Ad

வெள்ளி, 23 டிசம்பர், 2022

``பாஜக, ஓபிஎஸ் அணியில் இருந்து அழைப்பு வந்தது..." - சொல்கிறார் தோப்பு வெங்கடாசலம்

திமுக-வில் இருந்து விலகி பாஜக-வில் இணைவதாக தகவல் பரவிய நிலையில் தோப்பு வெங்கடாசலம் ஏற்கெனவே அந்தத் தகவலை மறுத்திருந்தார். இருப்பினும் அவர் பாஜக-வில் இணையப் போவதாக செய்திகள் பரப்பப்பட்டதால் பெருந்துறையில் செய்தியாளர்களுக்கு தோப்பு வெங்கடாசலம் பேட்டியளித்தார்.

அப்போது அவர், ``நான் பாரதிய ஜனதா கட்சியில் சேர உள்ளதாக ஒரு தொலைக்காட்சியில் செய்தி வந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்ததும், எனது விளக்கத்தையும் அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்தது. வேண்டுமென்றே யாரோ சிலர் இவ்வாறு தவறான தகவலைப் பரப்புகின்றனர். அதிமுக-விலிருந்து திமுக-வுக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர்தான் சேர்ந்தேன். அதன்பிறகு எந்தவித எதிர்பார்ப்புமின்றி திமுக-வில் கட்சி பணியாற்றி வருகிறேன்.

பேட்டியளித்த தோப்பு வெங்கடாசலம்

பதவிக்காக நான் திமுக-வில் சேரவில்லை. எந்தப் பதவியையும் வழங்குமாறு நான் கேட்கவில்லை. என்னை விட பல்லாண்டுகளாக திமுக-வில் பணியாற்றுபவர்கள் இருக்கிறார்கள். எனவே உடனடியாக எனக்கு பதவி தருமாறு கேட்க முடியாது. என்னைப் போன்றே தேர்தலுக்குப் பிறகு திமுக-வில் சேர்ந்த சிலர் பதவி பெற்றிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு என் நல்வாழ்த்துகள்.

அமைச்சராக, எம்.எல்.ஏ.வாக இருந்தபோது எனது தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணியாற்றினேன்.
`பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தான் முன்னுரிமை அளித்து வந்துள்ளேன்’ என்று இங்குள்ள அதிகாரிகளே கூறுவார்கள்.
 முதல்வருடனும், அமைச்சர்களுடனும், திமுக தலைமை மற்றும் பொறுப்பாளர்களுடனும் நல்லுறவுடன் இருக்கிறேன்.

தோப்பு வெங்கடாசலம்

நட்பு ரீதியாக பல்வேறு கட்சியின் நண்பர்கள் பழகி வருகின்றனர். அதேபோலதான் பாரதிய ஜனதா கட்சியினரும், அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் பழகுகின்றனர். அவர்களது கட்சியில் சேரச் சொல்லி என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் அதை நான் ஏற்கவில்லை. திமுக கொள்கைகளில் சில முரண்பாடுகள் எனக்கு இருந்த போதிலும், திமுக-வில் தான் உறுதியுடன் இருக்கிறேன். கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக-வின் வெற்றிக்காக பிரசாரம் செய்து 100 சதவீதம் வெற்றியை ஈட்டித் தர பாடுபட்டேன். இங்குள்ள உள்ளூர் தி.மு.க., பிரமுகர்களுடன் நட்புடனேயே இருக்கிறேன். ஆனால் இந்த வதந்தி எங்கிருந்து கிளம்பியது என்றுதான் தெரியவில்லை” என்றார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-ops-team-approached-me-says-thoppu-venkatachalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக