கர்நாடகாவில் மங்களூர் அருகே உள்ள கொஞ்சாடியில் வசித்து வருகிறார் பெண் வழக்கறிஞரான கிரணா. கோவிட் லாக்டௌன் காலத்தில், கிரணா வீட்டில் இருந்தபோது, ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தவர், மல்லிகை சாகுபடி செய்ய விரும்பினார்.
விவசாய நிலம் இல்லாவிட்டாலும் தனது வீட்டு மாடியில் கிரணா மல்லிகை சாகுபடியைத் தொடங்கினார். கிரணாவுக்கு பூச்செடிகளை வளர்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால், சொந்த நிலம் இல்லை என்பதால் தனது வீட்டு மொட்டைமாடியில் வளர்க்க ஆரம்பித்தார்.
மல்லிகை நாட்டின் பல்வேறு பகுதிகளில் வளர்க்கப்பட்டு வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், உடுப்பி சங்கரபுரா மல்லிகைப்பூ ஒரு இணையற்ற தனி நறுமணத்தை உடையது. அதற்காகவே புவியியல் குறியீட்டை (GI) பெற்றுள்ள தனிச்சிறப்பையும் கொண்டுள்ளது. சங்கரபுரா மல்லிகைப்பூ சங்கரபுரத்தைத் தவிர வேறு எங்கும் கிடைக்காது என்று சொல்லுவார்கள். இதன் விலையும் சற்று அதிகமே. அத்தகைய மல்லிகையை, தனது வீட்டு மொட்டை மாடியில் வளர்த்து வெற்றி பெற்றுள்ளார் கிரணா.
லாக்டௌன் காலமாக இருந்ததால், மல்லிகைச் செடிகளால் நர்சரி நிரம்பியிருந்தது. இது ஒரு வகையில் கிரணாவுக்கு வசதியாக இருந்தது.
லாக்டௌன் காலத்தில் அதிகமான மக்கள் நர்சரியில் தாவரங்களை வாங்கவில்லை. மேலும், அது மல்லிகைப் பருவமாக இருந்ததால், நர்சரியில் இருந்த 90 கன்றுகளை மொத்தமாக வாங்கினார். ஒவ்வொரு செடிக்கும் ரூ.35 எனக் கணக்கிட்டு மொத்தம் ரூ.3,150 செலவழித்து, 90 மல்லிகைச் செடிகளை வாங்கியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, வீட்டுக்குத் திரும்பும் வழியில், பூந்தொட்டிகளை விற்றுக்கொண்டிருந்த ஒரு வியாபாரியை தெருவில் கண்டார். லாக்டௌன் காரணமாக அந்த வியாபாரி வட இந்தியாவில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்ப வேண்டி இருந்தது. அவரிடம் இருந்த 100 பூந்தொட்டிகளையும் ஒரு தொட்டிக்கு 65 ரூபாய் எனக் கணக்கிட்டு மொத்தமாக வாங்கிக்கொண்டார்.
அனைத்துத் தொட்டிகளையும் செடிகளையும் மொட்டை மாடிக்குக் கொண்டு செல்ல மூன்று நாள்கள் ஆனது. அவரது கணவரும் மற்றவர்களும் உதவி செய்தனர். கிரணா அடுத்த சில நாள்களில் மல்லிகைச் செடிகளை மண் தொட்டியில் போட்டு தன் மொட்டை மாடியில் வரிசையாக அடுக்கினார்.
கிரணாவும் அவரின் கணவர் மகேஷும் அடுத்த மூன்று மாதங்களில் செடிகளை நன்கு கவனித்து பராமரித்தனர். 150 பூந்தொட்டியில் மல்லிகை உட்பட பூச்செடிகளை நட்டு, வளர்த்த இவர்கள் ஆறு மாதங்களில் மகசூல் பெற ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் மூன்று மாதங்களில், 85,000 ரூபாய் வரை சம்பாதித்துள்ளனர். தொடர்ந்து வருமானம் பார்த்து வருகின்றனர்.
இந்த வெற்றி குறித்து தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட கிரணா கூறுகையில், ``எனக்கு எப்போதுமே ஒரு நிலத்தை சொந்தமாக வைத்து அதில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. நகர்ப் பகுதியில் வசிக்கும் பெண்ணாக இருந்ததால், அந்தக் கனவு நனவாகவில்லை. ஆனால், கொரோனா பொதுமுடக்கம் எனக்கு அந்த வாய்ப்பைத் தந்தது. அப்போது விவசாயத்தைப் பற்றி அதிக நேரம் சிந்திக்க ஆரம்பித்தேன். அதற்கான பணியை ஆரம்பித்தேன். கோவிட் காலத்தில் மக்கள் நோயால் போராடிக்கொண்டிருக்கும்போது நீ ஏன் பூக்களை வளர்ப்பதில் நேரத்தைப் போக்குகிறாய் என்று என்னிடம் பலரும் கேட்டார்கள்.
ஒரு வக்கீலான உன்னால் விவசாயியாக என்ன செய்ய முடியும் என்று என் கணவரும் கேட்டார். ஆனால், விடாப்பிடியாக இருந்து, தாவரத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ச்சி செய்தேன்.
மொட்டை மாடியில் இடவசதி உள்ளதால், மாடித் தோட்டம் எப்படி செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள ஆன்லைனில் அதிக நேரம் செலவிட்டேன். மாடித் தோட்டம் மிகவும் எளிமையானது என்பதைப் புரிந்துகொண்டேன். இதில் பொறுமையும் தாவரங்களை வளர்ப்பதில் விருப்பமும் முக்கியமாக இருக்க வேண்டும்.
மங்களூருவில் உள்ள சஹ்யாத்ரி நர்சரியின் உரிமையாளரான ராஜேஷ்தான் நான் வளர்க்கக்கூடிய செடியை எனக்கு அடையாளம் காண உதவினார். பூக்களின் புத்துணர்ச்சியே அதன் நறுமணத்தைத் தீர்மானிக்கிறது, செடிகள் வளர்ந்து பூக்களை பறிப்பதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
செடிகள், தொட்டிகள், உரம் என சுமார் 12,000 ரூபாய் முதலீட்டில், மல்லிகைப் பூக்களை சாகுபடி செய்து விற்பனை செய்ததில் இப்போது நன்கு சம்பாதிக்கிறேன். தினமும் காலையில் மல்லிகை செடியில் பூப்பறித்து, சரத்தில் கட்டி சந்தைக்குக் கொடுப்பேன். எனது வழக்கறிஞர் தொழிலையும் கவனித்துக்கொண்டு, மல்லிகை சாகுபடியிலும் வருமானம் பார்த்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு மூட்டை உரம் வாங்குவது என்பது புதிய ஆடைகள் அல்லது நகைகளை வாங்குவதற்கு ஒப்பானது.
மல்லிகை வளர்ப்பது கடினம் அல்ல, நாம் செய்ய வேண்டியது நேரத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும். வாழ்க்கையைப் பற்றி குறை கூறுவதைவிட, நேரத்தை ஒதுக்கி செயல்பட வழிகளைக் கண்டறிய வேண்டும். நான் ஆரம்பிக்கும்போது என் தங்கைகள் செய்த கேலிக்கூத்துகளுக்கு, இன்று அவர்கள்தான் எனக்கு பூக்களை சரம் போட உதவுகிறார்கள். சொல்லப்போனால், நான் மல்லிகைச் செடிகள் வளர்த்த விதம் அவர்களை ஈர்த்தது... இன்று அவர்களும் மல்லிகை சாகுபடியைத் தொடங்கியுள்ளனர்” என்று நிறைந்த மனதுடன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
source https://www.vikatan.com/news/agriculture/the-idea-of-a-female-lawyer-jasmine-on-the-terrace-monthly-income-rs85000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக