Ad

சனி, 17 டிசம்பர், 2022

`வாதப் பிள்ளையாரை வணங்கிட வளங்கள் யாவும் பெருகும்' சிக்கல்கள் தீர நூல் சுற்றி வினோத வழிபாடு!

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே உள்ள கோட்டப் பாளையப் பகுதியில் வாதப் பிள்ளையார் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி அருட்காட்சி வழங்கிக் கொண்டிருக்கிறார்.
வாதப் பிள்ளையார்

தொடக்கத்தில், இப்பகுதியில்ஒரு சமண தீர்த்தங்கரர் இருந்ததாகவும், அவரிடம் சமண சமயத்தைப் பின்பற்றிய மக்கள் ஜைன வழிபாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. பிறகு ஜைன சமயம் மறைந்து சைவம் ஓங்கியது என்றும் கூறப்படுகிறது. அதன்பிறகு வாதப் பிள்ளையார் இப்பகுதியில் சுயம்பு மூர்த்தியாக 500 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தருளினார் என்கிறார்கள் ஊர் மக்கள்.

தன்னை நாடி வரும் பக்தர்களின் பிணியை பிள்ளையார் நிவர்த்தி செய்வதால் இவரை வாதப் பிள்ளையார் எனப் போற்றுகின்றனர்.

நூல் சுற்றி வினோத வழிபாடு

இவரை வழிபடும் முறையையும் , இவர் நிகழ்த்தும் அற்புதங்களையும் கூறி பூரிப்படைகின்றனர் உள்ளூர் பக்தர்கள்.

நெடுநாட்களாக உடலை வருத்தும் பிணித் துயர்களையும் பொருட்டு பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து,ஒரு லிட்டர் நல்லெண்ணெய் வாங்கி சுயம்பு மூர்த்தியின் மேல் ஊற்றி திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து வழிபாடு செய்கின்றனர்.

மேலும், விநாயகருக்கு இடப்புறத்தில் இரண்டு சூலங்கள் உண்டு. அவ்விரு சூலங்களிலும் நூல் சுற்றி வழிபாடு செய்கின்றனர்.

எண்ணெய் வழிபாடு

ஒரு நூல் கண்டு வாங்கிக் கொண்டு நூலின் ஒரு முனையை ஒரு சூலத்தில் கட்டிவிட்டு, பிள்ளையாரை மனதாரப் பிரார்த்தனை செய்து கொண்டு நூல் கண்டு தீரும் வரை பிள்ளையாரைச் சுற்றிவந்து சூலங்களுக்கு நூல் சுற்றுகின்றனர்.

சூலத்திற்கு நூல் சுற்றும் போது நம் உடலைச் சுற்றிய பிணிகள் நீங்கும் என்கிறார்கள் இறையை உணர்ந்தவர்கள்.

மேலும்,நோய் பாதித்த பகுதியின் மேல் சுவாமியின் மீது படிந்திருக்கும் நல்லெண்ணெயை எடுத்து தடவிக் கொள்கின்றனர். இங்ஙனம் வழிபடும் பக்தர்களின் வாதம்,கால் எரிச்சல், நரம்பு பலவீனம், மூட்டு நோய் போன்ற உடல் உபாதைகளைக் குணமாக்கி பிள்ளையார் நல்வழிப்படுத்துகிறார்.

வாதப் பிள்ளையார்

இவரின் அருமை உள்ளூர் மட்டுமன்று வெளியூரிலும் பரவியுள்ளது. எனவே, வெளியூர்வாழ் பக்தர்களும் ஆர்வமுடன் இவரை நாடி வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

பிணி நீங்கி இன்பம் அடைந்தவர்கள் பொங்கல் செய்து பிள்ளையாருக்குப் படைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

இக்கோயில் வைக்கப்பட்டுள்ள நோட்டுப் புத்தகத்தில் தான் உணர்ந்த அனுபவங்களை பக்தர்கள் குறித்து வைத்துச் செல்கின்றனர்.

சுயம்பாக எழுந்தருளிய பிள்ளையாருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சால விமானமும், வாதப் பிள்ளையார் சன்னதி அருகே வலம்புரி கற்பக விநாயகரையும் நாகரையும் பிரதிஸ்டை செய்து இப்பகுதி பக்தர்கள் வணங்கி வருகிறார்கள்.

சங்கடஹர சதுர்த்தி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய விசேஷ நாட்களில் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

வலம்புரி கற்பக விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தைப் பருகினால் வயிறு சம்பந்தப் பட்ட கோளாறுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ராகுகாலத்தில் இவ்விநாயகருக்கு குங்கும அர்ச்சனை நடைபெறுகிறது.இந்த அர்ச்சனை செய்பவர்களுக்கு வியாபர அபிவிருத்தி,குடும்ப நிம்மதி,கல்வி, செல்வம் போன்றவற்றை விநாயகர் அருளுகிறார்.

பிணியால் வருந்தும் பக்தர்கள் உடனே, வாதப் பிள்ளையாரை நாடிப் புறப்படுங்கள்.



source https://www.vikatan.com/spiritual/gods/coimbatore-vaathappillaiyar-temple-details-and-glories

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக