Ad

வியாழன், 22 டிசம்பர், 2022

திருமாலுக்கு துளசி சமர்ப்பணம் சிறப்பானது! ஏன் தெரியுமா?

திருமாலுக்கு உரிய மாதம் மார்கழி. அதுபோல தெய்விகத் தன்மை நிறைந்தது துளசி. இது திருமகளின் அம்சமாகும். இல்லங்களில் தெய்வ கடாக்ஷம் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காகவே முற்றங்களில் துளசி மாடம் வைத்து வழிபாடு செய்வது நமது பாரம்பர்ய வழக்கமாக உள்ளது. திருமாலின் திருமார்பில் நீங்காது இடம் பெற்றிருக்கின்ற பேறு துளசிக்கு உண்டு.

மஹா விஷ்ணுவுக்குப் பிடித்தமான பத்ரம் ஆகையால்  'விஷ்ணுப்ரியா' என்பது துளசிக்கு உண்டான பெயர். நமது பாரதத்தில் துளசியை தெய்வமாக வணங்குதல் மரபு. மிகுந்த கூர் உணர்வு உடைய தாவரம் என்பதால் மாசுள்ள காரணிகள் பட்டாலே காய்ந்து விடும்‌ இயல்புடையது துளசி. எனவே மிகுந்த உடல் சுத்தத்துடன் குளித்தபிறகுதான் இதன் அருகில் செல்லவேண்டும் என்பது நியமமாக உள்ளது.

திருமால்

துளசியைத் தாயாராக வரித்து திருமுகமண்டலம் ஒன்றை அலங்கரித்து (துளசியின் கீழ்) வழிபடுதல் வழக்கம். தெலுங்கு பேசும் மக்கள் இந்தத் துளசியம்மனுக்கு கருகமணியுடன் கூடிய திருமாங்கல்யத்தினைச் சரடாக அணிவிப்பர். வேறு சில இனங்களில் 'துளசி கல்யாணம்' செய்து கொண்டாடுவதும் வழக்கத்தில் உள்ளது. 

பிருந்தை என்கிற அசுர வம்சத்துப் பெண்ணானவள் திருமாலின் அருள் பெற்று துளசியாக அவதரித்தாள் என்பது புராண வரலாறு. எனவே துளசிக்கு 'பிருந்தா' என்கிற பெயர் ஏற்பட்டது. துறவிகளின் திருச்சமாதி மேல் துளசிச் செடியை ஊன்றி மாடம் போன்று அமைப்பர். இதற்கு பிருந்தாவனம் என்பதே பெயர்.

வெளியிலிருந்து வீட்டுக்குள் வரும் புறஅதிர்வுகள் கண்களுக்குப் புலனாகாத வீச்சுகள் நிறைந்தவை என்றும் இந்தக் கெடுதல் நிறைந்த தீய அதிர்வுகளை அழித்து, நல்லதிர்வுகளைத் தக்க வைக்கும் வல்லமை உடையது துளசி என்பதும் பழங்கால நம்பிக்கை. இதன் அடிப்படையில்தான், அந்நாள்களில் இல்லங்கள் தோறும் நிலை வாயிலுக்கு நேராக முற்றங்களில் துளசி மாடம் வைப்பது கடைப்பிடிக்கப்பெற்றது. கண் ஏறு, தீய எண்ண அலைகள் ஆகியவற்றை ஈர்க்க வல்ல அபார சக்தி உடையது துளசி. சுற்றுப்புறத்திலுள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் துளசிக்கு உண்டு என்பதும், துளசி வாசம் நிறைந்த காற்றினை சுவாசிக்கும்போது சுவாசப் பாதையில் உள்ள கிருமித்தொற்றுகள் அழிக்கப்பெறுகின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருமாலுக்கு துளசி சிறப்பிடம்

துளசி இலைகளை இட்டு கொதிக்க வைத்து வடித்த நீருடன், பனங்கற்கண்டு, தேன் சேர்த்து பானமாக அருந்தலாம். இந்த பனிக்காலத்திற்கு ஏற்ற பானமாகிய இது மலேரியா, விஷக்காய்ச்சல்கள் வராமல் இருப்பதற்கான செயல்புரியும். துளசிச்சாற்றினை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து தைலமாக்கிப் பயன்படுத்தி வர, தேவையற்ற தொற்றுகள் அகன்றோடிவிடும்.

சளி இருமல், தொண்டைத் தொற்று உடையவர்களுக்கு துளசிச் சாற்றுடன் தேன் சேர்த்து கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.  வயிற்றில் உள்ள கிருமிகள் அழிக்கவல்லது. துளசியின் அதீத மருத்துவப் பயன்களை உணர்ந்திருந்ததால்தான் பெருமாள் கோயில்களில் துளசி தீர்த்தத்தினைப் பிரசாதமாக அளிக்கும் மரபினை ஏற்படுத்தி வைத்தனர் நம் முன்னோர்கள். 

துளசியுடன் பச்சைக்கற்பூரம், ஏலம் முதலானவற்றைச் சேர்த்து வெள்ளி, செப்பு பாத்திரத்தில் வைக்கப் பெற்ற நீரானது கிருமித்தொற்றுகளை அழிக்கவல்ல மருத்துவ குணமிக்கதாக ஆகிவிடுகின்றது.

துளசி வழிபாடு

இருதய பாதிப்புகள் உள்ளவர்கள் துளசி இலைகளை மருதம்பட்டையுடன் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட இருதயம் பலம் பெறும். துளசிமணி மாலை அணிவது இறைசக்தியை அதிகரித்துக்கொள்ள உதவுவதோடு நோய்த்தடுப்பானாகவும் அமைகிறது.

அருள் நிறைந்த இந்த மார்கழியில், திருமாலுடன் அவருக்கு உகந்த துளசியைப் போற்றி நற்பலன்களை அடையலாமே!


source https://www.vikatan.com/spiritual/gods/do-you-know-why-tulsi-is-special-for-lord-vishnu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக