`சுதந்திரத்திற்கு காங்கிரஸ் நிறைய தியாகங்களை செய்துள்ளது. ஆனால் பாஜக எதுவும் செய்யவில்லை’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பாஜக மீது விமர்சனம் வைத்து இருந்தார். இதற்கு பதில் அளித்திருக்கும், தமிழக பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், ``ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் தியாகத்தால் தான் தற்போது இந்தியா எழுந்து நிற்கிறது. ஆர்எஸ்எஸ் என்பது பிறந்ததே சுதந்திரப் போராட்டத்திற்காக தான்" என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழக பாஜக சிந்தனையாளர் பிரிவு சார்பில் தமிழ்நாடு உரையாடல் - 2022 என்ற சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தேஜஸ்வி சூர்யா, "கம்யூனிஸ்ட் கட்சியும், நீதிக்கட்சியும் அந்நிய நாடுகளில் இருந்து உருவான சித்தாந்தம் கொண்டவை. இந்திய சிந்தனையை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்ட ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ் தான்" என பேசினார்.
சமீபத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தேசபக்தி, தெய்வபக்தி, ஆன்மிகம், கட்டுப்பாடு, நேர்மை, ஒழுக்கம் ஆகியவைகளையே உயிர்மூச்சாக கொண்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியை கண்டு அஞ்சி, நடுங்கிக் கொண்டிருக்கின்றன திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள்" என்று தெரிவித்திருக்கிறார். இதுபோல் தொடர்ச்சியாக மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஆர்எஸ்எஸ்-க்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்கள். சமீப நாள்களாக இப்படி அதிகமாக முன்னிலைப்படுத்துவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, ``ஜனசங்கம், பாஜக-வின் மூலவேர் ஆர்எஸ்எஸ்தான். இதன் சித்தாந்தத்தின் கீழ் தான் பாஜக தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. இது உலகறிந்த உண்மை. ஆர்எஸ்எஸ்ஸின் சகாக்கள் தான் கொஞ்சம், கொஞ்சமாக அரசியல் படுத்தப்பட்டு வருகிறார்கள். மோடி, அமித் ஷா, யோகி ஆதித்தியநாத் ஆகியோரை பார்க்கமுடிகிறது. ஒரு கொள்கை, லட்சியம் என்று வரும் போது, அவர்கள் அனைவரும் அடிப்படை நிலைகளில் இருந்து ஒருபோதும் மாறமாட்டார்கள்.
ஆர்எஸ்எஸ்ஸின் மூல சித்தாந்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அவர்களின் பயணம் இந்தியா என்பது இந்துநாடு என்பதை நோக்கிய பயணம் தான். இதன் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் வேறு பாஜக வேறு என்று நம்மால் பிரித்து பார்க்க முடியாது. மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் சூழலில் தங்களுடைய அதிகாரத்தை பகிரங்கப்படுத்துவதற்கு பாஜக முயன்று விட்டது. அதற்கான குறியீடாக தான் நாம் இதை பார்க்க வேண்டும்.
பாஜக - ஆர்எஸ்எஸ்-க்குள் பிரச்னை வரும். கடுமையாக பாஜகவை ஆர்எஸ்எஸ்-யை சேர்ந்தவர்கள் முழுமையாக விமர்சனம் செய்வார்கள். ஆனால் கடைசியாக எல்லோரும் ஒன்றுபட்டுவிடுவார்கள். இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது. சில நேரங்களில் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்கும். எனினும் மோதலாக மாறி பிரிவினை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்காது. பொதுவெளியில் பிரச்னை வரும் போது பேசி தீர்த்துக்கொள்வார்கள்" என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்த்த லெனின், "ஆர்எஸ்எஸ்-ன் அரசியல் பிரிவு தான் பாஜக. மேலும் பாஜக-வின் முடிவுகளை அந்த கட்சி எடுக்க முடியாது. ஆர்எஸ்எஸ் தான் எடுக்கும். பாஜக முழுவதையும் ஆர்எஸ்எஸ் குடும்பம் தான் கட்டுப்படுத்துகிறது. இது ஒரு பாசிச அமைப்பு. வகுப்பு வாத வெறி பிடித்து அதை ஒரு அரசியலாக்கி கலவரங்கள் மூலம் வெற்றி பெறுவதற்கு பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் உதவி செய்கிறது.
ஏற்கெனவே ஆர்எஸ்எஸ், சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதமராக இருக்கும் போது தடை செய்யப்பட்டது. அப்போது அரசியலில் ஈடுபடமாட்டோம் என்று தெரிவித்தார்கள். ஆனால் இன்று மைய அரசியலையே ஆட்டி படைக்கும் வகையில் வந்திருக்கிறது. இந்தியாவுக்கு பெருந்தன்மையான, ஜனநாயகமான நாடு என்ற புகழ் இருக்கிறது. இவர்களுடைய செயல்பாடுகளால் அந்த புகழ் மங்க தொடங்கிவிட்டது. எனவே தான் பலரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்" என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, "எப்பொழுதுமே பாஜக கட்சி ஆர்எஸ்எஸ் க்கு ஆதரவு தான். ஏனெனில் ஆர்எஸ்எஸ் எங்களுடைய தாய். தாய்க்கு ஆதரவாக பேசுவது என்பது இயல்பு தானே. அதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. தவறு செய்பவர்களுக்கு காவல் துறையை கண்டால் நடுக்கத்தான் செய்வார்கள். ஆர்எஸ்எஸ் என்பது ஒரு ராணுவம் போன்றது, காவல் துறை போன்றது. அதனால் தவறு செய்பவர்கள் பயம் கொள்ளத்தான் செய்வார்கள். அதை சரியில்லை என்று தான் சொல்வார்கள்" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/bjp-supports-rss-increases-in-recent-days-what-was-the-political-reason
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக