கு செலுத்துவதில் நேரடி, மறைமுகம் என்று இரண்டு விதங்கள் இருக்கின்றன.” என்று பாலாஜி சொல்லியது உண்மை. சிலர் தாங்கள் எதிர்பார்க்கும்படி செளகரியமான முறையில் காய் நகர்த்துவதை நேரடியாக செய்ய மாட்டார்கள். அதற்கேற்ற முறையில் பல விஷயங்களைச் செய்து உங்களை mind wash செய்து விடுவார்கள். நட்பு, பாசம், சென்டிமென்ட், பாராட்டு என்று பல ஆயுதங்களை இதற்காகப் பயன்படுத்துவார்கள். ‘நாம் இவரைத்தான் எப்போதும் ஆதரிக்க வேண்டும்’ என்று பலவீனமானவர்களுக்குத் தோன்றி விடும். ('பாபநாசம்' படத்தில் வருவது கூட ஓர் உதாரணம்தான்).

பிறகு எழுந்த நடுநிலைவாதியான (?!) சனம், "சார்... இங்க இருக்கற ரெண்டு பக்கத்துல...” என்று தன்னிச்சையாக பேச்சை ஆரம்பிக்க... ஓ அப்ப ரெண்டு side இருக்கா?” என்று நையாண்டிக் குத்தலை இறக்கினார் கமல். “கண்டிப்பா இருக்கு சார். அந்த வகையில் பாலாஜியும் ஒரு influencerதான்” என்று சனம் சொன்னதும் அழுத்தமான கைத்தட்டலை வெளிப்படுத்தி மகிழ்ச்சியடைந்தார் ரியோ.
இன்னொரு நடுநிலைவாதியான ஆரி எழுந்து, “என்னுடைய மற்றும் பாலாஜியின் கோபத்தை எதிர்மறையான கோணத்தில் சுட்டிக் காட்டிய அர்ச்சனா, ரியோவின் கோபத்தை மட்டும் நியாயப்படுத்தி பேசியதிலிருந்தே தெரியவில்லையா... யுவர் ஆனர்” என்று தன் தரப்பு வாதத்தை சாட்சியத்துடன் அழுத்தமாக வெளிப்படுத்தினார்.

இந்த விஷயத்தை நிரூபிக்க இத்தனை மெனக்கெட வேண்டிய அவசியமேயில்லை. போட்டியாளர்களுக்கும் சரி, பார்வையாளர்களுக்கும் சரி, அங்கு இரண்டிற்கும் மேற்பட்ட குழுக்கள் கன்னாபின்னாவென்று அலைகிறது என்பது வெளிப்படையாகவே தெரியும். லெக்பீஸை எதற்கு பிரியாணிக்குள் மறைக்க வேண்டும்?

பிக்பாஸ் – நாள் 28

‘ஒரு க்ரூப்பாதான் அலையறாங்க’ என்று சலித்துக் கொண்ட கமல் “உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்காக கிடைத்த ஒரு அற்புதமான மேடை இது... இங்க போய் சப்பாத்தியை ஒளிச்சு வெச்சு அற்பமா வெளையாண்ட்டு இருக்கீ்ங்களே” என்று கண்டிப்பான முறையில் tip தந்தார். (அதை அறிவுரைன்னும் வெச்சுக்கலாம்).

அடுத்ததாக அனிதாவின் பேச்சில் ‘ரவுடி காலேஜ் பசங்கள்’ விசிலடித்து செய்த இடையூறைப் பற்றிய விசாரணை. அருவியாக வழிந்த அனிதாவின் அற்புதமான பேச்சில் அணையைக் கட்டி இடையூறு செய்த சம்யுக்தா அதற்கான நடைமுறைக் காரணங்களைச் சொன்னாலும் கமல் ஏற்கவில்லை.

“போரடிச்சா... சேனல் மாத்திட்டு போறதுக்கு நீங்க ஆடியன்ஸ் இல்லை. கலைஞர்கள். வெளியூர் ஆட்டக்காரனை உள்ளூர் ஆட்டக்காரன் மதிச்சுதான் ஆகணும்” என்றெல்லாம் போடு போட்டவர், "ஏம்மா சிரிப்பழகி ரம்யா. நீங்கதானே ரிப்பன் வெட்டி இந்தக் கலாட்டாவை ஆரம்பிச்சி வெச்சீங்க?” என்று கேட்க "அய்யோ சார்... சிரிப்பை அடக்க முடியாதது என் கெட்ட வழக்கம் சார்” என்று அப்போதும் சிரித்துக் கொண்டே சொன்னார் ரம்யா.

(இந்த பிக்பாஸ் வீட்ல இதுதான் பிரச்சினை. ‘நீங்க நீங்களா இருங்க'ன்னு ஒரு பக்கம் தொடர்ந்து உபதேசம் பண்ணுவாங்க.. இன்னொரு பக்கம், “ஏன் அப்படிச் செஞ்சே. ஏன் இப்படிச் செஞ்சே –ன்னு வாரக்கடைசில வந்து நொய் நொய்-ன்னு பஞ்சாயத்து பேசுவாங்க).

இந்தச் சம்பவத்திற்கு சாட்சி சொல்ல ஷிவானியை அழைத்ததும் "என்னது நானா..?” என்று ஃபிரெண்ட்ஸ் படத்தின் கிளைமாக்ஸில் விஜய் தருவது போன்ற ஒரு விநோதமான முகபாவத்தைத் தந்தார். ஷிவானி வாயைத் திறக்கிறார் என்பதே பிக்பாஸ் மக்களுக்கு ஒரு செய்தி போல. சிரித்து விடுகிறார்கள். “அவங்க டாஸ்க்ல இருந்து விலகி ஏதேதோ பேசிட்டு இருந்தாங்க" என்று முத்து உதிர்த்தார் ஷிவானி.

“'கண்டேன் சீதையை’–ன்னு எவ்ளோ ஷார்ட்டா சொல்லி ராமனோட வயிற்றில் அனுமான் பாலை வார்த்தார்’ன்னு தெரியுமா? சுருக்கமாகப் பேசுங்க... நீங்களே ஒரு செய்தி வாசிப்பாளர்தான். தலைப்புச் செய்திகள்-னு சொல்லிட்டு புடவை தலைப்பு மாதிரி நீளமா சொல்லிட்டே போனா என்ன அர்த்தம்?” என்று போகிற போக்கில் அனிதாவையும் தட்டி விட்டுச் சென்றார் கமல்.

**

பிக்பாஸ் – நாள் 28

பிக்பாஸ் வீட்டு மக்கள் தன்னிச்சையாக செய்யும் ஏதாவதொரு விஷயத்தை அப்படியே ‘டாஸ்காக’ காப்பியடிப்பது பிக்பாஸின் ஸ்டைல். அந்த வகையில் ‘வேல்முருகனின்’ உடல்மொழியை கிண்டலுடன் செய்து காட்டிய ரியோ செய்த நகைச்சுவை இப்போது டாஸ்க்காக மாற்றப்பட்டது.

போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட அட்டை இருக்கும். அதை ஒவ்வொருவரும் குலுக்கல் முறையில் எடுக்க வேண்டும். யாருடைய புகைப்படம் வருகிறதோ அவரைப் போன்று நடித்துக் காட்ட வேண்டும். இந்த நடிப்பில், ‘அவர் ஏன் வீட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் மற்றும் ஏன் வெளியேற வேண்டும்’ என்கிற இரண்டு காரணங்களும் அடங்கியிருக்க வேண்டும். இது ஜாலியாகவும் வில்லங்கமாகவும் இருந்தது. 'நாம தமாஷூக்கு செஞ்ச விஷயம். நம்ம தலைலயே வந்து விடிஞ்சிடுச்சே’ என்பது மாதிரி தலையில் கை வைத்துக் கொண்டார் ரியோ.

இந்த விளையாட்டில் அனிதா பற்றி ரமேஷூம், சுரேஷ் பற்றி அர்ச்சனாவும் வேல்முருகன் பற்றி நிஷாவும் செய்து காட்டிய நகைச்சுவை நன்றாக இருந்தது. ரமேஷ் வரும் போது ‘ஹிஹிஹி’ என்று ‘ஒரு மாதிரியாக’ அனிதா சிரித்தார். அதை அப்படியே பிடித்துக் கொண்டு ரமேஷ் தொடர அடக்க முடியாமல் வெடித்து சிரித்தார் அனிதா. (ஸ்பேஸ் இல்லாம பேசறது மட்டுமல்ல... சிரிக்கறதுலயும் அனிதாதான் எக்ஸ்பர்ட்)

மீசையை தடவிக் கொண்டே, பாலாஜி பற்றி ரியோ செய்தது சீரியஸாக இருந்தது. ரம்யா போல் நடித்துக் காட்டிய சோம், “என் கிட்ட எதுவும் ஷேர் பண்ண மாட்டேங்கிறாங்க" என்று ஒரு புகாரை சொல்லிச் சென்றார் (இந்த சாக்லேட் பாய் மனசுக்குள்ளயும் ஏதோ இருக்கு!).

**

பிக்பாஸ் – நாள் 28

அடுத்ததாக எவிக்ஷன் பிராஸஸிற்கு வந்தார் கமல். இந்தப் பட்டியலில் எஞ்சியிருப்பவர்கள் ஐவர். நிஷா, சுரேஷ், சோம், ஆஜித் மற்றும் வேல்முருகன். முதல் மூவர் காப்பாற்றப்பட்டதை வரிசையாக கமல் தெரிவித்தார். துப்பட்டாவால் முகத்தை மூடிக் கொண்டு வெட்கப்பட்டார் நிஷா.

கடைசியாக இருந்தவர்கள் ஆஜித் மற்றும் வேல்முருகன். இருவருமே பாடகர்களாக அமைந்தது தற்செயல். “என்ன ஆஜித்... சிவகாமி ஜோசியம் என்ன சொல்லுது” என்று கமல் ஆரம்பிக்க “இப்பத்தான் ரெண்டு மூணு நாளா தோணுது சார். இந்த விளையாட்டை சீரியஸா எடுத்துக்கணும்னு... எந்த முடிவா இருந்தாலும் ஓகே" என்றார் ஆஜித். கவலையும் சங்கடமும் அவர் முகத்தில் தாண்டவம் ஆடியது.

“நான்தான் சார். போவேன். எனக்கு உறுதியா தெரிஞ்சுடுச்சி” என்றார் வேல்முருகன். அவருடைய உள்ளுணர்வு அழுத்தமாக வேலை செய்தது போல. “அப்படின்னா வந்துடுங்க... வெளில பேசலாம்" என்று வேல்முருகனுக்கான எவிக்ஷன் கார்டை காட்டினார் கமல்.

அப்போது பாலாஜி செய்த காரியம் திடுக்கிட வைத்துவிட்டது. "இந்த தண்டியா இருக்கானே... எங்க அடிச்சுடுவானோ…” என்று வேல்முருகன் பாலாஜியைப் பற்றி பயந்து கொண்டேயிருந்தார் அல்லவா? ‘ஆளு எஸ்கேப் ஆகறதுக்குள்ள. ஒரு சாத்து சாத்திடலாம்’ என்று வேல்முருகனை நோக்கி பாலாஜி இப்போது பாய்ந்தாரோ என்று கூட தோன்றி விட்டது. ஆனால் செல்லத்தம்பி ஆஜித் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியைத்தான் அவர் அப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் கமல் சென்ற இடைவேளையில் அதைச் செய்திருக்கலாம்.

வேல்முருகன் வெளியில் செல்வதற்கு பெரும்பாலோனோர் அப்படியொன்றும் கலங்கியது போல் தெரியவில்லை. ‘பாவம்... எப்பவும் ஓரமா உக்காந்து பாடிட்டே இருப்பாப்பல... சரி. இனி வீட்ல போயி பாடட்டும்’ என்பது மாதிரி இருந்தார்கள். அர்ச்சனாவும் ரியோவும் மட்டுமே அதிகமாக கலங்கியது போல் தெரிந்தது. ‘வாயை மூடு வேலு...’ என்று அதட்டி அதட்டியே வேல்முருகனை பேச விடாமல் செய்துவிட்ட அர்ச்சனா இப்போது அதிகம் கலங்கிக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ் – நாள் 28
“நானா தர்ற மாட்டேன். உண்டியலை உடைக்கறேன். நீங்களா எடுத்துக்கங்க... நான் போயி... கொடுத்து. எதுக்குங்க மனக்கஷ்டம்" என்று விடைபெறும் போதும் தன் டிப்ளமஸியை கைவிடாமல் இருந்தார் வேல்முருகன்.

இந்த வீட்டில் பாடுவதில் குறையே வைக்கவில்லை வேல்முருகன். சொல்லப் போனால் அதை மட்டுமே செய்து கொண்டிருந்ததைத்தான் குறையாகச் சொல்ல வேண்டும். (கமல் பேசற மாதிரியே வருதா?!). பாடும் திறமையைத் தாண்டி தனது இதர தனித்தன்மைகள் அழுத்தமாக வெளிப்படுவது போல வேல்முருகன் நடந்து கொண்டிருக்கலாம்.

வெளியே வரும் சமயத்தில் மக்கள் இவரைப் பாடச் சொல்லி கேட்க அதற்கும் இசைந்தார் வேல்முருகன். ‘ஒத்த சொல்லால’ என்பது உற்சாகமான பாடலாக இருந்தாலும் இந்தச் சூழலில் அதன் சோக வெர்ஷன் போலவே ஒலித்தது.

**

வேல்முருகன் வெளியே வருவதற்குள் ‘வாரம் ஒரு புத்தக அறிமுகம்’ பகுதிக்கு வந்தார் கமல். இந்த வாரம் அவர் அறிமுகப்படுத்தியது தொ.பரமசிவன் எழுதிய ‘அழகர் கோயில்’ என்னும் முனைவர் பட்டத்திற்காக எழுதப்பட்ட ஆய்வுநூல்.

தொ.பரமசிவன் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர். பண்பாடு, சமயம் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. ‘அழகர் கோயில்’ என்கிற அந்த நூல், இணையத்தில் தரவிறக்கம் செய்யும் வசதியோடு வாசிக்கக் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

"அழகர் கோயிலில் நடக்கும் திருவிழா என்பது தமிழ்நாட்டின் திருவிழாக்களிலேயே மிகப் பெரியது. 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. இந்தச் சமயத்தில் ஏறத்தாழ மூன்று லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்" என்கிறார் பரமசிவன்.

"அடிப்படையில் பகுத்தறிவாளராக இருந்தாலும் பக்தர்களின் உணர்வு பாதிக்கப்படாதவாறு தன் ஆய்வு நூலை சிறப்பாக எழுதியிருக்கிறார்" என்று பரமசிவனின் எழுத்தைப் பற்றி சிலாகித்து மகிழ்ந்தார் கமல். ‘கடவுள் இல்லைன்னு சொல்லலை... இருந்தா நல்லாயிருக்கும்’ என்பது தசாவதாரம் திரைப்படத்தில் வெளிப்பட்ட வசனம். அது இந்த எழுத்தாளர் போகிற போக்கில் சொன்ன முத்துதானாம்.

**

பிக்பாஸ் – நாள் 28
வெளியே வந்தார் வேல்முருகன். இவர் வாங்கியிருக்கும் பட்டம், அங்கீகாரம், விருது போன்ற பட்டியலை அறிய நேரும்போது பிரமிப்பாக இருந்தது. இதையெல்லாம் பேச்சுவாக்கில் உள்ளே அப்படியே எடுத்து விட்டிருந்தால் மக்கள் இவரை அத்தனை எளிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்களோ என்று தோன்றியது.

"நீங்க தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியே வரணும் வேல்முருகன்" என்று கமல் சொன்னது சரியான விஷயம். ‘டாக்டர் வேல்முருகன்’ என்பதை பலமுறை கூறி கமல் வேல்முருகனை பெருமைப்படுத்தியது சிறப்பு.

“நிறைய அவமானங்கள், வலி போன்றவற்றைக் கடந்துதான் இந்த வெற்றிகளை அடைஞ்சிருக்கேன். ஆனா அவமானங்கள்தான் நிறைய. வெற்றியா கிடைச்சது கொஞ்சம்தான்" என்று அப்போதும் கலங்கினார் வேல்முருகன். “வெளியே போனா ‘என்னப்பா ஜெயிச்சுட்டு வரலையா?'ன்னு என் மக கேட்பா. அதுதான் கலங்க வெக்குது” என்று வேல்முருகன் சொன்னபோது நெகிழ்வாக இருந்தது.

அடுத்து ஒரு புதிய வரவு. சுசித்ரா. தனியார் பண்பலை வானொலி தொடங்கப்பட்ட காலத்தில் மின்னிய நட்சத்திரங்களில் ஒருவர். RJ, DJ, பாடகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர். வெற்றிகளை நோக்கி நகரும் போது சமூகவலைத்தள சர்ச்சைகளில் சிக்கி மனஅழுத்தம் கொண்டு வெளிநாடு சென்று சமையல்கலை கற்று மீண்டவர்.

“முதல் சீஸன்ல இருந்தே என்னை கூப்பிட்டுட்டு இருந்தாங்க... இந்த சீஸன் ரொம்ப கடுமையா போயிட்டு இருக்கு. வீடே பிரஷர் குக்கர் மாதிரி இருக்கு. அப்பபப்ப கொஞ்சம் ஆவி வெளியே வருது. பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கற தீனி கொஞ்சம் மிஸ் ஆகுதுன்னு நெனக்கறேன். என்னால் இயன்ற மாற்றங்களை உருவாக்கறேன்” என்றபடி உள்ளே சென்றார் சுசித்ரா. இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள பாரம்பர்யமான உணவுவகைகளைப் பற்றிய புத்தகம் ஒன்றை கமலுக்கு பரிசளித்தார் சுச்சி.

பாட்டு சத்தம் கேட்டதும் ‘யாரோ புது போட்டியாளர்’ என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள். வீட்டின் வாசலிலேயே பாலாஜியும் ஷிவானியும் கடலை போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘கல்லா மண்ணா’ விளையாட்டு போல ஏதோ செய்து கொண்டிருந்த சுரேஷ், யாரோ ஒருவர் தலைமுடியை முகத்தால் மூடிக் கொண்டு விநோதமாக வருவதைப் பார்த்து ஒரு கணம் திகைத்துப் போய் விட்டார். அப்படியொரு கலவரமான எண்ட்ரியை கொடுத்தார் சுசித்ரா.

பிக்பாஸ் – நாள் 28

அர்ச்சனாவின் முகத்தில் ‘இவளுக்கு ஒரு பாயசத்தைப் போட்டுற வேண்டியதுதான்’ என்பது போலவே ஒரு பாவம் மின்னி மறைந்தது. "யாரு இவங்க?” என்று ஆரி விசாரிக்க 'சுச்சி’ என்று அர்ச்சனா சொன்னதும் "சுச்சியாவது குச்சியாவது. யாருக்குத் தெரியும்?” என்கிற எக்ஸ்பிரஷனைத் தந்தார் பக்கத்தில் இருந்த நிஷா.

“அருமையா வெளையாடறீங்க மக்களே" என்ற ஐஸ்பாரை முதலில் தள்ளிய சுசித்ரா, ஒவ்வொரு போட்டியாளரின் குணாதிசயத்திற்கு ஏற்ற எமோஜிக்களை விருதாக அளித்தார். ‘நான் வேணும்ன்ட்டு தரலை. அதுவா அமைஞ்சது’ என்று பலவற்றிற்கு முன்ஜாமீன் வாங்கிக் கொண்டார்.

‘மசாலா’ என்னும் பொருள் தரும் வானொலியில் பணிபுரிந்தவர் சுசித்ரா. இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் மசாலாவைச் சேர்ப்பாரா அல்லது அர்ச்சனாவைப் போல் ஆர்ப்பாட்டமாக எண்ட்ரி கொடுத்து விட்டு பிறகு சராசரி ஜோதியில் ஐக்கியமாகி விடுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/velmurugan-evicted-suchitra-entered-bigg-boss-tamil-season-4-day-28-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக