Ad

சனி, 24 டிசம்பர், 2022

"உனக்கு என்ன தகுதி இருக்கிறது சி.வி.சண்முகம்; எச்சரிக்கை விடுக்கிறேன்!" - பொன்முடி ஆவேசம்

தி.மு.க பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா மற்றும் உதயநிதி பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நேற்று மாலை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் திருவாதி பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "இளைஞர்களை ஈட்டி முனையாக தீட்டி வருகின்ற உதயநிதியிடம்தான் இன்று விளையாட்டுத்துறை, இளைஞர் வளர்ச்சித்துறை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலெல்லாம் அவர் மிகச் சிறந்தவர். 'உதயநிதி, என் கால் தூசுக்கு சமம்' என்று பேசுகிறார் சி.வி.சண்முகம். அவர் எங்கிருந்து வந்தார் என யாருக்குமே தெரியாது. அவருடைய அப்பா விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க அமைப்பாளராக எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தவர், எம்.பி-யாகவும் இருந்திருக்கிறார். திண்டிவனத்தார் ஒருவருக்கு பின்னர் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக வந்தவர்தான் சி.வி.சண்முகம். 

அமைச்சர் பொன்முடி

அவர், உதயநிதி பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. அமைச்சர் உதயநிதி, சின்ன வயதில் இருந்தே எனக்கு பழக்கமானவர். சிறந்த விளையாட்டு வீரர், பெரியாரின் கொள்கையிலே பற்றுடையவர், எல்லோருக்கும் எப்போதும் நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர். அவர் தமிழகத்தை சுற்றிவந்து செய்த தேர்தல் பிரசாரம்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க பலமான வெற்றியை பெறுவதற்கு காரணம். அதேபோல் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற, அவர் செய்த பிரசாரமே காரணம். 

அப்படிப்பட்டவருக்கு முன்னமே 'மந்திரி' பொறுப்பு கொடுத்திருக்க வேண்டும். சட்டமன்றத்திலே தன்னுடைய மகன் அந்த பயிற்சியை பெறட்டும் என்று 1.5 வருடம் கழித்து அமைச்சர் பதவியை கொடுத்திருக்கிறார் தளபதி. என்னுடைய பையன்கூட அரசியலுக்கு வரும்போது, 'வாரிசு வந்துடுச்சு'ன்னு சொன்னார்கள். என்னங்கையா..! எங்க வீட்டில் இருக்கிற யாருமே அரசியலில் இருக்கக் கூடாதா..? 10% அரசியல்வாதிகள் குடும்பத்தவர் இருப்பார்கள், மீதி 90% பொதுவாக வருபவர்கள் தான். அரசியல்வாதிகளின் எல்லோர் வீட்டு பிள்ளைகளுக்குமா பதவி கொடுத்து விடுகிறார்கள். அரசியலிலே முழுமையாக செயல்படும் சில அரசியல்வாதி பிள்ளைகளுக்கு தான் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதில் வேறொன்றும் இல்லை. உதயநிதியின் உழைப்பு நமக்கெல்லாம் தேவை. தன்னுடைய அப்பா போட்ட பிச்சையில் அரசியலுக்கு வந்தவர் சி.வி.சண்முகம்.

முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அவருடைய அண்ணனுக்கு வேலை வேண்டுமென்று நான் அமைச்சராக இருந்தபோது என்னிடம் கேட்டதின் பேரில், அவருடைய அண்ணனுக்கு வேலை போட்டுக் கொடுத்தவனே நான்தான். அந்த மாதிரி இருந்தவங்க எல்லாம், இன்னைக்கு வந்து பேசுறாங்க. எங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்காதே சி.வி.சண்முகமே... உனக்கு நான் என்னுடைய மாவட்டச் செயலாளர் முன்னிலையில் இருந்து இந்தக் கூட்டத்தின் வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறேன். இது அரசியலுக்காக பேசுவதல்ல. சி.வி.சண்முகமும் எனக்கு நல்ல நண்பர்தான். ஆனால், அரசியலிலே ஒரு கொள்கையோடு பேசுங்கள்.

 'எங்க அம்மா-விற்கு வாரிசு உண்டா... எம்.ஜி.ஆர் அப்படி யாரையாவது கைகாட்டி இருக்கிறாரா?' என்றெல்லாம் கூட்டத்தில் பேசுகிறார் அவர். எம்.ஜி.ஆருக்கு பின்னர் முதலமைச்சரானது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகிதான். அப்படி ஜானகி அந்த சேரில் உட்கார்ந்த போது, `நான்தான் உண்மையான வாரிசு' என்றார் ஜெயலலிதா. யார் உண்மையான வாரிசு! யார் பொய்யான வாரிசு! என்பதெல்லாம் நமக்கு தெரியாது. 'வாரிசு' பற்றி பேசுவதற்கு சி.வி.சண்முகத்திற்கு கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா? உங்களுடைய அப்பாவைத் தொடர்ந்து வந்த உனக்கு, வாரிசு பற்றி பேசுவதற்கு அருகதை இருக்கிறதா! அரசியல் பேசு, ஆனால் மனசாட்சியோடு பேச வேண்டாமா..! 'உதயநிதி, கால் தூசுக்கு சமம்' என்று சொல்கிறாயே அந்த வார்த்தை தகுமா? அதே வார்த்தையை நான் சொன்னால் நிற்க முடியுமா நீ. உனக்கு எந்த தகுதியாவது இருக்கிறதா. 

சி.வி.சண்முகம், பொன்முடி

இந்த மாவட்ட வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்யாத நீ இப்படி பேசுகிறாய் என்றால்... நாங்கள் பேச ஆரம்பித்தால்..! எங்க கட்சிக்காரர்களுக்கு பேச தெரியாதா? நாங்க நாகரிகத்தோடு நடந்து கொள்ள நினைக்கிறோம். இன்றைக்கு எப்படியோ ஊரை ஏமாற்றி ராஜ்ய சபா உறுப்பினராக அமர்ந்து கொண்டிருக்கிறாய். அன்று உன்னுடன் இருந்த லட்சுமணனைக்கூட கையில் வைத்துக்கொண்டு ஒழுங்காக செயல்பட தெரியவில்லை உனக்கு. எப்போதுமே, யாரையுமே மதிக்க தெரியாத நீ, உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசுகிறாய் என்று சொன்னால்... இந்த மாவட்டம் தாங்காது. இந்த விழுப்புரம் மாவட்ட தி.மு.க., விரைவில் உனக்கு பதில் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லும்" என்றார் ஆவேசமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-ponmudi-spoke-angrily-about-cvshanmugam-in-villupuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக