Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

`2015 கலகம்... பிரான்ஸ் முதல் சவுதி அரேபியா வரை’ - தொடரும் பதற்றம்!

கடந்த சில நாள்களாக உலகச் செய்திகளில் முக்கிய இடம்பிடித்துள்ளது பிரான்ஸ் நாட்டுச் செய்திகள்தாம். சமீபத்தில் அங்கு அடுத்தடுத்து நடந்த தாக்குதல் சம்பவங்கள் பற்றித்தான் உலக நாடுகள் பலவற்றிலும் பேச்சாக இருக்கிறது. அப்படி அங்கு என்னதான் நடக்கிறது என்பது பற்றிய கட்டுரைதான் இது.

பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள இடம் கான்ஃப்ளான்ஸ் செயின்ட் ஹொனோரின் (CONFLANS-SAINTE-HONORINE). அங்கு அமைந்திருக்கும் ஒரு பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்த சாமுவேல் பேட்டி என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கொலைக்கு என்ன காரணம்?

கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி, பிரபல பிரான்ஸ் பத்திரிகையான `சார்லி ஹெப்டோ’ (Charlie Hebdo) நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தைப் பதிவிட்ட காரணத்துக்காகத் தாக்குதலுக்கு உள்ளானது. அதன் அலுவலகத்துக்குள் நுழைந்த இரண்டு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அந்தநிறுவன ஊழியர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அந்த ஆண்டிலேயே 36 தாக்குதல் சம்பங்கள் பிரான்ஸில் நடைபெற்றுள்ளன. அதில் சுமார் 161 பேர் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், அதே நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம்தான் தற்போது நடந்து கொண்டிருக்கும் தொடர் தாக்குதல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. வரலாற்று ஆசிரியரான சாமுவேல் பேட்டி, `கருத்துச் சுதந்திரம்' பற்றிய தனது வகுப்புக்கு அந்த கேலிச்சித்திரங்களை எடுத்துச் சென்றிருக்கிறார். அவற்றை மாணவர்களுக்குக் காட்டும் முன்னர், `இதனால் உங்கள் நம்பிக்கை புண்படலாம்' என்று கூறி இஸ்லாமிய மாணவர்களை வகுப்பை விட்டு வெளியேற்றிவிட்டு அவர் பாடம் நடத்தியதாகத் தெரிகிறது.

இந்த கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டியது தொடர்பாக இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர்கள் சிலர், சாமுவேல் பேட்டி மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். பெற்றோர்களில் ஒருவர், இதுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன் அவரைப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அந்த வகுப்புக்குப் பின், அவர் பல்வேறு மிரட்டல்களை எதிர்கொண்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

Also Read: தாய்லாந்து: ஜெர்மனி ஹோட்டலில் மன்னர் உல்லாசம்; பாங்காக் வீதிகளில் மக்கள் போராட்டம் - என்ன நடக்கிறது?

இதையடுத்து கடந்த அக்டோபர் 23-ம் தேதியன்று, தான் பணியாற்றும் பள்ளிக்கு அருகே தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் சாமுவேல். வரலாற்று ஆசிரியரைக் கொலை செய்த 18 வயது இளைஞர் சம்பவ இடத்திலிருந்து தப்ப முயற்சி செய்தபோது, உள்ளூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர். அந்த இளைஞரைச் சரணடையுமாறு அறிவுறுத்தியபோது, அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர்.

சாமுவேலைக் கொலை செய்த 18 வயதான அன்சோரோவ், ரஷ்யாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் செசென்யா பகுதியைச் சேர்ந்தவர் என்று பிரான்ஸ் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அன்சோரோவின் குடும்பத்தினர் உள்பட 9 பேரைக் கைது செய்துள்ளதாகவும் பிரான்ஸ் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தைப் படம் பிடித்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு அன்சோரோவ் அனுப்பியுள்ளார். அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்பாகவே, ``இன்று உலகம் முழுவதும் பெரும் ஆபத்தாக இருப்பது இஸ்லாம் மதம்'' என்று பேசியிருந்தார் பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மெக்ரான். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பேசிய மெக்ரான், `` சாமுவேலை இஸ்லாமியர்கள் கொலை செய்துள்ளனர். காரணம், அவர்கள் நம் எதிர்காலத்தை எடுத்துக் கொள்ள நினைக்கிறார்கள்'' என்றார். மேலும் பேசிய அவர்...

மெக்ரானின் இந்தப் பேச்சு இஸ்லாமிய நாடுகளான சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான், ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளைக் கொதிப்படையச் செய்தது. துருக்கி அதிபர் எர்டோகன், ``இஸ்லாமிய அணுகுமுறை குறித்த தனது மனநிலையை பிரான்ஸ் அதிபர் பரிசோதிக்க வேண்டும்'' என்று பேசியிருந்தார். மேலும், பிரான்ஸ் நாட்டுப் பொருள்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் துருக்கி அரசு வலியுறுத்தியது.

இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ``ஒரு தலைவர் என்பதற்கான தகுதி என்பது மண்டேலா செய்ததுபோல் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதே; அவர்களைப் பிரித்தாள்வதல்ல. இது போன்ற சூழலில், தீவிரவாதிகளுக்கு இடங்கொடுக்காமல், காயங்களுக்கு மருந்து போடுவதே அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் பணியாக இருக்க வேண்டும். அடக்குமுறை என்பது தீவிரவாதத்துக்கு வழிவகுத்துவிடும்.

இஸ்லாம் மதம், முகம்மது நபியை இழிவுபடுத்தும் கேலிச்சித்திரங்களைப் பிரசுரிக்க ஆதரவு தெரிவித்ததன் மூலம் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையைப் புண்படுத்திவிட்டார் அதிபர் இமானுவேல் மேக்ரான்’’ என்று இம்ரான் கான் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார்.

இம்ரான் கான் கருத்துக்கு ஆதரவாக அரபு நாடுகளில் பிரான்ஸ் பொருள்களைப் புறக்கணிப்பதாகப் போராட்டம் தொடங்கப்பட்டது. துருக்கி, குவைத், ஜோர்டான், கத்தார், லிபியா போன்ற அரபு நாடுகளிலுள்ள பல்பொருள் அங்காடிகளில் பிரான்ஸ் தயாரிப்புப் பொருள்களை முழுவதுமாக புறக்கணித்திருக்கிறார்கள் அந்த நாட்டவர்கள்.

`இஸ்லாம் குறித்துத் தவறாகப் பேசியதற்காக பிரான்ஸ் அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரான்ஸ் தூதரகம் முன்பாக போராட்டத்தில் அந்நாட்டு மாணவர்கள் ஈடுபட்டனர்.
ஈரான்

கத்தார் பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த பிரான்ஸ் கலாசார நிகழ்வுகள், மெக்ரானின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும்விதமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பலரும், சமூக வலைதளங்களிலும் தங்கள் முகப்புப்படங்களை மாற்றி, பிரான்ஸுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர்.

இது தொடர்பாக, #BoycottFrenchProducts, #boycottfrance, #ProphetMuhammad போன்ற ஹேஷ்டாக்குகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது.
பிரான்ஸ் பேரணி

இதனிடையே பிரான்ஸின் முக்கிய நகரங்களில், சாமுவேலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்கள் பேரணியாகச் சென்றனர்.

கடந்த புதன்கிழமை அன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ``பிரான்ஸ் அதிபர் மெக்ரானுக்கு எதிரான தனிநபர் தாக்குதல்களை ஏற்க முடியாது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேபோல பிரான்ஸ் நாட்டு ஆசிரியர் மீதான தாக்குதலையும் கண்டிக்கிறோம். அந்த ஆசிரியருக்கும் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கும் இந்தியா சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். எந்த சூழலிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவே முடியாது'' என்று பிரான்ஸுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: `ஆரோக்கிய சேது ஆப் உருவாக்கியது யார் என்று தெரியாது' - அதிர்ச்சி தரும் மத்திய மின்னணு அமைச்சகம்!

இதைத்தொடர்ந்து கடந்த வியாழன் அன்று, பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் கத்திக் குத்துத் தாக்குதல் நடைபெற்றது உலகம் முழுவதும் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பிரான்ஸ் நாட்டின் ஊடகங்கள், ``பிரான்ஸில் உள்ள நைஸ் நகரின் தேவாலயத்தில் கையில் கத்தியுடன் நுழைந்த நபர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினார். இதில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். அவர் தொடர்ந்து `கடவுளே சிறந்தவர்' என்று அரபு மொழியில் கோஷமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்” என்று தகவல் வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்

இந்த தாக்குதலை நிகழ்த்தியது, பிராஹிம் ஒளசாயி (Brahim Aouissaoui) என்ற 21 வயது இளைஞர் என்று பிரான்ஸ் நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார் என்றும் பிரான்ஸ் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``உயிரிழந்தவர்களில், ஒருவர் 60 வயது பெண்மணி. இன்னொருவர் தேவாலயத்தில் பணிசெய்து வந்த 55 வயதுடைய ஆண். மூன்றாமவர் 44 வயதுடைய பிரேசில் நாட்டுப் பெண்மணி'' என்று பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதில், அந்த 44 வயது பெண்மணி உயிரிழப்பதற்கு முன்பாக ``என் பிள்ளைகளிடம் சொல்லிவிடுங்கள் நான் அவர்களைக் காதலிக்கிறேன் என்று'' எனக் கடைசியாகச் சொல்லிவிட்டு உயிரிழந்ததாகவும் அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகாதீர் முகமது

தேவாலய தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது, ``வரலாற்றில் பல முஸ்லிம்களைக் கொன்ற நாடு பிரான்ஸ். தற்போது இஸ்லாமியர்கள் அவர்களின் கோபத்தைக் காட்ட முழு உரிமை உள்ளது'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது மிகப் பெரிய சர்ச்சையானது. இதனை விதி மீறல் பதிவு எனக்கூறி ட்விட்டர் நிறுவனம் நீக்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி

இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,

கடந்த சில நாள்களாகவே #ISupportFrance என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து இந்தியர்கள் பலரும் பிரான்ஸுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால், இந்தியர்களில் ஒரு பகுதி மக்கள் பிரான்ஸ் அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகவே குரல் கொடுத்து வருகின்றனர்.

அக்டோபர் 30-ம் தேதியன்று பிரான்ஸ் பிரதமர் மெக்ரானை அவமதிக்கும் விதமாக அவரது புகைப்படம் கொண்ட ஸ்டிக்கர்களை மர்ம நபர்கள் சிலர் மும்பை முகம்மது அலி சாலையில் ஒட்டிச் சென்றனர். மெக்ரானின் புகைப்படம் மீது வாகனங்கள் ஓட்டிச் செல்லும்படியான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனிடையே அக்டோபர் 30-ம் தேதி அன்று சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மிக வேகமாக இரண்டு வேலிகளைத் தகர்த்துக் கொண்டு மசூதியின் வாயில் கதவில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை அடுத்து, `பிரான்ஸ் தேவாலய சம்பவத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் மசூதிக்குள் நடந்த சம்பவம் அமைந்துள்ளது' என்று இணையத்தில் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கின. எனினும், காரை ஓட்டி வந்தவர் சவுதியைச் சேர்ந்தவர்தான் என்றும் மனநலம் பாதிக்கப்பட்ட அவரை சவுதி காவல்துறை கைது செய்துள்ளதாகவும் சவுதி நாட்டுச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் தேவாலய தாக்குதல்களுக்குப் பிறகு அந்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமே பதற்றம் நிலவி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிரான்ஸின் ஒரு பகுதியில் கத்தியோடு சுற்றித் திரிந்த ஒருவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர். அதேபோல பிரான்ஸின் மற்றொரு பகுதியில் துப்பாக்கியோடு மக்களை மிரட்டிக் கொண்டிருந்த ஒருவரை பிரான்ஸ் நாட்டுக் காவல்துறை சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வருகின்றன. இதையடுத்து பொது இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டுக்கு முன்பாகவே இதுபோன்ற எக்கச்சக்க சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 1972-ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 3,000 தாக்குதல் சம்பவங்கள் அந்நாட்டில் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
பிரான்ஸ் பிரதமர் மெக்ரான்

``பிரான்ஸ், தங்களை ஒடுக்குவதாக இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். அது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால், பயங்கரவாதம் எதற்கும் தீர்வாகாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற தாக்குதல்களும் அதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்கதையாகாமல் தடுப்பதற்கு பிரான்ஸ் அரசு எவ்வித நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/international/what-is-happening-around-in-france-and-other-islamic-countries

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக