Ad

செவ்வாய், 20 டிசம்பர், 2022

`அர்த்த சாஸ்திரம்... அதானி துறைமுகம்’ - போதை பொருள் குறித்து நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன்

போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல், அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து 193 விதியின் கீழ் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி பேசினார்.

சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன் பேசும்போது, "இந்த விவாதத்தில் போதையினால் ஏற்படும் பாதிப்புகள், ஆபத்துகளை பற்றி பலரும் பேசினார்கள்.

போதை மறுவாழ்வு என்பது எவ்வளவு கடினமானது, குறிப்பாக புதிய தலைமுறையினர், பள்ளி குழந்தைகளை குறி வைத்து நடக்கிற இந்த வணிகம், அது ஏற்படுத்துகிற பாதிப்புகள் கல்வி நிலையங்களில் மன அழுத்தம் நிறைந்த மாணவர்களை நோக்கி இவர்கள் எப்படி காய்களை நகர்த்துகிறார்கள் என்பதை பார்ப்போம்.

மாணவனை தங்கள் வலையில் விழ வைத்து, பிறகு அவன் மூலம் பெரிய நெட்வொர்க் ஏற்படுத்துகிறார்கள். இதிலுள்ள இரண்டு பிரச்னைகள் பற்றி ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதில் ஒன்று, பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி மாணவர்களை போதை அடிமையாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதாக தெரிவிக்கிறார்கள்.

இரண்டாவது அரசு அதிகாரத்திற்கும் போதை வணிகத்துக்கும் இருக்கிற உறவு சார்ந்தது. புதிய தலைமுறையினர் அரசியல்மயப்படுவதை தடுப்பதில், திசை திருப்புவதில் போதைப் பொருள்களுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது.

மக்களை மயங்கி விழ வைக்கிற எந்த ஒன்றும் அரசு அதிகாரத்தினுடைய ஆசி பெற்றதாகத்தான் இருக்க முடியும். இதை நான் சொல்லவில்லை, அர்த்த சாஸ்திரம் மிக விரிவாக பேசுகிறது. பெரும் கூட்டத்துக்குள் பாம்பு நுழைவதைப் போல மக்கள் திரளுக்குள் இவற்றை எப்படி பயன்படுகிறார்கள் என்று என்று அர்த்த சாஸ்திரம் பேசுகிறது.

நாடாளுமன்றம்

அந்தவகையில் அரசு அதிகாரத்திற்கும் போதை வணிகத்திற்குமான உறவு பற்றி இந்த அவை மிக அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான இரண்டு முன்னுதாரணங்களை இங்கே சொல்கிறேன்.

முதலாவது, போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகத்தில் தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க், கடந்த 9 மாதங்களில் 2000 என்டிபிஎஸ் (NDPS) வழக்குகளில் குற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சாதனை புரிந்திருக்கிறார். இதற்காக உயர் நீதிமன்றம் அவரை பாராட்டியிருக்கிறது.

அதேபோல போதைப் பொருள் தடுப்பு பிரச்னைகளில் 1,873 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 1,376 நபர்களுக்கு நன்னடத்தைக்கான பிணை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 69 பேருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி அஸ்ரா கார்க்கை நானும் பாராட்டுகிறேன்.

தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க்

இரண்டாவது மிக மோசமான முன்னுதாரணம், அதானியினுடைய துறைமுகம் சார்ந்தது. குஜராத்தில் உள்ள முந்தரா துறைமுகத்தில் கடந்த ஜூலை மாதம் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பிடிபட்டுள்ளது. 2021 செப்டம்பர் மாதத்தில் 21,000 கோடி மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் மூன்று கண்டெய்னர்களில் வந்து இறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. ஊடகங்களும் தொடர்ந்து எழுப்புகின்றன. ஆனால் தேசிய புலனாய்வு முகமையோ, சுங்கத்துறையோ இது பற்றி வாய்திறக்க மறுப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/su-venkatesan-speech-at-parliament-regarding-drug-usage

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக