இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நான்கு மாதங்களுக்கு முன்னால் காணாமல் போன நிலையில், அவரின் காதலன் தனது அண்ணனுடன் சேர்ந்து அந்த இளம் பெண்ணை கொலை செய்து குளத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இளம் பெண்ணின் மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கண்டுபிடித்த போலீஸார் கொலை செய்த சகோதரர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் வாத்தியநேத்தல் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் (25). அதே ஊரை சேர்ந்தவர் வாசுகி (25). இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆடு வளர்ப்பில் ஈடுப்பட்டு வரும் மாதவன் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் ஆடு மேய்ச்சலுக்கு விட்டு கிடை போடும் பணி செய்துள்ளார். செங்கிப்பட்டியிலேயே தங்கியிருந்து ஆடுகளை கவனித்து வந்த மாதவன் அவ்வப்போது ஊருக்கு சென்று வந்ததாக சொல்லப்படுகிறது.
ஊருக்கு செல்லும் போதெல்லாம் வாசுகியை சந்தித்துள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அதனால் வாசுகி கர்ப்பமாகியிருக்கிறார். அதனை தனது பெற்றோரிடம் வாசுகி சொல்லவும் இல்லை. வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்ற பயத்திலேயே இருந்துள்ளார். இந்நிலையில் தனது காதலனை பார்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி பெற்றோரிடம் சொல்லாமல் செங்கிப்பட்டிக்கு சென்றுள்ளார் வாசுகி.
இதற்கிடையில் வாசுகியை காணவில்லை என அவரின் தந்தை உடையார், கீழத்தூவல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் வாசுகி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து வாசுகி காணவில்லை என அவரின் படத்துடன் போலீஸார் இராமநாதபுரத்தில் போஸ்டர் விளம்பரம் செய்தனர்.
ஆனாலும் வாசுகி எங்கு இருக்கிறார்... என்ன ஆனார் என எந்த விவரமும் தெரியவில்லை. இந்நிலையில் வாசுகியும், மாதவனும் காதலித்து வந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. இதியடுத்து ஊருக்கு சென்றிருந்த மாதவனை சந்தேகத்தின் பேரில் பிடித்து கீழத்தூவல் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், வாசுகி கர்ப்பமானதால் என்னை பார்க்க வந்ததுடன் திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தினார். அதனால் எனது அண்ணனுடன் சேர்ந்து கொலை செய்து விட்டதாக கூறி போலீஸாரை அதிர வைத்திருக்கிறார் மாதவன்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், `வீட்டிலிருந்து சென்ற வாசுகி செங்கிப்பட்டிக்கு சென்று மாதவனை பார்த்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதை கூறியதுடன், உடனே திருமணம் செய்து கொள்ள சொல்லியுள்ளார். மாதவனுக்கு அதில் விருப்பம் இல்லை. இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாசுகியை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார் மாதவன். அதற்காக தனது அண்ணன் திருக்கண்ணனை கூட்டு சேர்த்து கொண்டுள்ளார். செங்கிப்பட்டி டி.பி. சானிடோரியத்திலிருந்து அயோத்திப்பட்டிக்கு செல்லும் சாலையில் கருவை காடு உள்ளது. ஆள் நடமாட்டமே இல்லாத அந்த பகுதிக்கு வாசுகியை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார்.
அத்துடன் அங்கிருந்த குளத்தில் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து வாசுகியை அமுக்கி கொலை செய்து விட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் வாசுகியில் மண்டை ஓடு, எலும்பு, அவர் அணிந்திருந்த உடை கிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இதையடுத்து சகோதரர்கள் இருவரையும் கைது செய்திருக்கிறோம். மேலும் அவர்களிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது” எனத் தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/crime/missing-young-women-was-killed-by-her-lover-and-his-brother
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக