பீகாரில் மது விலக்கு கொள்கை அமலில் இருக்கிறது. ஆனால் கள்ளச்சாராயம் தாராளமாக கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குறிப்பாக கிராமங்களில் கள்ளச்சாராயம் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கிறது. போலீஸாரால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அமலில் இருக்கும் இந்த மது விலக்கு கொள்கையால் அடிக்கடி கள்ளச்சாராயத்தை குடித்து பலரும் உயிரிழந்து வரும் நிகழ்வும் நடக்கிறது.
புதிதாக சப்ரா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த இரண்டு நாள்களாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 65 பேர் உயிரிழந்துவிட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர்நிதிஷ் குமார், ``கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க முடியாது. கள்ளச்சாராயத்தை குடித்தால் இறந்துதான் போவார்கள். மது விலக்கு அமலில் இல்லாத மாநிலங்களிலும் கள்ளச்சாராயம் குடித்து அதிகமானோர் உயிரிழக்கத்தான் செய்கின்றனர்.
அதில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. இது தவிர உத்தரப்பிரதேசம், ஹரியானாவிலும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அங்கு கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்தால் அதை மட்டும் பத்திரிகையில் வெளியிட மறுக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் மாநிலத்தில் நடந்தால் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். இதுவே குஜராத்தில் பாலம் இடிந்தது குறித்து ஒரு செய்தி மட்டும் வெளியிட்டு இருந்தீர்கள். இதுவே மேற்கு வங்கத்தில் நடந்தால் அதனை பெரிய அளவில் விளம்பரப்படுத்துகிறார்கள். யாராவது மதுவுக்கு ஆதரவாக பேசினால் அது உங்களது நன்மைக்கானதாக இருக்காது. கள்ளச்சாராயம் குடித்தால் இறந்துபோவீர்கள் என்று சொல்கிறோம். அப்படி இருந்தும் குடித்தால் நாங்கள் இழப்பீடு கொடுக்க வேண்டுமா? அது நிச்சயம் நடக்காது” என்று தெரிவித்தார். நிதிஷ் குமாரின் இந்த அறிவிப்பு கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக மனித உரிமைகள் கமிஷன் பீகார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
source https://www.vikatan.com/news/india/65-people-died-after-drinking-illicit-liquor-in-bihar-nitish-kumar-refuses-to-pay-compensation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக