தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். அதற்குப் பின்னால், சீனா போர் விமானங்களை அனுப்பியதால், தற்போது அங்கு போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. தங்களை அச்சுறுத்திவருவதாக சீனா மீது தைவான் குற்றம்சாட்டியிருக்கிறது.
1927-ம் ஆண்டு முதல் 1949 வரை சீனாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதன்பிறகு, பல தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய தைவான், தனிநாடாக உருவெடுத்தது. அந்த நாட்டை சீனா அங்கீகரிக்க மறுக்கிறது. இப்போதும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதிதான் என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், தைவானுடன் மற்ற நாடுகள் நட்பு பாராட்டுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.
உலக அரசியலில் இரு துருவங்களாக அமெரிக்காவும் சீனாவும் இருந்துவரும் நிலையில், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துவருகிறது. சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி, தைவானுடனான நட்புறவை அமெரிக்கா தொடர்ந்துவருகிறது. மேலும், சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது அமெரிக்கா. இந்தச் சூழலில், சீனாவின் எதிர்ப்பை மீறி கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி நான்சி பெலோசி தைவான் சென்றார். அவரது பயணத்தையொட்டி, ஒரு விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்ட நான்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் தைவானின் கிழக்கே நிலைநிறுத்தப்பட்டன. யுஎஸ்எஸ் ரொனால்டு ரீகன் என்ற விமானம் தாங்கி கப்பல், தென் சீனக் கடலைக் கடந்து பிலிப்பைன்ஸ் கடலில் நிலைநிறுத்தப்பட்டது. என்று அமெரிக்க கடற்படை அதிகாரி செவ்வாயன்று ராய்ட்டர்ஸிடம் உறுதிப்படுத்தினார். அது, சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, சீன ராணுவம் தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து மிகப்பெரிய அளவில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவின் பயிற்சி தங்கள் மீது போர் தொடுப்பதற்கான ஒத்திகை என்று தைவான் குற்றம் சாட்டியது. இதனால், இரு நாடுகள் இடையே போர்ப் பதற்றம் உருவானது. இந்த நிலையில், தைவானுடனான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சட்ட மசோதா ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தைவான் வரவேற்க, சீனா அதை வன்மையாக கண்டித்தது. மேலும், தைவானை மிரட்டும் விதமாக கடந்த வாரம் தைவானை நோக்கி 39 போர் விமானங்களையும், மூன்று போர்க் கப்பல்களையும் சீனா அனுப்பியது. இதனால், இரு நாடுகளின் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் உருவானது.
தைவானை சுற்றிய வான் பரப்பிலும், நீர்ப் பரப்பிலும் கடுமையான போர்ப்பயிற்சியில் ஈடுபட்டதாக சீன ராணுவம் கூறியது. அமெரிக்காவிடமிருந்தும் தைவானிலிருந்தும் அதிகரித்துவரும் ஆத்திரமூட்டலுக்கு சீன ராணுவத்தின் உறுதியான பதில் இதுதான் என்று சீன ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாக்க சீன ராணுவம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
இந்த நிலையில், டிசம்பர் 25-ம் தேதி காலை 6 மணியிலிருந்து டிசம்பர் 26-ம் தேதி காலை 6 மணி வரை தைவானை நோக்கி 71 போர் விமானங்களையும், ஏழு போர்க் கப்பல்களையும் சீனா அனுப்பியதாக தைவான் ராணுவ அமைச்சகம் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த நிலையில், தனது இறையாண்மையையும் நாட்டின் எல்லையையும் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று சீன ராணுவம் கூறியிருக்கிறது.
சீனாவின் போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் தைவானை சுற்றிவளைத்திருந்தாலும், அது போராக மூளுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கருதப்படுகிறது. தைவான் கூறுவதைப்போல, அந்த நாட்டை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு நடவடிக்கையில் சீனா இறங்கியிருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/international/chinas-military-drill-near-taiwan-create-war-situation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக