Ad

வெள்ளி, 16 டிசம்பர், 2022

இது சபரிமலை சீசன் - ஐயப்ப படி பூஜை செய்வது எப்படித் தெரியுமா?! வாங்க தெரிஞ்சிக்கலாம்!

ஐயப்ப சீசனின் நடுப்பகுதிக்கு வந்து விட்டோம். மார்கழியும் பிறந்துவிட்டது. 48 நாள்கள் விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் ஐயப்பனுக்கான படி பூஜை செய்யும் நாள்கள் இது. ஆம், சபரிமலையில் 18 படி கடந்து ஐயப்பனை நாம் தரிசிப்போம். அதை நினைவுகூரும் வகையில் நமது இல்லங்களிலேயே கன்னி சாமியாக இருப்பவர்களும் மலைக்குப் புறப்படும் அனைத்து சாமிமார்களும் குருசாமியின் வழிகாட்டுதலுடன் வீட்டிலேயே 18 படிகளை ஆவாகனம் செய்ய வேண்டும்.

18-வது படியில் ஐயப்பனின் திருவுருவ சிலையையோ அல்லது புகைப்படத்தையோ வைத்து வலது புறத்தில் கன்னி மூலை கணபதியான விநாயகர் படத்தினை ஆவாஹனம் செய்து, இடதுபுறத்தில் மாளிகைபுரத்து அம்மனை ஆவாஹனம் செய்து நமது வீட்டையே சபரிகிரியாக நினைத்து வழிபாடு நடத்த வேண்டும். இதுவே காலம் காலமாக ஐயப்ப பூஜையில் நடந்து வரும் சாஸ்திர முறையாக உள்ளது.

படி பூஜை

இந்த படி பூஜை என்பது வீட்டில் நடைபெறும் பொழுது ஒரு சில விரத அனுஷ்டானங்களை சுவாமிமார்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதில் ஐயப்பனை ஆவாஹனம் செய்யும் இடம் மிகவும் தூய்மையான ஓர் இடமாக இருக்க வேண்டும். அது வீடாகவும் இருக்கலாம் அல்லது கோயிலாகவும் இருக்கலாம், எதுவாக இருப்பினும் அவரவர் வசதிக்குத் தகுந்தார் போல் ஐயப்பன் சிலையையோ அல்லது புகைப்படத்தையோ வைத்து அதற்கு மாலைகள் மற்றும் தோரணங்களால் நன்கு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாகச் செயற்கையாக மரப்பலகைகளில் 18 படிகளை வைத்து ஐயப்ப படிகளை நாம் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் 18 படிகளிலும் கற்பூரம் ஏற்றும்பொழுது அனைத்து படிகளிலும் சிறிய சிறிய வாழை இலைகளை வைத்து கற்பூரம் ஏற்றுதல் சாலச் சிறந்தது. இல்லையெனில் படிகள் சிதிலமடைந்து விடும்.

பூஜைக்குத் தேவையான அனைத்தையும் முதல் நாளே தயார் செய்து வைத்துக் கொண்டு மறுநாள் படி பூஜைக்கான நைவேத்திய உபச்சாரங்கள் மற்றும் அன்னதானங்களுக்குத் தேவையான சமையல்களைச் செய்வது சிறந்தது. படி பூஜை செய்யும் நாளில் மாலை 4 மணிக்கு ஐயப்பனின் படி பூஜையைத் தொடங்குவது நல்லதாக அமையும். இந்தப் படி பூஜையில் முதலில் நாம் விநாயகருக்கான துதிகளையும் முருகனுக்கான துதிகளையும் பாடிய பின் மாளிகைபுரத்து அம்மனை பூஜை வடிவில் ஆவாஹனம் செய்தல் வேண்டும். இதன் பிறகு ஐயப்ப பூஜையைத் தொடங்குதல் வேண்டும்.

ஐயப்பன்

'லோக வீரம் மகா பூஜ்யம்

சர்வ ரக்ஷா கரம் விபும்

பார்வதி ஹ்ருதயானந்தம்

சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்!

ஓம் சாமியே சரணம் ஐயப்பா!

விப்ர பூஜ்யம் விஸ்வ வந்தயம்

விஷ்ணு சம்போ பிரியம் சுதம்

ஷிப்ரப் பிரசாத நிரதம்

ப்ரணமாம்யஹம்!

ஓம் சாமியே சரணம் ஐயப்பா

பூதநாத சதானந்த

சர்வ பூத தயாபர

ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ

சாஸ்த்ரே திவ்யம் நமோன் நமஹ

ஓம் சாமியே சரணம் ஐயப்பா!"

என்ற சாஸ்தா பஞ்சரத்னத்தை குரு சுவாமி துதிக்க மற்ற சுவாமிமார்கள் துதித்து பின் ஐயப்பனின் 108 சதநாமாவளியை துதிக்க வேண்டும்.

108 சதநாமாவளியில் ஒவ்வொரு நாமத்தைக் கூறும்போதும் ஐயப்பனின் திருவுருவத்திற்கு முன்பு துளசி மற்றும் கதம்ப பூக்களை அர்ச்சனைகளாக ஒருவர் தூவுதல் வேண்டும். பின்பு காயத்ரி மந்திரம் மற்றும் சிவ, பிரம்ம, விஷ்ணு மந்திரங்களைக் கூறியபடி பூஜையை நிறைவு செய்து பின் ஐயப்பனின் பாடல்கள் பிறவற்றைப் பொதுமக்களைப் பாட வைக்கலாம். அனைத்து படிகளுக்கும் கற்பூரம் ஏற்றி ஒவ்வொரு படிகளுக்கும் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கூறி படி பாடலைப் பாடலாம். இதில் முக்கியமாகப் பாவமன்னிப்பை ஐயப்பனிடம் மனமுருகக் கேட்க வேண்டும்.

ஐயப்பன் திருக்கோயில்

பின்பு படி மற்றும் ஐயப்பனுக்கு நெய் வேத்தியங்களைப் படைத்த பின் பஞ்ச தீபம் கொண்டு தீபாரதனை செய்த பின்னர் அன்னதானத்தைத் தொடங்கலாம். இத்தகைய முறையான படி பூஜை காரணமாக ஐயப்பனின் சகல விதமான அருளையும் பெற முடியும். கன்னிசாமிகள் கலந்து கொள்வதும் அவர்களுக்கு முதல் மரியாதை அளிப்பதும் இந்தப் பூஜையில் அவசியம். வீட்டுக்கு வரும் ஐயப்ப சாமிகள் எல்லோரும் ஐயப்பனின் வடிவம் என்பதால் அவர்களுக்குப் பாதபூஜை செய்து வரவேற்றல் அவசியம். அன்னதானப் பிரியனான ஐயப்பனை மகிழ்விக்க ஆதரவில்லாத சிலருக்கேனும் உணவளித்தல் சிறப்பு!

சுவாமியே சரணம் ஐயப்பா!



source https://www.vikatan.com/spiritual/gods/a-complete-guide-to-perform-lord-ayyappan-padi-puja-this-margazhi-season

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக