Ad

வெள்ளி, 23 டிசம்பர், 2022

`கழிப்பறை வசதி இல்லை' - குமுறும் `லோகோ பைலட்'டுகள்... தீர்வு வழங்குமா தென்னக ரயில்வே?

கழிப்பறை வசதி இல்லை:

"உலகிலேயே இந்திய ரயில்வே துறைதான் சிறப்பாகச் செயல்படுகிறது. இதன் ஊழியர்கள்தான் இந்தத் துறையின் முதுகெலும்பாக இருக்கின்றனர். அவர்களின் சேவையை பெரிதும் பாராட்டுகிறேன்" என்று சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

ஆனால் மறுபுறம் தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் ரயில் இன்ஜின்களில் ஒன்றில்கூட கழிப்பறை வசதி இல்லை என்று வேதனை தெரிவிக்கிறார்கள், ஊழியர்கள். இதனால் அவர்கள் கடும் மனஉளைச்சலுடன் பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக பெண் 'லோகோ பைலட்' களுக்கு, இது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாலச்சந்திரன்

அதிக நிறுத்தங்கள்:

இது குறித்து நம்மிடம் பேசிய அகில இந்திய லோகோ ஓட்டுநர் கழகத்தின் மத்திய அமைப்பு செயலாளர் பாலச்சந்திரன், "தென்னக ரயில்வே இயக்கும் ரயில் இன்ஜின்கள் ஒன்றில்கூட கழிப்பறை வசதி இல்லை. முந்தைய காலங்களில் அதிக இடங்களில் ரயில்கள் நின்று சென்றன.

அப்போது நாங்கள் ரயிலிலிருந்து இறங்கி பெட்டிக்குள் சென்று பயணிகளுக்கான கழிப்பறையை பயன்படுத்தி வந்தோம். சரக்கு ரயில்களை பொறுத்தவரை நிறுத்தங்கள் கிடையாது. மேலும் இந்த ரயில் மெதுவாக பயணிக்கும் என்பதால், அவ்விடங்களில் சிறுநீர் கழித்து வந்தோம். தற்போது இந்த வாய்ப்புகள் எல்லாம் தடைபட்டிருக்கிறது.

ரயில்வே

'டிரை டாய்லெட்' அமைக்கலாம்:

மேலும் இடைநில்லா ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், சரக்கு ரயில்களில் பெண் 'லோகோ பைலட்' கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் 100 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை, நாங்கள் சிறுநீர் கழிப்பதற்காக நிறுத்த இயலாது. அதனால்தான் பிரச்னை தற்போது பெரிதாகிறது.

நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அவர்கள் கழிப்பறை வசதி கொடுக்கப்படாததற்கு இன்ஜினில் மின்சார சாதனங்கள் இருப்பதை காரணமாக கூறுகிறார்கள். இது உண்மை இல்லை. விமானங்களில் இருப்பது போல் 'டிரை டாய்லெட்' அமைக்கலாம். வந்தே பாரத் ரயில்களில் அனைத்து பெட்டிகளுக்கு அடியிலும் மின்சார சாதனங்கள் இருக்கின்றன.

இந்திய ரயில்வே

மன அழுத்தம்:

குறிப்பாக மூன்றாவது பெட்டிக்கு கீழ் 'ட்ரான்ஸ்ஃபார்மர்' இருக்கிறது. இந்தப் பெட்டிகளில் கழிப்பறை வசதி இருக்கிறது. எனவே வாரியம் கூறுவது ஏற்புடையது அல்ல. இதில் கவனம் செலுத்தவில்லை என்பதுதான் உண்மை. இதனால் தண்ணீரை குறைவாக எடுத்துக் கொள்கிறோம். 40-45 வயதில் சிறுநீரகம் சம்பந்தமான பாதிப்பைச் சந்திக்கிறோம்.

ஒவ்வொரு 33 நிமிடத்துக்கும் ஒரு சிக்னலை கடக்க வேண்டியிருக்கும் என்பதால், எங்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அப்போது வயிற்று கோளாறு, சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை வரும்போது கவனச்சிதறல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது" என்றார்.

வந்தே பாரத் ரயில்

மாதவிடாய் நேரங்களில் பாதிப்பு:

இது குறித்து நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத பெண் லோகோ ஓட்டுநர் ஒருவர், "தற்போது தெற்கு ரயில்வேயில் 100-க்கும் மேற்பட்ட பெண் லோகோ பைலட்டுகள் இருக்கிறோம். கழிப்பறை வசதி இல்லாததால் பெரும் பிரச்னையைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இன்ஜினிலிருந்து இறங்கி பயணிகள் பெட்டிக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

மாதவிடாய் நேரங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் பேடுகள் மாற்ற வேண்டும். கழிப்பறை வசதி இல்லாததால் அதை செய்ய முடியாமல் சிறுநீர் தொற்றுக்கு உள்ளாகிறோம். இதனால் இறுக்கமான மனநிலையில் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. விரைந்து இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்" என்றார்.

மாதவிடாய்

சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு:

இது குறித்து நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர், "இந்தப் பிரச்னை தெற்கு ரயில்வேயில் மட்டும் இல்லை. அனைத்து இடங்களிலும் நிலவுகிறது. 'லோகோ பைலட்' களின் பாதுகாப்புக்காகத்தான் வைக்காமல் இருக்கிறோம். தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வந்தே பாரத் ரயில்களில் விமானங்களில் இருப்பது போல் கழிப்பறை வசதி செய்து கொடுத்திருக்கிறோம்.

இந்த கோரிக்கை தற்போது வலுத்து வருவதால் பிற கோட்டங்களில், ஒரு சில ரயில் இன்ஜின்களில் சோதனை அடிப்படையில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/southern-railway-does-not-have-toilet-facility-for-loco-pilots-in-long-distance-trains

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக