Ad

வியாழன், 15 டிசம்பர், 2022

"நான் உயிரோடுதான் இருக்கிறேன்;என் மகன் என்னைக் கொலைசெய்யவில்லை!" - நடிகை வீணா கபூர் விளக்கம்

மும்பையில் வீணா கபூர் என்ற 74 வயது பெண் கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர் மகனால் படுகொலைசெய்யப்பட்டார். வீணாவின் உடல் மாதேரன் மலைப்பகுதியில் வீசப்பட்டது. போலீஸார் மூன்று நாள்கள் தேடுதல் வேட்டை நடத்தி வீணா கபூர் உடலை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அவரின் மகன் சச்சின் கைதுசெய்யப்பட்டார். சொத்துப் பிரச்னையில் இப்படுகொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்தது. வீணாவின் மற்றொரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் தன தாயாருக்கு போன் செய்து பார்த்த போது போன் எடுக்கப்படவில்லை.

இதனால் அவர் மகன் வீணா வசித்த கட்டிட வாட்ச்மேனை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்த பிறகுதான் வீணா கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. வீணா கபூர் என்ற பெயரில் டிவி நடிகை ஒருவர் இருக்கின்றார். ஜூவைச் சேர்ந்த வீணா கபூர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான செய்தி வெளியானவுடன், ஏராளமானோர் நடிகை வீணா கபூர்தான் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று கருதி சமூக வலைதளத்தில் இரங்கல் செய்தி பதிவிட்டனர்.

கொலைசெய்யப்பட்ட வீணா கபூர், மகன் சச்சின்

சிலர் நடிகை வீணா கபூரின் மகனை சமூக வலைதளத்தில் திட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த வீணா கபூர் இது குறித்து மும்பை தீன்தோஷி போலீஸில் புகார் செய்துள்ளார். அதில், "மக்கள் என்னைப்பற்றி தவறான தகவலை சமூக வலைதளத்தில் பரப்புகின்றனர். அதிகமானோர் எனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருவது வேதனையளிக்கிறது.

எனக்கு ஏராளமான அழைப்புகள், மெசேஜ்கள் வந்தவண்ணம் இருக்கிறது. இதனால் எனது பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் சாகவில்லை. என் மகன் என்னை கொலை செய்யவில்லை" என்று அதில் தெரிவித்துள்ளார். நடிகை வீணா கபூர் மகன் அபிஷேக் இது தொடர்பாக அளித்த பேட்டியில், "என் தாயாரை நான் கொலை செய்துவிட்டதாக எனக்கும் ஏராளமான போன் அழைப்புகள் வருகிறது. நான் கனவில்கூட அது போன்று நினைத்ததில்லை. எனது தாயாரை நான் மிகவும் நேசிக்கிறேன்.

தயவு செய்து வதந்தியை பரப்பாதீர்கள். எனது அம்மா உயிருடன் தான் இருக்கிறார். அவரை நான் கொலை செய்யவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். வதந்தியை யார் பரப்பியது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வீணா கபூரும், நடிகை வீணா கபூரும் சேர்ந்து ஒரு பஞ்சாபி டிவி சீரியலில் இணைந்து நடித்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/india/im-alive-my-son-didnt-kill-me-actress-veena-kapoor-explains

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக