கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மண்டல கால, மகர விளக்கு பூஜைகள் இம்மாதம் 17-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. மண்டல மகர விளக்கு காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் தரிசனத்துக்காகச் செல்வது வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக சபரிமலை தரிசனத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி வாரத்தின் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாளுக்கு இரண்டாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு நேரத்தில் ஐந்தாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கையில் கொண்டுவர வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் ரயிலில் இறங்கும் இடத்துக்கு அருகில் உள்ள மையங்களில் கொரோனா சோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல பக்தர்கள் சபரிமலை சன்னிதானத்திலோ மற்ற இடங்களிலோ தங்குவதற்கு அனுமதி இல்லை. செய்தியாளர்களும் சன்னிதானத்தில் தங்கி செய்தி எடுப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நிலக்கல் பகுதியில் மட்டும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் பம்பையில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Also Read: நெருங்கும் மண்டலபூஜை... இந்த ஆண்டு சபரிமலை யாத்திரை மேற்கொள்வது எப்படி?
தினமும் ஆறாயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இப்போது உள்ள நிலையில் ஆறாயிரம் பக்தர்களை அனுமதிக்க முடியாது என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார். சபரிமலையில் பூஜைகள் வரும் 17-ம் தேதி முதல் தொடங்கும் நிலையில், ஏற்பாடுகள் சம்பந்தமாக தென்னிந்தியாவின் மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களுடன் வரும் 5-ம் தேதி கேரள அரசு ஆலோசனை நடத்த உள்ளது.
மண்டல மகரவிளக்கு பூஜை நடைபெறும் காலங்களில் தரிசனம் செய்யும் பக்தர்கள் கடந்த ஒன்றாம் தேதி (நவ.1) ஆன்லைன் புக்கிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. புக்கிங் தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் அனைத்து நாள்களுக்கான புக்கிங்களும் முடிந்துவிட்டன. சபரிமலையில் 63 நாள்களில் தரிசனம் செய்ய 86,000 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
புக்கிங் முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், இனி வேறு யாராவது தனது முன்பதிவை கேன்சல் செய்தால் மட்டுமே சபரிமலை செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/spiritual/temples/sabarimala-temple-online-darshan-booking-update
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக