கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளில் விதிகளை மீறி மணல் எடுப்பதால் கல்லணைக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது என்றும் கொள்ளிடம் ஆற்றை பாதுக்காக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் விவசாயிகள் கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் சாத்தனூர், மருவூர், வீரமாங்குடி, கோவிந்தநாட்டுச்சேரி ஆகிய நான்கு ஊர்களில் அரசு மணல் குவாரி அமைத்துள்ளது. கொள்ளிடம் திருச்சென்னம்பூண்டியில் ஏற்கெனவே மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் எடுக்கப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் வரை அதன் உரிமம் இருப்பதால் அனுமதிக்கப்பட்ட இடம் மற்றும் அளவையும் தாண்டி விதியை மீறி மணல் கொள்ளை நடப்பதாக சொல்லப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களின் நீர் ஆதரமாக திகழும் கல்லணையிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலையில் உள்ள கோவிலடி உள்ளிட்ட பகுதிகளில் மணல் எடுக்கப்படுகிறது. இதனைஅதிகாரிகள் துளியும் கண்டு கொள்ளவில்லை. இதனால் சோழர்களின் அடையாளமான கல்லணையின் பாதுகாப்பு கேள்வி குறியாகியிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விளாங்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கொள்ளிடம் ஆற்றை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்கவும், மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து காவிரி பாதுகாப்பு சமூக செயற்பாட்டாளர் ஜீவக்குமார் என்பவரிடம் பேசினோம், ``கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் ஆற்றிலிருந்து எட்டு மாவட்டங்களுக்கு குடிநீர் செல்கிறது. தமிழகத்தில் வேறு எந்த ஆறுகளில் இல்லாத அளவிற்கு இரு கரைகளுக்குமிடையே அதிக அகலம் கொண்டதாக கொள்ளிடம் இருந்து வருகிறது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் ஐந்து குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் கொள்ளை நடக்கிறது.
ஆற்றுக்குள்ளேயே சாலை அமைத்து இரவு, பகலாக மணல் எடுத்து வருகின்றனர். மணல் எடுக்க கூடிய பகுதிகளுக்கு வெளியாட்கள் யாரும் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மணல் எடுக்கப்படுவதால் கொள்ளிடம் ஆறு சதையில்லாத எலும்பு கூடாக மாறி விட்டது. கல்லணைக்கு அருகாமையில் அணைக்கு வரப்போகுதும் ஆபத்தை உணராமல் மணல் எடுத்து வருகின்றனர்.இதனை கனிமவளத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணை தமிழர்களின் பெருமையை உலகம் முழுக்க பறைச்சாற்றி கொண்டிருக்கிறது. கல்லணைக்கு பிறகு கல்லணையை மாதிரியாக வைத்து பல அணைகள் உருவாகியிருக்கிறது என்பது வரலாறு.
இந்நிலையில் கல்லணைக்கு அருகிலேயே தொடர்ச்சியாக மணல் எடுத்து வருவதால் அணைக்கு ஆபத்து ஏற்படும் என பலரும் எச்சரித்து வரும் நிலையிலும் மணல் கொள்ளை நடப்பதை தடுக்க அரசு தவறியிருப்பது வேதனை. இதே போல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கும் பாதிப்பு உண்டாகும் நிலை உருவாகும். எனவே டெல்டாவை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது போல் கொள்ளிடம் ஆற்றை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவித்து ஆற்றையும் விவசாயிகளின் உயிர் நாடியான கல்லணையையும் காக்க வேண்டும்” என்றார்.
source https://www.vikatan.com/news/agriculture/sand-theft-in-cauvery-river-near-kallanai-dam-farmers-protest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக