Ad

வியாழன், 15 டிசம்பர், 2022

`யூடியூப் மூலம் வாக்கி டாக்கி சத்தம்; ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி பணம் பறிப்பு’ - 4 இளைஞர்கள் கைது

கரூர் தான்தோன்றிமலை, குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர். இவர், கால் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரை கடந்த வாரம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், 'ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் குழுவில் நீங்கள் இணைந்துள்ளீர்கள். இது தொடர்பாக, சென்னை தாம்பரம் சைபர் க்ரைம் குற்ற பிரிவிலிருந்து விசாரணைக்கு புகார் தொடர்பாக அழைக்கிறோம்' என்று கூறியுள்ளார். அதோடு, 'உங்கள் மீதான புகார் தொடர்பாக மேல் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க, ரூபாய் 5,000 கூகுள் பே மூலம் அனுப்புங்க' என்று தூண்டில் போட்டிருக்கிறார். ஆபாச படம், க்ரைம் போலீஸ் என்று பயமுறுத்தியதும், அச்சத்தில் சுரேந்தர் 5000 ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், விடாத அந்த மர்ம நபர், மேலும் கூடுதல் தொகை வேண்டுமென மிரட்டல் விடுத்ததால், சந்தேகம் அடைந்த சுரேந்தர், ட்ரூ காலர் மூலம் அழைப்பு வந்த விவரங்களை ஆராய்ந்து பார்த்திருக்கிறார். அப்போது, அந்த தொடர்பு எண், பலரால் புகார் செய்யப்பட்ட ஸ்பாம்(Spam) எண் செய்த எண் என்பதால், கரூர் சைபர் க்ரைம் காவல் துறையில் விசாரித்தார்.

கைதான சந்தன சொர்ணகுமார்

ஆனால், 'அப்படியெல்லாம் சைபர் க்ரைமில் இருந்து அழைக்கமாட்டார்கள்' என்று சொல்ல, அப்பொழுது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கால் டாக்ஸி டிரைவர் சுரேந்தர், கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட கரூர் மாவட்ட காவல்துறையினர், இது தொடர்பாக அழைப்பில் வந்த செல்போன்கள் மற்றும் கூகுள்பே பயன்டுத்தும் எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றை ஆய்வு செய்ததனர். அப்போதுதான், சுரேந்தரை ஏமாற்றியது கோவையை சேர்ந்த கௌதம் சித்தார்த் (19), மாதவன் (19), சந்தன சொர்ணகுமார் (19), ஜான் பீட்டர் (19) ஆகி நான்கு இளைஞர்கள் என்பது தெரியவந்தது. நால்வரும் சேர்ந்து கூட்டாக திட்டமிட்டு, போலீஸார் என கூறி பணம் பறித்ததை கண்டறிந்தனர். சுரேந்தரிடம் போனில் பேசும்போது, பின்னணியில் மற்றொரு போன் மூலம் யூடியூப்பில் இருந்து வாக்கிடாக்கி சத்தம் கேட்பது போல செய்து, போலீஸ் ஸ்டேஷன் அட்மாஸ்பியரை கொண்டு வந்தததும் தெரியவந்தது. இது தொடர்பாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 4 இளைஞர்களையும், கரூர் மாவட்ட சைபர் க்ரைம் குற்றப்பிரிவு ஆய்வாளர் அம்சவேணி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.



source https://www.vikatan.com/news/crime/kovai-boys-cheated-in-the-name-of-cyber-crime-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக