பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சித்ரவதைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. மும்பை மாநகராட்சிப் பள்ளியில் நடந்துள்ள ஒரு சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கிழக்கு மும்பையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 8 -ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி தனது பிறப்புறுப்பில் அதிக வலி இருப்பதாக தனது தாயாரிடம் தெரிவித்தார். இதனால் அப்பெண்ணிடம் என்ன நடந்தது என்று அவரின் தாயார் கேட்டார். உடனே அவர் தெரிவித்த தகவல் மாணவியின் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளியில் அனைத்து மாணவர்களும் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஹாலில் கூடியிருந்த போது சம்பந்தப்பட்ட மாணவி மட்டும் வகுப்பில் இருந்துள்ளார்.
அந்நேரம் அங்கு வந்த 4 மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தனர். அவர்களில் இரண்டு பேர் மட்டும் மாணவி இருந்த அறைக்குள் சென்றனர். மற்ற இரு மாணவர்கள் வகுப்பறைக்கதவை பூட்டிவிட்டு வெளியில் காவலுக்கு நின்றனர். உள்ளே ஒரு மாணவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மற்றொரு மாணவர் மாணவியை மானபங்கம் செய்ததோடு, பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட முயன்றுள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவியின் தாயார் பள்ளியில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது.
போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இரண்டு மாணவர்களையும் கைது செய்து டிராம்பேயில் இருக்கும் சிறுவர் சீர்திருத்த முகாமிற்கு அனுப்பி இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மாநகராட்சி பள்ளியில் நடந்துள்ள இச்சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் மாநகராட்சி நிர்வாகத்தால் 100க்கும் அதிகமான பள்ளிகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/crime/mumbai-municipal-school-student-locked-in-classroom-and-sexually-assaulted
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக