Ad

சனி, 31 டிசம்பர், 2022

கர்நாடகா: ``கூட்டணியின்றி நிற்போம்; ‘துக்டே துக்டே கேங்க்’ காங்கிரஸை வெல்வோம்” - அமித் ஷா

கர்நாடகாவில் வரும் 2023 மே மாதத்துக்குள் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கர்நாடகாவை ஆளும் பா.ஜ கட்சியினரும், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினரும், ஆட்சிக்கட்டிலில் அமர கங்கணம் கட்டிக்கொண்டு, களத்தில் படு ‘பிஸியாக’ தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர். பா.ஜ.க., ‘ஜன் சங்கல்ப’ யாத்திரை நடத்தி, மக்களை சந்தித்து வாக்குக்களை சேகரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று முந்தினம் முதல், உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார். நேற்று முந்தினம் காலையில், மாண்டியா மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கி, மாலையில் பெங்களூரு வந்தார். மாண்டியா பால் விற்பனை யூனியன் லிமிடெட் நிறுவனம் சார்பில், 260.9 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, ‘மெகா டெய்ரி’ மையத்தை தொடங்கி வைத்தார். பெங்களூருவில், கர்நாடக கூட்டுறவு சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, சென்டரல் டிடெக்டிவ் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் (CDTI) மையத்தை தொடங்கி வைத்தார்.

CDTI மையத்தை துவங்கி வைத்த அமித் ஷா

விழாவில் பேசிய அமித் ஷா, ‘‘2023 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக பரவலாக வதந்தி பரப்பி வருகின்றனர்.

வருகின்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும், பா.ஜ.க வேட்பாளர்கள் களமிறங்குவார்கள். எந்தக்கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், பா.ஜ.க தனித்து நின்று இரண்டில் ஒரு பங்கு வாக்குக்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். சமீபத்தில், 7 மாநிலங்களில் நடந்த தேர்தலில், 5 மாநிலங்களில் நாங்கள் வென்றுள்ளோம். ஆனால், மறு புறமோ காங்கிரஸ் கட்சியினர், 6 மாநிலங்களில் கடுமை சரிவை சந்தித்துள்ளனர்.

கூட்டத்தில் பேசிய அமித் ஷா

மக்களே... வளர்ச்சிக்கான, பாதுகாப்பான நாட்டை உருவாக்கிய பா.ஜ.காவுக்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது, ஊழலில் திளைத்த, ‘துக்டே துக்டே கேங்க்’ ஆன காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள். செய்தியாளர்கள், கர்நாடகத்தில் முன்முனை போட்டி நிலவுவதாக கூறுவதை நான் மறுக்கிறேன். ஏனெனில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு வாக்களிப்பது காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதற்கு சமம்; இரு கட்சியும் ஒன்றுதான். அதனால், கர்நாடகத்தில் வரும் தேர்தலில் பா.ஜ.க Vs காங்கிரஸ் என்ற நேரடியான போட்டி மட்டும் தான். வரும் தேர்தலில் நாங்கள் (பா.ஜ.க) தனித்து நிற்போம், காங்கிரஸ் கட்சியை நிச்சயம் வென்று ஆட்சியமைப்போம். ‘துக்டே துக்டே கேங்க்’ காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதை கைவிட்டு, தேச நலனுக்காக பா.ஜ.கவுக்கு வாக்களியுங்கள்,’’ என, காங்கிரஸ், ஜனதா தளத்தை கடுமையாக சாடினார்.

``அமித் ஷா தனியாக நிற்பதாக அறிவித்துள்ளதால், வரும் தேர்தலில் ஜனதா தளம் கட்சி பா.ஜ.கவுடன் இணைவது வாய்ப்பில்லை. மாறாக, ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளது,’’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/amit-shah-says-we-will-win-without-alliance-in-karnataka-elections

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக