Ad

வியாழன், 15 டிசம்பர், 2022

பஞ்சாயத்து, பல கட்டுப்பாடுகள், தீண்டாமை... கிருஷ்ணகிரி, தர்மபுரி வன்கொடுமை மாவட்டங்களா? - ஓர் அலசல்

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் மொத்தம், 962-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில், 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரியாக, 72.41 சதவீதம் கல்வியறிவும், தர்மபுரியில், 68.54 கல்வியறிவும் உள்ளது.

ஆனால், என்ன தான் கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், மனித குலம் முன்னேற்றமடைந்தாலும், இன்னமும் இந்த இரண்டு மாவட்ட கிராமங்களில், பிற்போக்குத்தனமான பல கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதாக சொல்லப்படுவது வேதனையான விஷயம்.

சாதி பாகுபாடு

கடந்த வாரம் கூட கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தொகரப்பள்ளி கிராமத்தில், மணியகாரர் (ஊர் தலைவர்) என அழைக்கப்படும், திமுக ஒன்றிய செயலாளர் ‘லோக்கல் பஞ்சாயத்து’ கூட்டி, அப்பகுதியில் காதல் திருமணம் செய்த ஜோடிக்கு, 25 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், தொகரப்பள்ளி அரசுப்பள்ளியில், மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிளில், MBC, SC, ST என, சாதிய பாகுபாட்டுடன் எழுதப்பட்டிருந்தது, கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இது போல பல, சாதிய வன்கொடுமை, பஞ்சாயத்து கட்டுப்பாடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இது அரசுகளின் அலட்சியம்!

தீண்டாமையை தடுக்கவும், கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்ட விரோத பஞ்சாயத்தை களையவும், பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், மாவட்டம் தோறும், 3 மாதங்களுக்கு ஒருமுறை விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்த வேண்டுமென்பது சட்டம். இதேபோல், மாநில அளவில் முதல்வர் தலைமையில், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும்.

தொகரப்பள்ளியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

ஆனால், கடந்த 27 ஆண்டுகளில், 6 மாநில கூட்டங்களும், பல மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தவே இல்லையென்பது தான் உண்மை நிலவரம். தற்போதைய திமுகவும் சரி, முந்தைய அதிமுகவும் சரி, இரண்டு கட்சிகளுமே தங்கள் ஆட்சியில், இப்பிரச்னைகளை தீர்க்க போதிய நடவடிக்கைகள் எடுக்காமல் மெத்தனமாக இருந்தது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

‘வன்கொடுமை மாவட்டங்களாக அறிவிக்கணும்’!

இது குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசிடம் போனில் பேசினோம், ‘‘கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை வன்கொடுமை மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். ஏனெனில் இந்த ஓராண்டில் மட்டுமே கிருஷ்ணகிரி தளி தொகுதியில் மட்டுமே, ஒன்பது பேர் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல கிராமங்களில் பல பிற்போக்குத்தமான கட்டுப்பாடுகள் உள்ளன.

வன்னி அரசு.

சட்டப்படி மாதந்தோறும் நடத்த வேண்டிய, விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டங்களை அரசு முறையாக நடத்தாமல் உள்ளதால், வன்கொடுமை வழக்குகள் தேங்கி பலருக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை. கூட்டம் நடத்தினால் தானே, கிராமங்களில் நடக்கும் சட்ட விரோத பஞ்சாயத்து, வன்கொடுமைகளை களைய முடியும். அரசு அலட்சியம் காட்டாமல் இக்கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும். தமிழகம் முழுவதிலும் வன்கொடுமைகள் அரங்கேறுவதை தடுக்க சிறப்பு விசாரணைக்குழு அமைத்து, கண்காணிக்க வேண்டும்,’’ என்றார்.

சாதி பிரிவுகள் எழுதப்பட்டுள்ளது.

உடனடியாக கைது செய்யணும்...

இது குறித்து எவிடென்ஸ் கதிரிடம் போனில் பேசினோம், ‘‘விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்த வேண்டுமென்பது, SC, ST சட்டத்தில் உள்ளது, இது, 1995-ல் அமல்படுத்தப்பட்டது. 1995 முதல் இதுவரை, 54 மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 6 கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. எங்கும் இக்கூட்டங்கள் முறையாக நடப்பதில்லை.

கிராமங்களில் வன்கொடுமை, தீண்டாமை உள்ளதா என கண்காணிக்க, ஊராட்சியில் சமூக நீதி என, தனியாக நிதியே வழங்கப்படுகிறது. ஆனால், நிதியை எப்படி பயன்படுத்துவதென, ஊராட்சியினருக்கு முறையாக பயிற்சி கூட வழங்கப்படவில்லை. இன்னமும் கிராமங்களில் இரட்டைக்குவளை முறை, பல கட்டுப்பாடுகள், தீண்டாமை நிலவுகிறது. அரசு சிறப்புக்கவனம் செலுத்தி, சட்ட விரோத பஞ்சாயத்து நடத்துவோரையும், வன்கொடுமையில் ஈடுபடுவோரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை வன்கொடுமை மாவட்டங்களாக அறிவித்தால், அங்கு வன்கொடுமைகளை களைய அதிகப்படியான நிதி கிடக்கும். விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி தீர்வு காண முடியும்,’’ என்றார்.

எவிடென்ஸ் கதிர்.

‘கூட்டம் நடத்துவதில் குறைபாடு இருக்கு’!

இது குறித்து ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்திடம் போனில் பேசினோம், ‘‘தொகரப்பள்ளியில் காதல் திருமணம் செய்தவர்களுக்கு, அபராதம் விதித்த சம்பவம் தொடர்பாக, விரிவான அறிக்கை கேட்டுள்ளோம். விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம், மாநில அளவில் தற்போது முறையாக நடத்தப்படுகிறது, மாவட்ட அளவிலும் முறையாக நடத்தப்படுகிறதா என கண்காணித்து வருகிறோம். சப் – டிவிஷன் அளவில் ஆர்டிஓ தலைமையிலான இக்கூட்டங்கள் நடத்துவதில் சில குறைபாடுகள் உள்ளன. இவற்றை சரிசெய்ய முறையாக கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வன்கொடுமை தொடர்பான வழக்குகளை முதலில், டி.எஸ்.பி., ஆர்டிஓ தலைமையிலான அதிகாரிகளுக்கு தான் விசாரணைக்கு வரும். இதனால், மாநில அளவில், டிஎஸ்பி மற்றும் ஆர்டிஓ–க்களுக்கு, 900 பேருக்கு விரைவில் பயிற்சியளிக்க போகிறோம்,’’ என்றார்.

‘தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்; அனைவரும் சமம்’ இது போன்ற வாசகங்களை புத்தகங்களில் மட்டுமே காண முடியுமா? இந்த பிரச்சினைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்வு காணவேண்டியது அவசியம்!



source https://www.vikatan.com/government-and-politics/crime/krishnagiri-and-dharmapuri-districts-have-high-levels-of-untouchability-and-caste-discrimination

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக