Ad

செவ்வாய், 20 டிசம்பர், 2022

5 நிதி ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வராக் கடன் தள்ளிவைப்பு... யாருக்கு பயன்?!

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை மீட்டுவருவோம் என்று எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அவரது ஆட்சியில் வங்கிகளில் கடன்களாக வழங்கப்பட்ட ரூ. 10 லட்சம் கோடி வட்டியாகவும் அசலாகவும் வங்கிகளுக்கு வரவில்லை.

மோடி

இந்த விவரத்தை நாடாளுமன்றத்தில் தற்போது தெரிவித்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர், ‘கடந்த 5 நிதியாண்டுகளில் வங்கிகளில் ரூ.10.09 லட்சம் கோடி வராக்கடன் தள்ளிவைக்கப்பட்டுள்ளது’ என்று மாநிலங்களவையில் தெரிவித்திருக்கிறார்.

பெரு நிறுவனங்கள், தொழிலதிபர்களுக்கு வங்கிகள் தாராளமாக கடன் வழங்குகின்றன. அவற்றை வங்கிகளால் திரும்ப வசூலிக்க முடியவில்லை. அது, வராக்கடன் என்று தள்ளிவைக்கப்படுகிறது. மெகுல் சோக்‌ஷி, ஜுன்ஜுன்வாலா, விஜய் மல்லையா உள்பட சுமார் 50 வாராக்கடன்தாரர்களின் ரூ.68,607 கோடி வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையானது.

விஜய் மல்லையா

மத்திய அரசு பெரும் நிறுவனங்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்கிறது என்று யாராவது விமர்சனம் வைத்தால், அவர்கள் மீது பா.ஜ.க-வினர் பாய்ந்து விமர்சனம் வைப்பார்கள். ‘அதை, தள்ளுபடி என்று சொல்லக்கூடாது. அதை, வராக்கடன் என்று சொல்ல வேண்டும்’ என்கிறார்கள். அந்த வகையில்தான், கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் வழங்கப்பட்ட ரூ. 10 லட்சம் கோடி வங்கிக் கடன்கள் திரும்பி வராமல், அதை தற்போது வராக்கடன் என்று தள்ளிவைத்திருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில், வராக்கடன் தள்ளுபடி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “வங்கிகளில் வசூலிக்கப்படாத கடன்கள் நான்கு ஆண்டுகளைப் பூர்த்தி செய்ததும் அவை ‘தள்ளிவைக்கப்படுவது’ வழக்கம். அத்தகைய வராக்கடன்கள், சம்பந்தப்பட்ட வங்கியின் வரவு செலவு குறிப்பில் இருந்து நீக்கப்படும். இது, ஒரு வழக்கமான நடைமுறையே. இதன்படி, கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10 லட்சத்து 9,511 கோடி வராக்கடன் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 நிதியாண்டுகளில் தள்ளிவைக்கப்பட்ட கடன் கணக்குகளில் இருந்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 36 கோடி மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மேலும், வராக்கடன்களுக்கு காரணமான, பொறுப்பின்றி செயல்பட்ட 3,312 வங்கி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தள்ளிவைக்கப்பட்ட வராக்கடன்களை வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால், தள்ளிவைக்கப்பட்ட கடன்களை மீட்பது அவ்வளவு எளிதான அல்ல. இவ்வாறு தள்ளிவைக்கப்பட்ட கடன்கள் பெரும்பாலும் வசூலிக்கப்பட்டதே இல்லை என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

இத்தகைய தள்ளிவைப்பு நடவடிக்கையால் லாபமடையப்போவது கடனை கட்டாத ஏமாற்று பேர்வழிகள்தானோ என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. கூடவே, இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு துணைபுரிந்த அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் நிச்சயம் பயனடைவார்கள் என வேதனை தெரிவிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்..!



source https://www.vikatan.com/government-and-politics/governance/who-will-be-the-beneficiary-in-bank-fraud-and-npa

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக