Ad

புதன், 21 டிசம்பர், 2022

சென்னை: பட்டதாரிப் பெண் தற்கொலை; வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் சிக்கிய அரசுப் பள்ளி ஆசிரியை - என்ன நடந்தது?

சென்னையை அடுத்த மாங்காடு அப்பாவு நகரைச் சேர்ந்தவர் பியூலா (35). பட்டதாரியான இவர், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் மாங்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழுத் தலைவியாகப் பணியாற்றிவந்தார். பள்ளியில் ஆசிரியர்கள் இல்லையென்றால், தலைமை ஆசிரியரின் அனுமதியோடு வகுப்பில் பாடமும் எடுத்துவந்தார். இந்தச் சூழலில் அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் சௌபாக்கியம் என்பவருக்கும் பியூலாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் பியூலாவை, ஆசிரியை சௌபாக்கியம் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அதனால் பியூலா மனவேதனையடைந்தார்.

தற்கொலை செய்துகொண்ட பியூலா

ஆசிரியை சௌபாக்கியத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடமும், காவல் நிலையத்திலும் பியூலா புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், விசாரணை நடத்தி எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பியூலா, பள்ளிக்கு வந்தபோது அவரிடம் ஆசிரியை சௌபாக்கியம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த பியூலா, வீட்டுக்குச் சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த மாங்காடு போலீஸார் பியூலாவின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பியூலா உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள், அரசுப் பள்ளிக்குச் சென்று அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஆசிரியை சௌபாக்கியத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியை சௌபாக்கியத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பியூலாவின் உறவினர்கள் கோரிக்கைவைத்தனர். அதனால் போலீஸார் அங்கு சென்று ஆசிரியை சௌபாக்கியத்தை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பியூலாவின் இந்த விபரீத முடிவுக்கு ஆசிரியை சௌபாக்கியம்தான் காரணம் எனத் தெரியவந்தது. அதற்கு ஆதாரமாக பியூலா தொடர்பாக சமூக வலைதளத்தில் சில தகவல்களை ஆசிரியை செளபாக்கியம் பதிவுசெய்ததையும் போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக ஆசிரியை சௌபாக்கியத்தை போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆசிரியை செளபாக்கியம்

இது குறித்து போலீஸார் பேசுகையில், ``பட்டதாரிப் பெண் பியூலா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பியூலாவின் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரித்தோம். விசாரணையில் பியூலாவுக்கும், ஆசிரியை சௌபாக்கியத்துக்கும் இடையே நடந்த சண்டை குறித்த தகவல்கள் தெரியவந்தன. இதற்கிடையில் ஆசிரியை செளபாக்கியம், பியூலாவின் பெயரைக் குறிப்பிடாமல் சில விமர்சனங்களைத் தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்தார். அது தொடர்பாக சௌபாக்கியத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அரசுப் பள்ளி ஆசிரியை செளபாக்கியம் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/lady-commits-suicide-and-school-teacher-arrested-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக