Ad

வெள்ளி, 23 டிசம்பர், 2022

ஒன் பை டூ

கே.பி.ராமலிங்கம், மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

``நாட்டில் என்ன நடக்கிறது என்பதே முதல்வருக்குத் தெரியவில்லை என்பது அவரது பேச்சின்மூலம் தெளிவாகப் புரிகிறது. முதல்வர் பாராட்டிய அதே அமைச்சர் நாசர்தான், சமீபத்தில் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தினார். ஒரு லிட்டர் நெய் விலையை மட்டும் 115 ரூபாய் உயர்த்தியிருக்கிறார்கள். பால் உற்பத்தியாளர்களுக்குக் கொள்முதல் விலையை வெறும் மூன்று ரூபாய் உயர்த்திவிட்டு, விற்பனை விலையை 12 ரூபாய் அதிகரித்தார்கள். மீதமிருக்கும் 9 ரூபாய் அரசுக்குத்தானே செல்கிறது... முதல்வரின் பேச்சைத் தமிழக மக்கள் எப்படி எடுத்துக்கொள்வது... மத்திய அரசு இரண்டு சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை உயர்த்தியதைக் காரணம் காட்டி, தமிழகத்தில் பால் பொருள்களுக்கு 12 சதவிகிதம் வரியை உயர்த்தியவர் நாசர். இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திலேயே மிகத் தெளிவாகப் பேசியிருந்தார். இவ்வளவு நடந்த பிறகும், தன்னை வாக்களித்து முதல்வராக்கிய மக்களிடம் தொடர்ந்து பொய்யுரைப்பது நியாயமற்றது. இதே நிலை தொடர்ந்தால், ‘முதல்வருக்கு செலக்டிவ் அம்னீஷியாவா...’ என்று மக்கள் கேட்க மாட்டார்களா... தேர்தலில் தி.மு.க-வுக்கு வாக்களித்த மக்கள் எதற்காக வாக்களித்தோம் என்று நொந்துகொள்ளும் அளவுக்குத்தான் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.’’

கே.பி.ராமலிங்கம், சி.வி.எம்.பி.எழிலரசன்

சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

``உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். தி.மு.க தேர்தல் வாக்குறுதியிலேயே ஆட்சிக்கு வந்ததும் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும் என்று சொல்லியிருந்தோம். அதேபோல, புளு, கிரீன், ஆரஞ்சு என அனைத்துப் பால் வகைகளும் அ.தி.மு.க ஆட்சியில் விற்பனை செய்த விலையைவிட மூன்று ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்பட்டன. ஆரஞ்சு நிற பாலின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் அதிகரித்திருப்பது உண்மைதான். அதேசமயத்தில் இன்றுவரை அட்டைதாரர்களுக்கு ஆரஞ்சு பால் பழைய விலையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி எந்தத் தகவலையும் சரியாகத் தெரிந்துகொள்ளாமல், பா.ஜ.க-வினர் அரசியல் ஆதாயத்துக்காக அரைவேக்காட்டுத் தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில், இதே ஆரஞ்சு பாலின் விலை தமிழகத்தைவிட அதிகம். உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையை இன்றுவரை குறைக்காமல், காஸ் மானியத்தை வழங்காமல் மக்களை வஞ்சித்துவரும் ஒன்றிய அரசைக் கேள்வி கேட்காத பா.ஜ.க-வினருக்கு தமிழ்நாடு முதலமைச்சரைக் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது?’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-stalin-statement-about-milk-rate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக