Ad

சனி, 24 டிசம்பர், 2022

பைனாப்பிள் கப் கேக்ஸ், சாக்லேட் பிரவுனீஸ், ஃப்ரூட் யோகர்ட்- நியூ இயர் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு என எல்லோரும் கொண்டாட்ட மனநிலைக்குத் தயாராகி வருகிறோம். இனி நடப்பதெல்லாம் நல்லதாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில் 2023 புத்தாண்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். இனிவரும் நாள்கள் இனிப்பாக இருக்க, இனிப்பான உணவுகளோடு புத்தாண்டை வரவேற்போமா...?

ஜூஸி பைனாப்பிள் கப் கேக்ஸ்

தேவையானவை:

மைதா மாவு - ஒன்றரை கப் (சலிக்கவும்)

ஃப்ரெஷ் அன்னாசிப்பழச்சாறு (அ) பைனாப்பிள் டின் ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்

உலர்ந்த தேங்காய்த் துருவல் (dessicated cocoanut) - ஒரு கப் (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கிறது)

கொரகொரப்பாகப் பொடித்த முந்திரி, பொடித்த சர்க்கரை - தலா ஒன்றரை கப்

வெண்ணெய் - ஒரு கப்

முட்டை - 6

சர்க்கரை (சிரப் செய்ய) - அரை கப்

கேரமல் செய்ய:

சர்க்கரை - ஒரு கப்

உடைத்த முந்திரி - அரை கப்

தண்ணீர் - கால் கப்

பொடித்த பைனாப்பிள் - கால் கப்

ஜூஸி பைனாப்பிள் கப் கேக்ஸ்

செய்முறை:

பாத்திரத்தில் அரை கப் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து, பிசுக்குப் பதத்துக்குப் பாகு காய்ச்சி இறக்கவும். இதுவே சுகர் சிரப். கேரமல் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். மைதா மாவுடன் முந்திரி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். பாத்திரத்தில் வெண்ணெயைச் சேர்த்து முள் கரண்டியால் நன்கு மிருதுவாகும் வரை அடிக்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து அடிக்கவும். பிறகு உடைத்த முட்டையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து அடிக்கவும் (நடு நடுவே மைதா - முந்திரி - தேங்காய் கலவையைத் தூவி அடிக்கவும்).

நன்கு கலந்ததும் அதனுடன் அன்னாசிப்பழச்சாறு சேர்த்துக் கலந்தால், கேக் கலவை ரெடி. இதை வெண்ணெய் தடவிய சிறிய கப்கள் அல்லது மோல்டுகளில் முக்கால் பாகம் வரை நிரப்பவும். அவனில் 165 டிகிரி செல்ஷியஸில் 18 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். அவற்றின் மீது சிறிதளவு சிரப் ஊற்றவும். அதன் மேலே சிறிதளவு கேரமல் கரைசல் ஊற்றி அலங்கரிக்கவும். இதைச் சிறிது நேரம் குளிரவைத்துப் பரிமாற சுவையாக இருக்கும்.

குறிப்பு: குக்கரில் மண் அல்லது உப்பு போட்டு விசில் இல்லாமல் ஸ்டாண்ட் வைத்தும் பேக் செய்யலாம்.

வால்நட் சாக்லேட் பிரவுனீஸ்

தேவையானவை:

மைதா மாவு - ஒரு கப்

குக்கிங் சாக்லேட் - 200 கிராம் (கடைகளில் கிடைக்கும்)

வெண்ணெய் - 100 கிராம்

பொடித்த சர்க்கரை - 200 கிராம்

முட்டை - 3

கோகோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்

வெனிலா எசென்ஸ் - கால் டீஸ்பூன்

உடைத்த வால்நட் - கால் கப்

உப்பு - ஒரு சிட்டிகை

வால்நட் சாக்லேட் பிரவுனீஸ்

செய்முறை:

பாத்திரத்தில் சாக்லேட்டுடன் வெண்ணெய் சேர்த்து டபுள் பாய்லிங் முறையில் உருக்கவும். அதனுடன் பொடித்த சர்க்கரை சேர்த்துக் கலந்து ஆறவிடவும். உப்பு, சலித்த மைதா மாவு, கோகோ பவுடர் சேர்த்துக் கலக்கவும் (உடைத்த முட்டையையும் நடு நடுவே சேர்த்துக் கலக்கவும்).

பிறகு வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். கடைசியில் பாதி அளவு வால்நட்ஸை ஒரு டீஸ்பூன் மைதாவில் கலந்து சேர்க்கவும். பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி அதில் சிறிது மைதா மாவைத் தூவி எல்லாப் பக்கமும் படும்படி செய்து பின்னர் மீதியைத் தட்டிவிடவும். ட்ரேயில் பிரவுனி கலவையைச் சேர்க்கவும். அதை மைக்ரோவேவ் அவனில் வைத்து 180 டிகிரி செல்ஷியஸில் 30 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். மேலே மீதமுள்ள வால்நட்ஸ் தூவி, துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: செர்ரி, வால்நட்ஸ், ஐஸ்க்ரீம் கொண்டும் அலங்கரிக்கலாம்.

ஃப்ரூட் யோகர்ட்

தேவையானவை:

பேரிக்காய், ஆப்பிள் - தலா ஒன்று (தோல், விதை நீக்கி துண்டுகளாக்கவும்)

கிவி, பைனாப்பிள், மாம்பழத் துண்டுகள் – சிறிதளவு

ஸ்ட்ராபெர்ரி - 4 (நறுக்கவும்)

பட்டை - ஒரு துண்டு

எலுமிச்சை - பாதியளவு (சாறு பிழியவும்)

கெட்டித் தயிர் - 2 கப்

தேன் - அரை கப்

சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

அலங்கரிக்க:

பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி – சிறிதளவு

சாரைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்

ஃப்ரூட் யோகர்ட்

செய்முறை:

தயிரைத் துணியில் மூட்டையாகக் கட்டி தொங்கவிடவும். நான் ஸ்டிக் பானில் (non stick pan) பழங்களுடன் சர்க்கரை, பட்டை சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி இறக்கவும் (குழையக் கூடாது). அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். பிறகு பட்டையை எடுத்துவிடவும். தயிரைக் கிண்ணத்தில் போட்டு, தேன் சேர்த்துக் கலந்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கண்ணாடி கிண்ணம் அல்லது டம்ளரில் முதலில் சிறிதளவு பழத்துண்டுகளை போடவும். அதன்மீது சிறிதளவு தேன் கலந்த தயிர் கலவையை ஊற்றவும். அதன்மீது மீண்டும் சிறிதளவு பழக்கலவை, பின் தயிர் கலவை என மாற்றி மாற்றிச் சேர்க்கவும். அதன் மீது ஸ்ட்ராபெர்ரி, சாரைப்பருப்பு கொண்டு அலங்கரிக்கவும்.

குறிப்பு: பழங்களை ஒரே அளவு துண்டுகளாக்கவும்.

மாவா பாட்டி (பேடா)

தேவையானவை:

உடைத்த டிரை ஃப்ரூட்ஸ் அண்டு நட்ஸ் கலவை - அரை கப்

எண்ணெய் (அ) நெய் – பொரிக்க தேவையான அளவு

மேல் மாவு செய்ய:

மாவா (இனிப்பு சேர்க்காத கோவா) - ஒரு கப் (துருவவும்)

மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்

ஆரோரூட் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை

காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு

பாகு செய்ய:

சர்க்கரை - ஒன்றரை கப்

தண்ணீர் - ஒரு கப்

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

அலங்கரிக்க:

சீவிய பிஸ்தா, பாதாம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

ரோஜா இதழ்கள் – சிறிதளவு

மாவா பாட்டி (பேடா)

செய்முறை:

பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சி இறக்கவும். மேல் மாவு செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து 10 நிமிடங்கள் அப்படியே மூடிவைக்கவும். பிறகு மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி தட்டி நடுவே சிறிதளவு டிரை ஃப்ரூட்ஸ் - நட்ஸ் கலவை வைத்து மூடி விருப்பமான வடிவம் கொண்டுவரவும்.

வாணலியில் எண்ணெய் அல்லது நெய்யைக் காயவைத்து, மிதமான சூட்டில் பேடாக்களைப் (பாட்டி) போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சற்று ஆறியதும் சர்க்கரைப் பாகில் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து எடுக்கவும். அதன்மீது அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தூவி அலங்கரித்து, மேலே சிறிதளவு பாகை ஊற்றிப் பரிமாறவும்.



source https://www.vikatan.com/food/food/news-year-special-week-end-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக