Ad

திங்கள், 19 டிசம்பர், 2022

கர்நாடகா: காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் தற்போதைய, மாநிலத்தலைவருமான டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், 2014 முதல் 2019 வரையில், மருத்துவக்கல்வித்துறை, நீர் வளத்துறை அமைச்சராக இருந்தார். அவர், மின்துறை அமைச்சராக இருந்தபோது, 2017 ஆகஸ்டு மாதம் அவர்மீது வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பு செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு சொந்தமான மற்றும் அவருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்கள் என, கர்நாடகா, டெல்லி பகுதிகளில், 70 இடங்களில் சோதனை செய்து, கணக்கில் வராத 8.59 கோடி ரூபாய் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

சிவக்குமார் கைது செய்யப்பட்டபோது.

‘2013-ம் ஆண்டில் 251 கோடி ரூபாயாக இருந்த சிவக்குமாரின் சொத்து, 2018-ம் ஆண்டு 840 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,’ எனக்கூறிய சிபிஐ, 2018–ல், சிவக்குமார் ஊழல் செய்ததாக அவர் மீது வழக்கும் பதிவு செய்தது.

2019 செப்டம்பர் மாதம், பல கட்ட விசாரணைக்குப்பின், அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. பின் அவர் பெயிலில் வெளிவந்த நிலையில், இச்சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின், காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி, 2020-ல் அவர் கர்நாடக மாநிலத்தலைவராக பொறுப்பேற்றார்.

சிவக்குமார் கைது செய்யப்பட்டபோது.

2017 முதல் இதுவரையில் அவ்வப்போது, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை சரிபார்ப்பதுடன், அவரின் சொத்துக்கள் உள்ள இடங்களுக்கு வந்து நேரடியாக பலமுறை விசாரணை நடத்தியுள்ளனர்.

பெங்களூரில் சிபிஐ விசாரணை...

இந்த நிலையில், நேற்று காலை முதல் மாலை வரையில், பெங்களூரு பகுதியில் சிவக்குமாருக்கு தொடர்புடையதாக கருதப்படும் சொத்துக்கள் உள்ள பகுதிகள், பெங்களூரில் சிவக்குமாரின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் குளோபல் அகாடமி ஆப் டெக்னாலஜி கல்லுாரி, மற்றும் சில கல்வி நிறுவனங்களுக்கு வந்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இரண்டு மாதங்களுக்கு முன்பு விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால், கர்நாடக காங்கிரஸ் வட்டாரம் பரபரப்பில் மூழ்கியுள்ளது.

சிவக்குமார்.

இச்சம்பவம் குறித்து, சிவக்குமார் பெலகாவியில் நிருபர்களிடம், ‘‘சிபிஐ அதிகாரிகள் பெங்களூரு பகுதியிலுள்ள சில கல்வி நிறுவனங்களில் பார்வையிட்டுள்ளனர். அவர்கள் என்ன தேடுகிறார்கள் என எனக்குத்தெரியவில்லை,’’ என, கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

‘தேர்தல் நெருங்கும் போது, எதிர்கட்சியினர் மீது ரெய்டு நடத்தி, அவர்களை ஊழல் புகார்களில் சிக்கவைப்பதை பாஜக வாடிக்கையாக கொண்டுள்ளது,’ என, அரசியல் விமர்சகர்களும், எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து பாஜக–வை குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்து உள்ளது பேசுபொருளாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க... கர்நாடக அரசியல் களத்தில் காட்டுத்தீ பரவியது போல, நாள்தோறும் ஏதாவதொரு பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/cbi-officials-probe-at-places-related-to-congress-state-president-shivakumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக