Ad

புதன், 28 டிசம்பர், 2022

இந்திய வரலாற்றை குறை கூறிவரும் பிரதமர் மோடி - பாஜக மாற்றி எழுத விரும்புவது எதை?!

``தியாகம் புரிந்தவர்களின் வரலாறு கற்பிக்கப்பட வேண்டும்.”

`இந்தியாவின் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்' என்கிற கருத்தை பா.ஜ.க-வினர் தொடர்ந்து முன்வைத்துவருகிறார்கள். மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியப் பண்பாட்டை ஆய்வுசெய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்றும், தமிழர் ஒருவர்கூட அதில் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

மோடி

இந்த நிலையில், சமீபத்தில் சில நிகழ்ச்சிகளில் பேசிய பிரதமர் மோடி, இந்திய வரலாறு கருத்து பல கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். கடந்த நவம்பர் மாதம், 17-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் படைகளை வென்ற லச்சித் பர்புகானின் 400-ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அதில் பேசிய பிரதமர் மோடி, “நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய வரலாறு இந்தியப் பார்வையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்நியர்கள் ஆட்சிக் காலத்து சதியின் ஒரு பகுதியாக எழுதப்பட்ட வரலாறுதான் தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது. அந்நியர்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து தியாகம் புரிந்தவர்களின் வரலாறு கற்பிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப நாட்டின் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்” என்றார்.

அதைத் தொடர்ந்து, டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற வீர பாலகர் தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் வீர வரலாறு தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆனால், இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள் கற்பிக்கப்படுகின்றன” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி

மேலும், “வீர பாலகர் தினம் என்பது இந்தியாவின் வீரம், தியாகம், சீக்கிய பாரம்பரியத்தின் அடையாளம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு சம்கவுர், சிர்ஹிந்த் போர்கள் நடைபெற்றன. மதஅடிப்படைவாதத்தைப் பின்பற்றிய முகலாயப் படைகளுக்கு எதிராக நமது குருக்கள் துணிச்சலாகப் போராடினர். சீக்கிய குரு கோவிந்த் சிங்கும், அவரின் மகன்களும் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை. யார் முன்பும் தலைவணங்கவில்லை. கோவிந்த் சிங்கின் சிறுவயது மகன்கள் உயிருடன் சமாதி கட்டப்பட்டனர். ஒருபுறம் மிருகத்தனம், மறுபுறம் பொறுமை, வீரம் வெளிப்பட்டது” என்றார்.

``துரோகம் செய்தவர்களை தேசபக்தர்கள் என்கிறார்கள்”

இவ்வாறு இந்திய வரலாறு குறித்து பிரதமர் மோடி பேசிவரும் நிலையில், கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனும் இந்திய வரலாறு குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பாறப்புறத்தில் டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. அதில் பேசிய கேரளா முதல்வர், “சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் செய்தவர்களை துணிச்சலான தேசபக்தர்கள் என்றும், விடுதலைப் போராட்ட வீரர்கள் என்றும் இன்றைய ஆட்சியாளர்கள் சித்தரித்து வருகின்றனர்” என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வை விமர்சித்தார்.

பினராயி விஜயன்

“ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பரிவாரங்களால் துணிச்சலான தேசபக்தர் என்று போற்றப்பட்ட சாவர்க்கர், ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டு அந்தமான் சிறையில் இருந்து விடுதலை பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தை எந்தெந்த வழிகளில் சிதைக்கலாம் என்று சிந்தித்தார்கள். தேசிய இயக்கத்தில் கம்யூனிஸ்டுகள் முக்கியப் பங்கு வகித்தனர்” என்று பினராயி விஜயன் குறிப்பிட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியினரும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் கார்கே கூட இந்தக் கருத்தைக் குறிப்பிட்டார். இந்தப் பின்னணியில்தான், இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள்.

``நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்றுத் திரிபுதான்”

சென்னை கிறிஸ்தவப் கல்லூரியில், 81-வது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் 27-ம் தேதி தொடங்கிவைத்தார். அப்போது, “இந்திய வரலாற்று காங்கிரஸ், வரலாற்று மாற்றத்திற்கும், சிந்தனை மாற்றத்திற்கும், அடித்தளம் அமைக்கும் அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர்,  பிபின் சந்திரா, ஏ.எல்.பாஷ்யம், ராகுல் சாங்கிருத்தியாயன், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, கே.பி.ஜெய்ஸ்வால் ஆகிய மிக மூத்த வரலாற்றாசிரியர்களின் வரிசையில் வைத்து போற்றத்தக்க, கேசவன் வேலுதத், இர்பான் அபீப் ஆகியோர் இந்த அமைப்பை வழிநடத்தி வருவது மிகமிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது” என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

முதல்வர் ஸ்டாலின்

மேலும், “கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை நம்பி ஏமாந்து விடக்கூடாது. அதை ஏற்கக் கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ளாது. இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான்” என்று பா.ஜ.க-வை மறைமுக சாடினார் ஸ்டாலின். ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்ட வரலாற்று அறிஞர்களின் ஆய்வு நூல்களை பா.ஜ.க ஏற்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்களின் நூல்களையெல்லாம் மனதில் வைத்துத்தான், இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பேசுகிறார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்



source https://www.vikatan.com/government-and-politics/politics/the-prime-minister-modi-reiterates-to-rewrite-indian-history

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக