Ad

திங்கள், 26 டிசம்பர், 2022

'தம்பி மல, பில்லு இன்னும் வரல!' - அண்ணாமலையை விமர்சித்து கரூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்

ரஃபேல் வாட்சை மையப்படுத்தி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையில் சமூகவலைதளங்களில் யுத்தம் நடந்துவருகிறது. இதன் அடுத்த வெர்ஷனாக, கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர் ஒருவர், 'தம்பி மல, பில் இன்னும் வரல' என்ற வசனங்களுடன் போஸ்டர் ஒட்டி, பரபர பட்டாஸை கொளுத்தியிருக்கிறார்.

அந்த போஸ்டர்

தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, மின்சாரத்துறை அமைச்சரானார் செந்தில் பாலாஜி. அப்போது முதல், சமூகவலைதளங்களில் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையில் 'குஸ்தி' தொடங்கியது. செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட ஊழல் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று கூறிய அண்ணாமலை, ஓரிரெண்டு ஆவணங்களை வெளியிட்டு, செந்தில் பாலாஜிக்கு 'கிலி' ஏற்படுத்தினார். தொடர்ந்து, அண்ணாமலையை செந்தில் பாலாஜி தரப்பு விமர்சனம் செய்து வந்தது.

இந்நிலையில், தொடர்ந்து இருவருக்கும் பல்வேறு விவகாரங்ககளில் 'முட்டல் மோதல்' ஏற்பட்டது. அந்த வகையில், அண்ணாமலை கட்டியிருந்த ரஃபேல் வாட்ச் பற்றி, 'ஆடு மேய்க்கும் விவசாயி அண்ணாமலைக்கு ரஃபேல் வாட்ச் வாங்கும் அளவுக்கு பணம் ஏது?. அந்த வாட்ச் வாங்கிய பில்லை வெளியிடுவாரா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், '2021 ம் ஆண்டுக்கு பிறகு வாங்கப்பட்ட ரஃபேல் வாட்ச் ரசீது உள்ளிட்ட வருமான விவரங்களை விரைவில் தமிழக மக்களை சந்திப்பதற்காக துவங்க உள்ள பாதயாத்திரை முதல் நாளில் எனது அனைத்து சொத்து விவரங்கள் வருமான வரி தாக்கல் செய்த விவரங்கள் அனைத்தையும் வெளியிட்டு செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன். பொதுவெளியில் தனது சொத்து விவரங்களை வழங்கியதில் ஒரு பைசா அதிகமாக இருந்தாலும், எனது சொத்துக்கள் முழுவதையும் அரசிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.

அதோடு, 'இதுபோல தி.மு.கவினர் அவர்களின் சொத்து விவரங்களை வெளியிட தயாரா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் குறித்து, சமூகவலைதளங்களில் விமர்சனமும், மீம்ஸ்களும் பறந்தன. இதற்கிடையில், அண்ணாமலைக்கு தனது ட்விட்டர் பக்கம் மூலம் பதில் அளித்த செந்தில் பாலாஜி, "தி.மு.கவினர் தேர்தலில் போட்டியிடும்போது, சொத்து விவரங்களை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர்' என தெரிவித்தார். அதோடு, 'பில் இருக்கிறதா, இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம் / இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?. ஏப்ரலில் பட்டியல் வரும்... மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால், 'அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்... கோழி கொக்கரக்கோன்னு...' என்பது போலவே இருக்கிறது' என்று பதிவிட்டு, அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.

அந்த போஸ்டர்

இதனால், காட்டமான அண்ணாமலை, 'தி.மு.க புள்ளிகளின் சொத்துப்பட்டியலை ஒவ்வொன்றாக வெளியிடுவேன்' என்று கூறி, தி.மு.கவினர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார். இந்நிலையில், கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர் ஒருவர் இந்த விவகாரத்தை மையப்படுத்தி ஒட்டியிருக்கும் போஸ்டர், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கரூர் திருக்காம்புலியூர் அருகே உள்ள சுவர்களில் காணப்படும் அந்த போஸ்டர்களில், 'தம்பி மல! பில்லு இன்னும் வரல..?, என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அதன் வாட்ச் ஸ்க்ரீனில் வடிவேல் படமும் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/karur-dmk-poster-against-bjp-state-president-annamalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக