Ad

புதன், 14 டிசம்பர், 2022

`பதான் படத்தை தடை செய்யவேண்டும்’ - ஷாருக்கான், தீபிகா படுகோன் கொடும்பாவியை எரித்து போராட்டம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் பதான் படத்தின் முதல் பாடல் சில நாள்களுக்கு முன்பு வெளியானது. இதில் நடிகை தீபிகா படுகோன் உடை படுகவர்ச்சியாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து இப்படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வீர சிவாஜி குரூப்பை சேர்ந்தவர்கள் ஷாருக்கான் மற்றும் படத்தின் நாயகி தீபிகா படுகோன் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர். படத்தின் பாடலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் இந்து மத உணர்வுகளுக்கு எதிராக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஷாருக்கானின் கொடும்பாவியை செருப்பால் அடிப்பது போன்ற வீடியோ ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது. பதான் படத்தை தடை செய்வது குறித்து மத்திய பிரதேச அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா அளித்த பேட்டியில், ``பதான் படத்தின் பாடலில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனேயின் ஆடை முகத்தை சுளிக்கும் வகையில் இருக்கிறது. இதனை சரி செய்யவேண்டும். ஆட்சேபகத்திற்குரிய பகுதியை நீக்கவேண்டும். அப்படி சரி செய்யவில்லையெனில் படத்தை தடை செய்வது குறித்து மாநில அரசு பரிசீலிக்கும்” என்று தெரிவித்தார்.

இதேபோன்று சம்ஸ்கிருத பச்சோ மஞ்ச் தலைவர் சந்திரசேகர் திவாரியும் பதான் படத்தின் பாடலில் இடம் பெற்றுள்ள காவி கலருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ``காவி கலரை அவமதிக்கும் வகையில் இப்படத்தின் படப்பாடல் இடம் பெற்று இருக்கிறது. இதனை எங்களது அமைப்பு ஏற்றுக்கொள்ளாது. இந்துக்கள் உங்களை(ஷாருக்கான்) புறக்கணிக்கும் போது வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்கிறீர்கள். படம் வெளியாவதற்கு முன்பு வைஷ்ணவி கோயிலுக்கு செல்கிறீர்கள். அனைத்து இந்துக்களிடம் நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும். உங்களை இந்திய மக்கள் சூப்பர் ஸ்டாராக மாற்றினார்கள். எனவே பதான் பட பாடலை உடனே அகற்றவேண்டும். இது போன்ற செயல்களால் உங்களது தரத்தை ஏன் குறைத்துக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளார். பதான் படத்தை யஷ்ராஜ் பிலிம் தயாரித்துள்ளது. இப்படம் அடுத்த மாதம் 25-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.



source https://www.vikatan.com/news/india/pathan-should-be-banned-protest-by-burning-effigy-of-shah-rukh-khan-deepika-padukone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக