Doctor Vikatan: பெண்கள் கால்சியம் குறைபாடு ஏற்படாமலிருக்க பால் குடிக்க வேண்டும் என்கிறார்கள் சில மருத்துவர்கள். வொர்க் அவுட் செய்யும் பெண்கள் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் சிலர். பால் குடித்தால் எடை கூடுமா? பெண்களுக்கு பால் நல்லதா, கெட்டதா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி...
உங்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படுவதைத் தவிர்க்க விரும்பினால், உடற்பயிற்சியுடன் கால்சியம் நிறைந்த சமச்சீர் உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு கால்சியம் குறைபாடு தொடர்பான உடல்நலப் பிரச்னைகள் இருந்தால், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன் சப்ளிமென்ட்ஸ் எடுத்து, கால்சியம் பற்றாக்குறையை இயல்புநிலைக்குக் கொண்டு வரலாம். அது இயல்புநிலைக்கு வந்தவுடன், ஒரு டயட்டீஷியன் உதவியுடன் சரிவிகித உணவுகளின் மூலம் அதைப் பராமரிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் சந்தேகத்துக்கு வருவோம். பால் மட்டுமே கால்சியம் சத்துக்கான ஆதாரம் இல்லை. 100 மில்லி பசும்பாலில் 118 மில்லி கிராம் மட்டுமே கால்சியம் உள்ளது. எனவே அத்துடன் கால்சியம் தேவைக்காக நீங்கள் வேறு உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதே நேரம் அப்படி நீங்கள் சேர்த்துக்கொள்ளும் உணவுகள் உங்கள் தினசரி கலோரி அளவையும் அதிகரிக்கக்கூடாது.
கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு உங்கள் உடலுக்கு வைட்டமின் டி சத்தும் தேவைப்படுகிறது. உங்கள் எலும்புகள் மற்றும் தசைகளையும், இதயத்தையும் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க கால்சியம் தேவை. இளவயதில் போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைக்காதவர்களுக்கு, அவர்களின் பிற்காலத்தில் எலும்புகள் மென்மையாகி, உடைந்துபோக (ஆஸ்டியோபொரோசிஸ்) வாய்ப்புகள் அதிகம். தினமும் 20 நிமிடங்கள் காலை அல்லது மாலை இளம் வெயிலில் நிற்பதன் மூலம் வைட்டமின் டி சத்தைப் பெறலாம். பைடிக் அமிலம் மற்றும் ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்த உணவுகள், நம் உடலில் கால்சியம் உறிஞ்சுதலைத் தடுக்கும் திறன் கொண்டவை என்பதால் அவற்றை எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஐசிஎம்ஆரின் பரிந்துரையின்படி, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை கொண்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லிகிராம் கால்சியம் தேவைப்படுகிறது, அதை உணவின் மூலமே பெற்றுவிட முடியும். அரிதாக, சிலருக்கு கால்சியம் சத்தை உட்கிரகிப்பதில் பிரச்னைகள் இருக்கக்கூடும். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட் பரிந்துரைக்கப்படும்.
வொர்க்அவுட் செய்யும் பெண்கள் பாலில் குறிப்பிட்ட சதவிகித கொழுப்பு இருப்பதால் அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் உணவில் தினசரி கொழுப்பு மற்றும் கலோரி அளவை அதிகரித்தால் மட்டுமே பால் உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும். மற்றபடி பால் மட்டுமே உங்கள் எடையை அதிகரிக்காது. விலங்குகளிடமிருந்து பெறப்படும் பாலில் கொழுப்பு அதிகமிருக்கும். அதுவும் ஒவ்வோர் உயிரினத்துக்கும் வேறுபடும். பால் எடுத்துக்கொள்வதுடன் சமச்சீர் உணவுகளைச் சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உடல் எடையை சரியாக நிர்வகிக்க முடியும். பெண்கள் தங்கள் அன்றாட உணவில் பால் சேர்த்துக் கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அது அளவைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்த கொழுப்புள்ள பாலை மட்டும் பயன்படுத்துங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-do-women-who-drink-milk-gain-weight
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக