Ad

செவ்வாய், 20 டிசம்பர், 2022

அரசியல் ரீதியிலும் வலுக்கும் சீன எல்லைப் பிரச்னை - என்ன நடக்கிறது?!

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தையொட்டி சீனா எல்லையில் இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலுக்குப் பிறகு, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு, எல்லைப் பகுதியில் எந்தப் பிரச்னையும் நிகழ்ந்ததாக செய்திகள் எதுவும் இல்லை. ஆனால், சீனா எல்லையில் நடந்த மோதலால் இந்திய அரசியலில் அனல் பறந்துகொண்டிருக்கிறது.

இந்தியா - சீனா எல்லை

இந்திய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில், அந்த மோதல் நடந்திருக்கிறது. ஆனால், மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அது குறித்த செய்தி வெளியுலகுக்குத் தெரியவந்தது. அதுவும் ஒரு செய்தி நிறுவனத்தின் மூலம் தெரியவந்ததேயொழிய, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

ஆகவே, எல்லை மோதல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும், விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “சீனாவின் ஊடுருவலை இந்திய வீரர்கள் முறியடித்துவிட்டனர். தாக்குதலில் இந்திய வீரர்கள் சிலர் காயமடைந்தனர்” என்றார்.

ராகுல் காந்தி

ஆனாலும், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. மேலும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையிலும் எதிர்க் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் களத்தில் இறங்கி, பா.ஜ.க-வை ரவுண்டு கட்டுகிறார்கள்.

பாரத் ஜோடோ யாத்திரையில் இருப்பதால், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. ஆனாலும், எல்லை விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசை அவர் கடுமையாக விமர்சித்துவருகிறார். பாரத் ஜோடோ யாத்திரையின் 100-வது நாள் நிறைவு விழாவையொட்டி ராஜஸ்தானில் ராகுல் காந்தி பேசினார்.

மல்லிகார்ஜுன கார்கே

அப்போது, “சீனா நம்முடைய நிலத்தைக் கைப்பற்றியிருக்கிறது. அவர்கள் நம் ராணுவ வீரர்களை அடித்து விரட்டுகிறார்கள். சீனாவின் அச்சுறுத்தல் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆனால், இந்திய அரசு அதை மறைத்திருக்கிறது. லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா போருக்குத் தயாராகிவருகிறது. ஆனால், இந்திய அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது" என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மாறி மாறி பா.ஜ.க-வை விமர்சித்துவருகிறார்கள். மேலும், நாடாளுமன்ற அவைகளிலிருந்தும் வெளிநடப்பு செய்யும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். இந்த நிலையில், காங்கிரஸுக்கு பா.ஜ.க தலைவர்கள் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் நமது ராணுவம் தீவிர பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள யாங்ஸ்டீ என்ற பகுதியிலும் நமது ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், எல்லையைப் பாதுகாத்து வருகிறார்கள். அவர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் சார்ந்த விமர்சனங்களை முன்வைப்பதில் எந்தப் பிரச்னையும் எங்களுக்கு இல்லை. ஆனால், நாம் நமது ராணுவ வீரர்களை அவமதிக்கக் கூடாது” என்றார்.

மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான அனுராக் தாக்கூர், “சீன ராணுவ வீரர்களுடன் நமது துணிச்சலான வீரர்கள் மோதலில் ஈடுபட்டிருந்தபோது, சீன அதிகாரிகளுடன் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ராகுல் காந்தி ஏன் அமைதியாக இருக்கிறார்?  ராகுல் காந்தி ஏன் நமது ராணுவத்தை மட்டுமே கேள்வி கேட்கிறார்” என்று ராகுல் காந்தி மீது பாய்ந்திருக்கிறார்.

அனுராக் தாக்கூர்

சீன எல்லைப் பிரச்னை சூறாவளி போல இந்திய அரசியலில் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் வாய்திறந்தால்தான், இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/a-confrontation-continues-over-china-border-issue-between-bjp-and-opposition-parties

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக