Doctor Vikatan: என் அப்பாவுக்கு அல்சைமர் பாதிப்பு இருந்தது. என் வயது 45. சமீபகாலமாக எனக்கு மறதி அதிகரித்திருப்பதாக உணர்கிறேன். அடிக்கடி சந்திக்கும் நபர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் என பல விஷயங்களை மறந்து போகிறேன். அல்சைமர் என்பது பரம்பரையாகத் தொடருமா? நான் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் அல்சைமர் பாதிப்புக்கானவையாக இருக்க வாய்ப்புண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம்.
அல்சைமர் பாதிப்பு என்பது பரம்பரையாகவும் சிலருக்கு வரலாம். ஆனால் அப்படி வந்தே தீரும் என்று அவசியமில்லை. மறதி இருக்கும் எல்லோரும் அதை அல்சைமர் மாதிரியான பிரச்னைகளோடு தொடர்புபடுத்திப் பார்த்துக் கவலைகொள்ளத் தேவையும் இல்லை. MCI (Mild cognitive impairment) என்றொரு நிலை இருக்கிறது. அதாவது ஒருவருக்கு லேசான மறதி இருக்கலாம், ஆனால் அது அவரின் வேலைகளை பாதிக்கும் அளவுக்குத் தீவிரமாக இருக்காது.
வழக்கமான வேலைகளைச் செய்யும் ஒருவருக்கு சிந்தனைத்திறனில் ஏற்படும் லேசான கோளாறையே 'மைல்டு காக்னிட்டிவ் இம்பேர்மென்ட்' என்கிறோம். அதுவே ஒருவரது மறதி பாதிப்பானது அவரது அன்றாட வேலைகளை பாதிக்கும் போது, அதாவது வீட்டிலும் வேலையிடத்திலும் வழக்கமான வேலைகளை பாதிக்கும்போதுதான் அதை டிமென்ஷியா என்கிறோம்.
நினைவாற்றல் என்பது உள்வாங்குவது, ஸ்டோர் செய்வது, திரும்ப நினைவுபடுத்துவது என மூன்று நிலைகளைக் கொண்டது. இதைத்தான் ரெஜிஸட்ரேஷன், ரிட்டென்ஷன் மற்றும் ரீகால் என்கிறோம். பதற்றத்தில் இருக்கும்போது நம் கவனம் சிதறும். உதாரணத்துக்கு ஒருவர் பதற்றத்தில் இருந்தால் ஒரு பொருளை எங்கே வைக்கிறார் என்று கவனித்திருக்க வாய்ப்பில்லை. பதற்றத்தில் இருக்கும்போது ஒரு விஷயம் மனதில் பதிவதில்லை. இது பலரும் சந்திக்கும் சாதாரண விஷயம்தான்.
அதுவே எப்போதும் எல்லா விஷயங்களிலும் மறதி, நினைவுபடுத்திப் பார்ப்பதில் சிக்கல் என உணர்பவர்கள்தான் அது குறித்துக் கவலை கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு வைட்டமின் பி12 குறைபாடு, தைராய்டு பாதிப்பு போன்றவை இருப்பவர்களுக்கும் மறதி பிரச்னை இருக்கலாம். நரம்பியல் மருத்துவரை அணுகினால் அவர் மறதிக்கான காரணத்தை மிகச் சரியாகக் கண்டுபிடித்துவிடுவார். இந்தக் குறைபாடுகள் எளிதில் குணப்படுத்தக்கூடியவையே...
ஒருவேளை உங்களுக்கு உங்கள் அப்பாவை பாதித்த அல்சைமர் வருமோ என்ற பயம் இருந்தால் அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைப் பின்பற்றலாம். முதல் விஷயம் உங்கள் மூளையை ஆக்டிவ்வாக வைத்துக்கொள்வது.
நம்முடைய மூளையின் செயல்திறனை 60 சதவிகிதம்தான் பயன்படுத்துகிறோம். அதில் 20 சதவிகிதம் குறைகிறது என்றால் 40 சதவிகித செயல்திறனில் மறதி பாதிக்கும். அது மற்றவர்களுக்கும் தெரியவரும். அதுவே 60 சதவிகித செயல்திறமை 80 சதவிகிதமாக உயர்த்தினால் 20 சதவிகிதம் குறைந்தாலும் எல்லோருக்கும் இருக்கும் 60 சதவிகித செயல்திறனை வைத்து சமாளிக்க முடியும்.
குடும்பப் பின்னணியில் மறதி பாதிப்பு உள்ளவர்கள் அடிக்கடி மருத்துவ ஆலோசனை பெறலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-is-amnesia-hereditary
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக