உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 300 நாள்களைக் கடக்கும் நேரத்தில், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணம் மிகுந்த முக்கியத்தும் பெற்றிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கிய பிறகு, முதன்முறையாக நேற்று (டிசம்பர், 21) அமெரிக்காவைச் சென்றடைந்தார் ஜெலன்ஸ்கி.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஜெலன்ஸ்கியின் பயணம் ரகசியமான திட்டமிடப்பட்டது. அவர், அமெரிக்க ராணுவ விமானத்தில் ஆன்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் வந்திறங்கினார். வெள்ளை மாளிகையை ஜெலன்ஸ்கி அடைந்ததும், அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் மனைவியுடன் வெளியே வந்து வரவேற்பு கொடுத்தார். வெள்ளை மாளிகையில் முக்கிய அதிகாரிகளை ஜெலன்ஸ்கிக்கு பைடன் அறிமுகப்படுத்தினார். பின்னர், இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் உலகிலேயே மிகக் குறுகிய காலம் நடந்த போராக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரையிலும் போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உக்ரைனைவிட ராணுவ வலிமை வாய்ந்த ரஷ்யாவின் தாக்குதலை இன்றுவரை உக்ரைன் சமாளித்துவருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் உதவிதான் அதற்குக் காரணம். நிதியுதவி, ஆயுத உதவி என அனைத்து உதவிகளையும் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிவருகின்றன. ஆயுதங்களையும், போர் உத்திகளையும் இலவசமாக அமெரிக்காவிடமிருந்து உக்ரைன் பெற்றுவருகிறது. தற்போது, ஆயுதப் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழலில், ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார்.
ஜெலன்ஸ்கி, அமெரிக்க மண்ணில் போய் இறங்குவதற்கு சற்று முன்பாக, ‘நீங்கள் இங்கு இருப்பது எனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது’ என்று ஜோ பைடன் ட்வீட் செய்தார். அங்கு, ஜெலன்ஸ்கியின் வாகனத்துக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. போர் காரணமாக நிதி நெருக்கடியை உக்ரைன் சந்தித்துவரும் நிலையில்தான், அவர் அமெரிக்கா சென்றிருக்கிறார். உக்ரைனுக்கு கூடுதலாக ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு உதவிகளை செய்யவிருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா ரூ.18 லட்சம் கோடி அளவுக்கு உதவிகளை செய்திருக்கிறது.
ஜோ பைடனை சந்தித்துப் பேசியதற்குப் பிறகு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது, “நீங்கள் கொடுக்கும் நிதியுதவியை வெறும் தானம் என்று நினைக்காதீர்கள். இது ஜனநாயகம், பாதுகாப்புக்கான முதலீடு. இந்த அவையில் நான் உரையாற்றுவது பெருமைக்குரியது. உக்ரைன் சுறுசுறுப்பாக இயங்குகிறது. பதிலடி கொடுக்கிறது. அதிபர் பைடன் எங்களுக்கு துணை நிற்பதில் மகிழ்ச்சி. உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவிடம் சரணடையாது" என்றார் ஜெலன்ஸ்கி.
ஜெலன்ஸ்கியின் அமெரிக்க வருகையை வின்ஸ்டன் சர்ச்சிலின் வருகையுடன் அமெரிக்க எம்.பி-க்கள் ஒப்பிடுகிறார்கள். இரண்டாம் உலகப் போருக்குள் அமெரிக்காவை இழுத்துவந்த பியர்ல் துறைமுகத்தின் மீதான ஜப்பான் நாட்டின் தாக்குதலுக்குப் பிறகு பிறகு, 1941-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வருகை தந்தார் சர்ச்சில். தற்போது, ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமான நடைபெற்றுவரும் நேரத்தில், அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி வந்திருக்கிறார். இந்த இரண்டு பயணங்களையும் அமெரிக்க எம்.பி-க்கள் ஒப்பிடுகிறார்கள்.
இந்த நேரத்தில், உக்ரைன் போரை ‘பங்கிடப்பட்ட சோகம்’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குறிப்பிட்டிருக்கிறார். “இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது ஒரு சோகம் - நம்முடைய பங்கிடப்பட்ட சோகம். இது, நம்முடைய கொள்கையால் நிகழ்ந்தது அல்ல. மூன்றாம் நாடுகளின் கொள்கையால் விளைந்ததுதான் இந்த சோகம்” என்று அவர் கூறியிருக்கிறார்.
அவர் குறிப்பிடும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மூன்றாம் நாடுகள்தான், உக்ரைனுக்கு முழுமையான ஆதரவை அளித்துவருகின்றன. இந்த நிலையில், ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணத்தால் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் மேலும் தீவிரமடைவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/international/the-importance-of-zelenskys-visit-to-us
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக