கோவை மாவட்டம், சுல்தான்பேட்டையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தென்னை உழவர்கள் பாதுகாப்பு மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். தில்லி விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவர் ராகேஷ் திகாயத் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள், விவசாய சங்கத்தின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் ஈசன் முருகசாமி பேசுகையில், ``தமிழகத்தில் ரூ.16-க்கு விற்பனையாகிக்கொண்டிருந்த ஒரு தேங்காயின் விலை தற்போது ரூ.8-க்கு விற்பனையாகிறது. இது வருங்காலத்தில் ரூ.2 வரை விலை வீழ்ச்சி ஏற்படும் என சந்தை மதிப்பீட்டாளர்கள் கணித்துள்ளனர்.
இப்பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகளின் தவறான விவசாயக் கொள்கைகளே காரணமாகும். மத்திய அரசு கொப்பரை கிலோவுக்கு ரூ.105.90 வழங்குவது விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலையாகும். இதை உயர்த்தி கொப்பரை கிலோவுக்கு ரூ.150 வழங்க வேண்டும். கொப்பரை கொள்முதலை ஏக்கருக்கு 285 கிலோவில் இருந்து 500 கிலோவாக உயர்த்த வேண்டும்.
கேரளத்தில் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளதற்கு காரணம். அங்கு, கள் இறக்கி விற்பதற்கு அனுமதி கொடுத்துள்ளதும், அதுபோக உரித்த பச்சைத் தேங்காயை விவசாயிகளிடம் இருந்து அரசே டன் ரூ.32,000-க்கு கொள்முதல் செய்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் அந்த நிலைமை இல்லை. தென்னை விவசாயிகளைப் பாதுகாக்க கேரளத்தைப் போல், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக உரித்த பச்சைத் தேங்காயை டன் ரூ.40,000-க்கு தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும். தென்னை, பனை மரங்களிலிருந்து கள் இறக்க மற்றும் விற்பனை செய்ய அனுமதிப்பதுடன், நீரா இறக்கி விற்பனையை குடிசைத் தொழிலாக தமிழக அரசு வகைப்பாடு செய்ய வேண்டும்.
தேங்காய் எண்ணெய் சத்துகள் மிகுந்தது என்று மருத்துவ உலகம் கூறுகிறது. இதைத் தவிர்த்து மலேசியா, இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, நியாய விலைக் கடைகளில் பாமாயில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக தேங்காய் எண்ணெயை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வதுடன், பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். இதைத் தொடர்ந்து, இந்த 6 தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
நிகழ்வில் விவசாயிகளுக்கு விருதுகள் விருதுகளும் வழங்கப்பட்டன.
source https://www.vikatan.com/news/agriculture/government-should-purchase-coconut-at-rs-40-thousand-per-ton-coconut-farmers-resolution
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக