Ad

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

`ஆர்எஸ்எஸ்-ஸை முன்னிலைப்படுத்தும் பாஜக' - சமீபநாள்களில் அதிகரிக்கக் காரணம் என்ன?!

`சுதந்திரத்துக்கு காங்கிரஸ் நிறைய தியாகங்களைச் செய்திருக்கிறது. ஆனால் பாஜக எதுவும் செய்யவில்லை’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பாஜக மீது விமர்சனம் வைத்திருந்தார். இதற்கு பதில் அளித்திருக்கும், தமிழக பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், ``ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் தியாகத்தால்தான் தற்போது இந்தியா எழுந்து நிற்கிறது. ஆர்எஸ்எஸ் என்பது பிறந்ததே சுதந்திரப் போராட்டத்துக்காகத்தான்" என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக பாஜக சிந்தனையாளர் பிரிவு சார்பில் தமிழ்நாடு உரையாடல் - 2022 என்ற சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட தேஜஸ்வி சூர்யா, "கம்யூனிஸ்ட் கட்சியும், நீதிக்கட்சியும் அந்நிய நாடுகளிலிருந்து உருவான சித்தாந்தம்கொண்டவை. இந்திய சிந்தனையை அடிப்படையாககொண்டு தொடங்கப்பட்ட ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ்-தான்" எனப் பேசினார்.

வானதி சீனிவாசன்

சமீபத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தேசபக்தி, தெய்வபக்தி, ஆன்மிகம், கட்டுப்பாடு, நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றையே உயிர்மூச்சாகக்கொண்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கின்றன திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள்" என்று தெரிவித்திருக்கிறார். இதுபோல் தொடர்ச்சியாக மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஆர்எஸ்எஸ்-ஸுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்கள். சமீபநாள்களாக இப்படி அதிகமாக ஆர்.எஸ்.எஸ் முன்னிலைப்படுத்துவதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, ``ஜனசங்கம், பாஜக-வின் மூலவேர் ஆர்எஸ்எஸ்-தான். இதன் சித்தாந்தத்தின் கீழ்தான் பாஜக தனது பங்களிப்பைச் செலுத்திவருகிறது. இது உலகறிந்த உண்மை. ஆர்எஸ்எஸ்-ஸின் சகாக்கள்தான் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்படுத்தப்பட்டு வருகிறார்கள். மோடி, அமித் ஷா, யோகி ஆதித்தியநாத் ஆகியோரைப் பார்க்க முடிகிறது. ஒரு கொள்கை, லட்சியம் என்று வரும்போது, அவர்கள் அனைவரும் அடிப்படை நிலைகளிலிருந்து ஒருபோதும் மாற மாட்டார்கள்.

துரை கருணா

ஆர்எஸ்எஸ்-ஸின் மூல சித்தாந்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், அவர்களின் பயணம் இந்தியா என்பது இந்துநாடு என்பதை நோக்கிய பயணம்தான். இதன் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் வேறு, பாஜக வேறு என்று நம்மால் பிரித்துப் பார்க்க முடியாது. மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வரும் சூழலில் தங்களுடைய அதிகாரத்தைப் பகிரங்கப்படுத்துவதற்கு பாஜக முயன்றுவிட்டது. அதற்கான குறியீடாகத்தான் நாம் இதைப் பார்க்க வேண்டும்.

பாஜக - ஆர்எஸ்எஸ்-ஸுக்குள் பிரச்னை வரும். கடுமையாக பாஜக-வை ஆர்எஸ்எஸ்-ஸைச் சேர்ந்தவர்கள் முழுமையாக விமர்சனம் செய்வார்கள். ஆனால், கடைசியாக எல்லோரும் ஒன்றுபட்டுவிடுவார்கள். இதுதான் காலம் காலமாக நடந்துவருகிறது. சில நேரங்களில் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்கும். எனினும், மோதலாக மாறி பிரிவினை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்காது. பொதுவெளியில் பிரச்னை வரும்போது பேசித் தீர்த்துக்கொள்வார்கள்" என்றார்.

லெனின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இது குறித்து நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்த்த லெனின், "ஆர்எஸ்எஸ்-ன் அரசியல் பிரிவுதான் பாஜக. மேலும், பாஜக-வின் முடிவுகளை அந்தக் கட்சி எடுக்க முடியாது. ஆர்எஸ்எஸ்-தான் எடுக்கும். பாஜக முழுவதையும் ஆர்எஸ்எஸ் குடும்பம்தான் கட்டுப்படுத்துகிறது. இது ஒரு பாசிச அமைப்பு. வகுப்புவாத வெறிபிடித்து, அதை ஓர் அரசியலாக்கி கலவரங்கள் மூலம் வெற்றிபெறுவதற்கு பாஜக-வுக்கு ஆர்எஸ்எஸ் உதவி செய்கிறது.

ஏற்கெனவே ஆர்எஸ்எஸ், சர்தார் வல்லபாய் பட்டேல் துணை பிரதமராக இருக்கும்போது தடைசெய்யப்பட்டது. அப்போது அரசியலில் ஈடுபட மாட்டோம் என்று தெரிவித்தார்கள். ஆனால், இன்று மைய அரசியலையே ஆட்டிப்படைக்கும் வகையில் வந்திருக்கிறது. இந்தியாவுக்கு, `பெருந்தன்மையான, ஜனநாயகமான நாடு’ என்ற புகழ் இருக்கிறது. இவர்களுடைய செயல்பாடுகளால் அந்தப் புகழ் மங்கத் தொடங்கிவிட்டது. எனவேதான் பலரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்" என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "எப்போதுமே பாஜக கட்சி, ஆர்எஸ்எஸ்- ஸுக்கு ஆதரவுதான். ஏனெனில், ஆர்எஸ்எஸ் எங்களுடைய தாய். தாய்க்கு ஆதரவாகப் பேசுவது என்பது இயல்புதானே... அதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது... தவறு செய்பவர்கள் காவல்துறையைக் கண்டால் நடுங்கத்தான் செய்வார்கள். ஆர்எஸ்எஸ் என்பது ஒரு ராணுவம் போன்றது, காவல் துறை போன்றது. அதனால் தவறு செய்பவர்கள் பயம் கொள்ளத்தான் செய்வார்கள். அதைச் சரியில்லை என்றுதான் சொல்வார்கள்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/bjp-supports-rss-increases-in-recent-days-what-was-the-political-reason

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக