Ad

சனி, 26 நவம்பர், 2022

``பெண்கள் உடை அணியாவிட்டாலும்..!" - மீண்டும் சர்சையைக் கிளப்பிய பாபா ராம்தேவ்; வலுக்கும் கண்டனங்கள்!

அவ்வப்போது சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசி பரவலாகப் பேசுபொருளாகும் பாபா ராம்தேவ், தற்போதும் மீண்டும் ஒரு சர்ச்சை பேச்சால் கண்டனங்களுக்குள்ளாகியிருக்கிறார். இதற்குமுன் பலமுறை நீதிமன்றங்களே பாபா ராம்தேவின் பேச்சுக்களை எச்சரித்திருக்கின்றன.

பாபா ராம்தேவ்

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாபா ராம்தேவ், ``பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள். சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள். என் பார்வையில் அவர்கள் எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருக்கிறார்கள்" என்று பெண்களைப் பற்றி சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் இதைப் பேசும்போது, மகாராஷ்டிராவின் துணை முதல் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோரும் மேடையில் இருந்தனர். இந்த நிலையில் பலரும் தற்போது பாபா ராம்தேவின் பேச்சுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மஹுவா மொய்த்ரா

திரிணாமுல் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா, 2011-ல் பாபா ராம்தேவ் பெண்ணின் உடையில் தப்பிச் செல்ல முயன்றபோது போலீஸாரிடம் சிக்கிய சம்பவத்தைக் குறிப்பிட்டு, ``ராம்லீலா மைதானத்திலிருந்து பதஞ்சலி பாபா ஏன் பெண்களின் உடையில் ஓடினார் என்பது இப்போது எனக்குத் தெரிகிறது. அவர் புடவைகள், சல்வார்கள் மற்றும் ... அவரின் மூளையில் ஒரு ஸ்ட்ராபிஸ்மஸ் (பார்வை ஒழுங்கற்றமைவு) தெளிவாக இருக்கிறது, அதுதான் அவரின் பார்வையை இப்படியாக்குகிறது" என விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார்.

அதேபோல் தேசிய மகளிர் ஆணையத்தின் ஸ்வாதி மாலிவால், `பெண்களைப் பற்றிய இத்தகைய இழிவான பேச்சுக்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்கவேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/now-i-know-why-he-mahua-moitras-jibe-after-ramdev-says-women-look-good-even-without-clothes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக