காலண்டர் ஆண்டு 2022 நிறைவு பெற்று 2023 புத்தாண்டு பிறக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டில் உலக அளவில் இந்தியாவில் நடந்த முக்கிய நிதி சார்ந்த நிகழ்வுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
பணவீக்கம் உயர்வு
2022-ம் ஆண்டில் இந்தியாவில் பணவீக்க விகிதம் என்கிற விலைவாசி தொடர்ந்து அதிகரித்தால், பல குடும்பங்களின் பட்ஜெட்டில் துண்டுவிழுந்தது.
உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், ஆடைகள், போக்குவரத்து, கல்விச் செலவு போன்றவை கணிசமாக அதிகரித்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கி 4 - 6 சதவிகித அளவுக்கு நுகர்வோர் பணவீக்க விகிதம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. தற்போது அதைவிட அதிகமாக இருப்பதால் வட்டி உயர்வு தொடர்கிறது.
வட்டி விகிதம் தொடர் உயர்வு..!
அமெரிக்கா மற்றும் இந்தியாவில் தொடர்ந்து வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. கடந்த 8 மாதங்களில் அதாவது, 2022 மே மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்.பி.ஐ இதுவரைக்கும் ஐந்து தடவையாக மொத்தம் 2.25% அதிகரித்துள்ளது. ரெப்போ விகிதம் 4%-ல் இருந்து 6.25% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால், மாறுபடும் வட்டியில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு இதே அளவு வீட்டுக் கடன் வட்டி அதிகரித்துள்ளது. அதாவது, வீட்டுக் கடனுக்கான வட்டி 6.75 - 7%-லிருந்து 9 - 9.25% ஆக வீட்டுக் கடன் உயர்ந்துள்ளது.
2022 மார்ச் மாதத்தில் ஒருவர் 7 சதவிகித மாறுபடும் வட்டி விகிதத்தில் 20 ஆண்டுகளில் வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துவதாக, ரூ.30 லட்சம் வீட்டுக் கடனை வாங்கி இருக்கிறார். இப்போது வீட்டுக் கடன் வட்டி 2.25% அதிகரித்து 9.25% ஆக உயர்ந்துள்ளது. வீட்டுக் கடனை 20 ஆண்டுகளில் திரும்ப அடைப்பதாக இருந்தால் மாதத் தவணை ரூ. 23,260–லிருந்து ரூ. 27,390 ஆக உயர்ந்துள்ளது. இது 17.76% அதிகரிப்பாகும். இதுவே வீட்டுக் கடனை திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகளாக இருந்தால் மாதத் தவணை அதிகரிப்பு 23% ஆக உள்ளது.
டெபாசிட் வட்டி விகிதம்..!
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி மற்றும் டெபாசிட்களுக்கான வட்டி சிறிது உயர்ந்திருக்கிறது. இவற்றுக்கான வட்டி 5.5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
கிரிப்டோ கரன்சி..!
2022-ம் ஆண்டில் நிகழ்ந்த மிக முக்கியமான நிதி நிகழ்வு என்று பார்த்தால், மத்திய பட்ஜெட்டில் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்கு 30 சதவிகித வரி விதிக்கப்பட்டதாகும்.
2022-ம் ஆண்டில் பல கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு வெகுவாக குறைந்துபோனது. 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் 7,000 டாலர்களாக இருந்த பிட்காயின் மதிப்பு, 2021-ம் ஆண்டில் 64,000 டாலரைத் தொட்டது. இது 2022-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி 16,897 டாலர் என்கிற அளவுக்கு குறைந்திருக்கிறது. 2022-ம் ஆண்டில் மட்டும் பிட் காயின் மதிப்பு சுமார் 60% வரை வீழ்ச்சி கண்டிருக்கிறது.
மேலும், அமெரிக்காவின் மிகப் பெரிய கிரிப்டோ சந்தையான எஃப்.டி.எக்ஸ் திவால் ஆகியிருக்கிறது. இதன் நிறுவனர் மீது மோசடி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு முறைப் படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகளில் சிறு முதலீட்டாளர்கள் பணத்தைப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது என 2022-ம் ஆண்டு பாடம் கற்பித்துள்ளது.
டிஜிட்டல் கரன்சி!
இ-ருபி எனப்படும் டிஜிட்டல் பணத்தை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 2022 டிசம்பர் 1-ல் சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை சோதனை அடிப்படையில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இ-ருபி எனப்படும் டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவதன் மூலம் பணத்தை அச்சடிப்பதிலும், நிர்வகிப்பதிலும் இருக்கும் செலவை குறைக்க முடியும்; கள்ள நோட்டு புழக்கத்தைக் குறைக்க முடியும் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என மத்திய அரசு நினைத்து செயல்படுகிறது. இந்தத் திட்டம் சோதனை முறை என்பதால், எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட சில வங்கி களுக்கு மட்டுமே டிஜிட்டல் ரூபாயை விநியோகம் செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை அதிகரிப்பு..!
இந்தியாவில் 2022-ம் ஆண்டில் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது. உலகம் முழுக்க டிஜிட்டல் கரன்சியின் வீழ்ச்சி, ரஷ்யா - உக்ரைன் போர், வட்டி உயர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்கிற பயத்தால் தங்கத்தின் விலை ஏறி உள்ளது.
கடந்த டிசம்பர் 27-ம் தேதி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5,086 ஆக உயர்ந்துள்ளது. இது 2022 ஜனவரி 1-ம் தேதி 4,559 ஆக இருந்தது. ஒரு கிராமுக்கு 527 ரூபாய் ஒரு பவுனுக்கு (8 கிராம்) 4,216 ரூபாய் அதிகரித்து பெண்களுக்கும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டில் தங்கம் விலை உயர முக்கியக் காரணம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கணிசமாகக் குறைந்திருப்பது. ஓராண்டுக்கு முன் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகராக 74.50 என்கிற அளவில் இருந்த இந்திய ரூபாய் மதிப்பு, தற்போது 82.75 என்கிற அளவில் குறைந்துள்ளது.
பங்குச் சந்தை..!
பங்குச் சந்தையைப் பொறுத்த வரையில் 2022-ம் ஆண்டு மொத்தத்தில் இந்தியாவுக்கு மிகவும் நல்ல ஆண்டாக இருந்தது எனலாம். 2022-ம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியப் பங்குச் சந்தை இறங்கிக் காணப்பட்டது. இரண்டாவது பாதியில் ஏற்றத்தின் போக்குக்குத் திரும்பியது.
நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு 2022-ம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கிறது. காரணம், இந்தியப் பங்குச் சந்தையின் பாம்பே ஸ்டாக் எக்சேஞ்சின் சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 2022 டிசம்பர் மாதத்தில் 63000 புள்ளிகளைத் தாண்டி, 63583-க்கு உயர்ந்து புதிய சாதனை படைத்தது.
2022 டிசம்பர் 26-ம் தேதி நிலவரப்படி, கடந்த ஆறு மாத காலத்தில் சென்செக்ஸ் சுமார் 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டுக் காலத்தில் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரைக்குமான காலத்தில் சென்செக்ஸ் புள்ளிகள் 4% உயர்ந்துள்ளது.
பங்குச் சந்தையின் இயற்கை குணமே ஏற்ற இறக்கம் என்பதால் சிறு முதலீட்டாளர்கள் அவர்களின் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முதலீட்டை தொடர்ந்து வருவது நீண்ட காலத்தில் நல்ல லாபத்தை ஈட்டித் தரும். குறிப்பாக, பங்குச் சந்தை இறக்கத்தின்போது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தக் கூடாது.
இதர முக்கிய நிதி நிகழ்வுகள்...
$ டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனையில் பாதுகாப்பை அதிகரிக்க கார்டு டோக்கனைசேஷன் என்கிற முறை 2022 அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவையைப் பயன்படுத்தும் பயனாளிகளின் புள்ளி விவரங்கள் பாதுகாக்கப் படும். பயனாளிகளின் புள்ளி விவரங்களை வெளி நபர்களுக்கு விற்க முடியாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இ-காமர்ஸ் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
$ 2022 இந்த ஆண்டின் தொடக்கத்தில் 640 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி (ஃபாரக்ஸ்), கடந்த நவம்பரில் 520 பில்லியன் டாலர் என்கிற அளவுக்குக் குறைந்து, தற்போது டிசம்பரில் 565 பில்லியன் டாலர் என்கிற அளவில் குறைந்துள்ளது.
$ இந்தியாவில் 18 முதல் 40 வயது உள்ளவர்கள் அனைவரும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேரலாம் என்பதை மத்திய அரசு மாற்றி அமைத்தது. இதில் வருமான வரி செலுத்துவோர் சேர முடியாது 2022-ம் ஆண்டில் அறிவித்தது.
$ ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்ந்து அதிக அளவிலேயே மாத வசூல் ரூ. 1 லட்சம் கோடிக்கு அதிகமாக இருந்து வருகிறது.
$ மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டாளர்கள் நாமினிகளை நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கவில்லை என்றால் நாமினி நியமிக்க விரும்பவில்லை என்பதை அதற்குரிய தனிப் படிவத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என செபி அமைப்பு புதிய விதிமுறையை 2022-ம் ஆண்டில் கொண்டு வந்துள்ளது.
source https://www.vikatan.com/business/finance/rewind-2022-what-are-the-key-financial-events-that-impacted-investors
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக