ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கலுராம் (34), இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே, எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். தரைத்தளத்தில் கடை உள்ளதுடன், இரண்டாவது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த, 21-ம் தேதி கலுராம் கடைக்குச்சென்றிருந்த வேளையில், வீட்டில் அவரது மனைவி யசோதா மற்றும் குழந்தைகள் மீனா, கிருத்திகா ஆகியோர் இருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், கத்திகளை காட்டி மிரட்டி குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டி, அவர்களது பீரோ சாவியை வாங்கயுள்ளனர். அதிலிருந்த, 4.5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீஸாரிடம் கலுராம் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், பணம் கொள்ளையடித்துச் சென்ற, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, சங்கர் சிங் (19), சுரேந்தர் சிங் (19) மற்றும் லட்சுமணராம் (34) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து ராயக்கோட்டை எஸ்.ஐ சுகுமாரிடம் பேசினோம், ‘‘லட்சுமணராம் மற்றும் சங்கர் சிங் ஆகியோர், கலுராம் கடையில் ஏற்கனவே வேலை செய்தவர்கள். இவர்கள், இருவரும் சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றுள்ளனர். ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் அதிகப்படியான பணத்தை இழந்து கடனில் சிக்கியுள்ளனர். கடனிலிருந்து தப்பிப்பதற்காக, மூவரும் இணைந்து கலுராம் வீட்டில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். திருடப்பட்ட பணத்தை முழுவதுமாக பறிமுதல் செய்துள்ளோம்,’’ என்றார்.
source https://www.vikatan.com/news/crime/krishnagiri-robbery-of-rs-45-lakh-three-people-arrested
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக