திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் போக்குவரத்து போலீஸார் கடந்த வாரம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த தமிழ்செல்வன் (31) என்பவரை சோதனையிட்டதில், அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.
இதனால், தமிழ்ச்செல்வன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார், அவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தனர். ஒரு வாரமாக ரூ.10 ஆயிரம் அபராதத்தை செலுத்த முடியாமல் தமிழ்ச்செல்வன் இருந்துள்ளார்.
வாகனம் கிடைக்காததால் ஆத்திரத்தில் இருந்த தமிழ்ச்செல்வன், போலீஸாரை பழிவாங்கத் திட்டமிட்டு, காங்கயம் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் காவல் நிலையம் முன்பாக நின்றிருந்த காவலர் ரமேஷ் என்பவரின் இருசக்கர வாகனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தீ வைத்தார். மேலும், இதை வீடியோவாக எடுத்து தனது நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளார்.
இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிவது குறித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்தது. போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், தமிழ்ச்செல்வன், காவலரின் இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக தமிழ்ச்செல்வனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ``எனது வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தததாலும், அபராதம் கட்ட முடியாத காரணத்தால் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது. எனது வாகனத்தைப் பறித்த போலீஸாரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ரமேஷின் வாகனத்துக்கு தீ வைத்தேன்” எனத் தெரிவித்தார். இதையடுத்து, தமிழ்ச்செல்வனை போலீஸார் கைது செய்தனர்.
source https://www.vikatan.com/news/crime/a-youth-set-fire-to-policemans-vehicle
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக