Ad

சனி, 17 டிசம்பர், 2022

மது போதையில் ஏற்பட்ட தகராறு; கூட்டாளியை கூட்டாக சேர்ந்து கொன்று புதைத்த இளைஞர்? - விசாரணையில் போலீஸ்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். இவர் மீது இருசக்கர வாகன திருட்டு உள்ளிட்ட 15 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கவியரசன் காணாமல் போயுள்ளார். எனவே அவரை கண்டுபிடித்து தரும்படி அவருடைய தந்தை விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கவியரசனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் விசாரணை மேற்கொண்டு, அவரை தேடி வந்தனர் போலீஸார். 

விக்கிரவாண்டி

இந்த நிலையில், கவியரசன் அவருடைய கூட்டாளி ஆவுடையார்பட்டு ராம்குமாருடன் கடைசியாக இருந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ராம்குமாரிடம் விசாரித்ததில், "நாங்கள்தான் கூட்டாக இணைந்து கவியரசனை கொன்றோம்" என ஒப்புக்கொண்டுள்ளார். தொடர் விசாரணையில், கூட்டாளிகளான ராம்குமாரும், கவியரசனும் விக்கிரவாண்டி டாஸ்மாக் கடை ஒன்றில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கவியரசனின் கழுத்தில் இருந்த டாலர் ஒன்றை ராம்குமார் தட்டி விட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கவியரசன், இருவருடன் இணைந்து ராம்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அன்று இரவு போன் மூலமாக இருவரும் தகாத முறையில் பேசிக் கொண்டுள்ளனர். மறுதினம் கவியரசனை தொடர்பு கொண்டு அழைத்த ராம்குமார், வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சண்டைக்கு அழைத்தாராம். அதன்படி, கவியரசன் ஆவுடையார்பட்டு ஏரிக்கரை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்கள் சுமார் 5 பேருடன் மது அருந்திக் கொண்டிருந்த ராம்குமார், நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கவியரசனை தாக்கி கொலைசெய்து, அருகில் இருந்த ஏரியில் புதைத்தது தெரியவந்துள்ளது. எனவே, ராம்குமாரை கைதுசெய்து 302-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ள விக்கிரவாண்டி போலீஸார்... கவியரசனை புதைத்ததாக கூறப்படும் இடத்தினை ஏரி பகுதியில் நேற்றைய தினம் சடலத்தை (17.12.2022) தேடி வந்தனர்.

தேடுதல் பணி

தொடர் மழையின் காரணமாக அந்த ஏரியில் தண்ணீர் தேங்கி இருப்பதினால், கவியரசனை புதைத்ததாக கூறப்படும் இடத்தினை கண்டறிவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக, தன்னுடைய கூட்டாளியையே இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் இணைந்து கொலை செய்து, ஏரியில் புதைத்துள்ளதாக கூறப்படும் சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/youngster-killed-his-friend-in-a-brawl-while-drinking-alcohol

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக