Ad

வெள்ளி, 16 டிசம்பர், 2022

``உதயநிதி இல்லை... அவர் மகன் வந்தாலும் நாங்கள் வாழ்க என்று தான் சொல்வோம்" - அமைச்சர் கே.என். நேரு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சேலத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான பொதுக்கூட்டம் நேற்று சேலம் கோட்டை மைதானப் பகுதியில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு., ``என்னுடைய 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பேராசிரியரை போன்று ஒருவரை நான் கண்டதில்லை. காரணம், தனக்கு கொடுக்கப்பட்ட பணியினை திறம்பட செய்து முடிப்பவர். அவர் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றியபோது பத்து மணி நேரம் அலுவலகத்திலேயே இருந்து கல்வி வளர்ச்சிக்காக திறம்பட செயல்பட்டவர். அப்படிப்பட்ட ஒருவரை நினைவுகூரும் விதமாக தான் இன்று தமிழகம் முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுக்கிணங்க பேராசிரியர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு நாள்கள் முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆத்தூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக இயக்கத்தைப் பற்றி, தெரிந்து பேசினாரா அல்லது தெரியாமல் பேசினாரா என்று தெரியவில்லை. சொத்து வரி, மின்சார வரி, பால் விலை உயர்வு இவை எல்லாம் ஏற்றி ஆறு மாத காலம் ஆகிறது. ஆனால் நேற்றுதான் கண்விழித்து பார்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர். இவருக்கு முன்பே ஆளாகப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே இதற்காக கண்டனங்கள் தெரிவித்துவிட்டார்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு ஆறு மாதம் காலம் கழித்து வரி உயர்வை கண்டித்து கண்டன கோஷம் எழுப்புகிறார்கள், யாரை முட்டாள் ஆக்குவதற்கு இந்த நாடகம் என்று தெரியவில்லை.

அதிலும் சேலம் அதிமுக-வின் கோட்டை என்கிறார். எடப்பாடி அவர்களே... நாங்கள் உங்கள் அம்மையாரையும் பார்த்து விட்டோம். எம்ஜிஆரையும் பார்த்து விட்டோம்.

சேலம் என்றுமே திமுக வீரபாண்டியாரின் கோட்டை தான். அது என்றுமே அழியாத ஒன்று. மேலும் வாரிசு அரசியல், வாரிசு அரசியல் என்று பேசுகிறீர்களே.. உங்களுக்கு ஏன் இந்த வயிற்று எரிச்சல். திமுக-வில் வாரிசுகள் இருக்கின்றது. அதனால் அரசியல் செய்கிறோம். உங்களுக்கு வாரிசு இல்லை என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்வது.

திமுக-வை கட்டிக்காத்து எங்களை உருவாக்கிய தலைவர் குடும்பத்துக்கும் தலைவருக்கும் என்றும் நேர்மையோடு அவர்களோடு இருந்து பாடுவோம். அவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் வேறு யாருக்கு விசுவாசமாக இருப்போம். உதயநிதி ஸ்டாலின் இல்லை அவர் மகன் வந்தாலும் நாங்கள் வாழ்க என்று தான் சொல்வோம்.

எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக ஆட்சி காலகட்டங்களில் என் மீது மட்டுமல்லாமல், திமுக நிர்வாகிகள் பலர் மீது பொய்யான குற்றச்சாட்டு வழக்குகள் நிறைய போட்டார்கள். உங்களால் என்ன செய்ய முடிந்தது. ஆனால் அதனையும் தகர்த்தெறிந்து விட்டு தான் இன்று உங்கள் முன் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் எடப்பாடியாரே, நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சுக்கும் தக்க பதிலடி வந்து கொண்டே இருக்கிறது. உங்களையெல்லாம் பேச விட்டது ரொம்ப தவறா போச்சு. இனி தளபதி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், உங்களுக்கு இடிதான்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தேனும் பாலும் ஓடப் போகிறதா என்று பேசினீர்களே, கடந்த நான்கு ஆண்டு காலம் நீங்கள் தான் ஆட்சி செய்தீர்கள். என்னத்த இந்த சேலத்துக்கு செஞ்சு கிழிச்சிட்டீங்க. ஆட்சி முடிய போற நேரத்துல கால்நடை பூங்கா என்று ஒன்று கட்டி அதை இன்றளவும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்குது. இதுதான் நீங்க சேலத்துக்கு செஞ்ச சாதனையா. அதே சேலத்தில் வருகின்ற தினங்களில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டக் கல்லூரி, கலையரங்கம், பெரியார் பேரங்காடி, புதிய பேருந்து நிலையத்தை திறக்க இருக்கிறார். ஸ்டாலின் சொல் அல்ல செயல் என்பதை நீங்கள் புரிந்து பேச வேண்டும்.

நேரு

என்றைக்கு என்னை இந்த மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக அமைத்தார்களோ, அன்றே முடிந்து விட்டது உங்களின் அதிமுக கோட்டை என்று சொல்லிக் கொள்ளும் வார்த்தை. இனி நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலாய் இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் இப்போது சேலத்தில் ஒரே ஒரு எம்.எல்.ஏ-வை பெற்று இருக்கும் திமுக, வருகின்ற காலத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதையும் உங்கள் கண்களினால் தான் பார்க்கப் போகிறீர்கள். இதில் வருகின்ற நாடாளுமன்றத்தில் மெகா கூட்டணி போடுவோம் என்று பேசுகிறீர்களே, அந்த மெகா கூட்டணி நீங்கள், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரா... மக்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. ஏதோ பேச வேண்டும் என்று பேசி புண்ணாக்கிக்காதீர்கள்.

இந்த நேருவைப் பற்றி தெரியவில்லை என்றால் கொஞ்சம் கேட்டு தெரிஞ்சுக்கோங்க எடப்பாடியார் அவர்களே” என்று கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சிக்கு பதில் கொடுக்கும் விதமாக அமைச்சர் கே.என் நேரு பேசியது சேலம் அரசியலை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kn-nehrus-response-to-edappadi-palanisamys-statement-on-cabinet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக